ஆடிப்பூரம் ஜகத்துதித்த ஆண்டாள் நாச்சியார் வாழியவே!

ஆடிப்பூரம் (07.08.2024)
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்https://tamil.timesnownews.com
Published on

ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷ்ணு சித்தர் என்னும் பக்தர் தனது வீட்டிலேயே ஒரு நந்தவனம் அமைத்து பூமாலைகள் கட்டி தினந்தோறும் அந்த ஊர் கோயிலுள்ள வடபத்ரசாயி பெருமாளுக்கு சமர்ப்பித்து வந்தார். திருமாலிடத்தில் மிகுந்த பக்தி கொண்ட பக்திமான் ஆதலால் பெரியாழ்வார் என்றும் இவர் அழைக்கப்பட்டார். பாண்டிய மன்னனால், 'பட்டர்பிரான்' என்னும் பட்டம் பெற்றவர்.

ஒரு ஆடி மாத பூர நட்சத்திரன்று அவர் துளசி தளங்களைப் பறித்துக் கொண்டிருந்தபோது அந்தத் செடியின் அடியில் ஒரு பச்சிளங்குழந்தை இருப்பதைப் பாரத்து திகைத்துப்போனார். பூமியிலிருந்து கிடைத்த குழந்தையாதலால் அவள் பூமி பிராட்டியின் அவதாரமே என்று நினைத்து அவர் குழந்தையை உச்சி முகர்ந்து ‘கோதை’ என்று பெயரிட்டு தனது மகளாகவே அவளை வளர்க்க ஆரம்பித்தார்.

இளம் வயதிலேயே சமயம், தமிழ் என்று தனக்குத் தெரிந்த அனைத்தையுமே விஷ்ணு சித்தர் கோதைக்குச் சொல்லிக்கொடுத்தார். தனது அன்பு மகள் கோதைக்கு அரங்கனைப் பற்றிய கதைகளை பெரியாழ்வார் தினமும் கூறுவது வழக்கம். அந்தக் கதைகளைக் கேட்டுக் கேட்டு அவள் கண்ணன் மேல் கொண்ட பக்தியும் காதலும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரத் தொடங்கியது. அழகுத் தமிழால் அரங்கப் பெருமானை ஆண்டதால், 'ஆண்டாள்' என்ற சிறப்புப் பெயரைப் பெற்றாள் கோதை.

அனுதினமும் அரங்கனுக்காக புத்தம் புதிய நறுமணம் கமழும் மலர்களால் ஆன பெரிய மாலைகளைத் தொடுத்து கோயிலில் கொண்டு போய் பெருமாளுக்கு சாத்தக் கொடுப்பதை தன்னுடைய முக்கியமான கைங்கரியமாகக் கொண்டிருந்தார் பெரியாழ்வார். பெரியாழ்வார் கட்டிவைத்த மாலைகளையே கண்கொட்டாமல் பார்த்து வந்த கோதைக்கு இந்த மாலையை சூடிக்கொள்ளும் அரங்கன் எப்படி கம்பீரமாக, அழகாகத் தோற்றமளிப்பான் என்கிற எண்ணம் வந்தது. தன்னையே அந்த அரங்கனாக பாவித்துக்கொண்டு பெருமாளுக்கு அணிவிப்பதற்காக பெரியாழ்வார் தொடுத்து வைத்திருந்த மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து அழகு பார்ப்பாள். பிறகு மிக்க மன மகிழ்வோடு திரும்பவும் பெரியாழ்வார் மாலைகளை வைக்கும் இடத்தில் கொண்டு போய் வைத்து விடுவாள். இதனால் கோதை சூட்டிக்கொண்டு அழகு பார்த்து விட்டு வைத்த மாலைகளே தினமும் கோயிலில் இறைவனுக்கு சூட்டப்பட்டன. இந்தக் காரியம் வெகு நாட்களாக நடந்து கொண்டிருந்தது.

ஒரு நாள் கோயில் அர்ச்சகர் பெரியாழ்வார் கொடுத்த பூமாலையை பெருமாளுக்கு அணிவிக்க எடுத்தபோது அதில் ஒரு நீண்ட முடி இருப்பதைக் கண்டவர், அதைத் தூக்கி எறிந்து விட்டு வேறு மாலை கொண்டு வரும்படி பெரியாழ்வாரிடம் கூறினார்.  பெரியாழ்வார் மனம் பதைத்துப் போனார். தான் வெகு நாட்களாக செய்து கொண்டிருக்கும் பகவத் சேவையில் இப்படி ஒரு பிழை நேர்ந்து விட்டதே என்று எண்ணி மனம் கலங்கினார்.

அடுத்த நாள் பெரியாழ்வார் மிகுந்த கவனத்துடன் மாலை தொடுத்து வைத்து விட்டு கோயிலுக்குக் கிளம்ப யத்தனித்தபோது ஆண்டாள் அந்த மாலையை அணிவதை பார்த்து விட்டார். மிகுந்த கோபத்துடன் ஆண்டாளைக் கண்டித்தார். இதை எப்படி இத்தனை நாட்கள் தான் கவனியாமல் விட்டு விட்டோம் என்றெல்லாம் எண்ணி மீளா துயரத்திற்கு ஆளானார். அன்றும் பெருமாளுக்கு மாலை கொடுக்க இயலவில்லை.

மிகுந்த மன வருத்தத்துடன் அன்று இரவு உறங்கப்போனார். கனவில் அரங்கன் வந்தான். "நீர் அளிக்கும் மாலைகளைக் காட்டிலும் உம் மகள் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலைகளே எனக்கு உவப்பானது!" என்று சொல்லி அரங்கன் அவரைத் தேற்றி கோதை நாச்சியாரின் பிறப்பின் பெருமையையும் அவருக்குப் புரிய வைத்தான்.

அடுத்த நாள் தான் தொடுத்த மாலைகளை ஆண்டாளிடம் கொடுத்து அணியச் சொன்னார். பின்னர் அதை வாங்கிக் கொண்டு அரங்கனுக்கு சாத்த கோயிலுக்குச் விரைந்தார். அரங்கனுக்குரிய மாலையை தான் சூடிக் கொடுத்த செயலால் ஆண்டாள், 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' என்று சிறப்பித்து அழைக்கப்பட்டாள். ஆண்டாளுக்கு மண வயது வந்தது. 'மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய்...' என்று உரைத்து தனது மணவாளன் அரங்கனே என்று தந்தைக்கு உணர்த்தினாள். மார்கழி மாதம் முப்பது நாளும் பாவை நோன்பு நோற்று திருப்பாவை பாடிச் சிறப்பித்த ஆண்டாளுக்கு தனது மணவாளனை என்று, எவ்வாறு அடைவோம் என்ற சிந்தனையே மனதை வாட்டிக் கொண்டிருந்தது.

இதையும் படியுங்கள்:
செரிமான பிரச்னைக்கு சிறந்த மருந்தாகும் ஜாதிக்காய்!
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

அவளது மன வாட்டத்தைப் போக்கும் விதமாக அரங்கனே அவள் கனவில் தோன்றி அவள் கல்யாணம் ஸ்ரீரங்கம் கோயிலில் அரங்கனுடன் எவ்வாறு சீரோடும் சிறப்போடும் நடக்கும் என்று உணர்த்துகிறார். அவ்வாறே ஒரு பங்குனி உத்திர திருநாளன்று சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் நாச்சியாருக்கும் அரங்கநாதப் பெருமாளுக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்க, ஆண்டாள் நேரே சன்னிதிக்குச் சென்று அரங்கனோடு கலந்து விடுகிறாள்.

'திருவாடிப் பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயர் அரங்கர்க்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருவல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே'

என்று ஆண்டாள் நாச்சியாரை வாழ்த்தி வணங்குகிறது வைணவ சமயம். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஸ்ரீ ஆண்டாள் ஒருவரே பெண் ஆழ்வார். எல்லா பெருமாள் கோயில்களிலும் ஆண்டாள் நாச்சியாருக்கு ஒரு சன்னிதி இருக்கும். இந்த சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் திருநட்சத்திரமான ஆடிப்பூரம் இந்த ஆண்டு நாளை (7.8.2024) புதன் கிழமை கொண்டாடப்பட உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com