

தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் மூன்றாவது மாதமான ஆனி, ஆன்மிகச் சிறப்புகளும், தேவர்களுக்குரிய வழிபாடுகளும் நிறைந்த ஒரு புண்ணிய மாதமாகும். அந்த வகையில் உத்திராயண புண்ணிய காலத்தின் கடைசி மாதமாக ஆனி மாதம் கருதப்படுகிறது. "ஆனி மூலம் அரசாளும்" என்ற பழமொழிக்கு ஏற்ப, ஆனி மாதத்தில் வரும் மூலம் நட்சத்திரம் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
ஆனி மாதத்தில் வரும் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அரசனைப்போல அனைத்து சௌபாக்கியங்களுடன் வாழ்வார்கள் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. கோடைக்காலத்தின் வெப்பம் தணிந்து இதமான சூழல் தொடங்கும் இந்த மாதத்தில், பல்வேறு முக்கிய பண்டிகைகளும் வழிபாடுகளும் கொண்டாடப் படுகின்றன.
ஆனித் திருமஞ்சனம்:
சிவபெருமானின் நடராஜர் வடிவத்திற்கு உத்திர நட்சத்திரத்தன்று நடத்தப்படும் சிறப்பு அபிஷேகமே ஆனித் திருமஞ்சனம் ஆகும். இது சிதம்பரம் நடராஜர் கோவிலில் மிகப்பிரசித்தம். நடராஜப் பெருமானுக்கு வருடத்தில் ஆறு முறை மட்டுமே அபிஷேகங்கள் நடைபெறும்.
அதில் மிக முக்கியமானதாக, ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெறும் ஆனித் திருமஞ்சனம் மிகவும் பிரசித்தம். இந்தாண்டு ஆனி திருமஞ்சனம் ஜூன் 22-ம்தேதி திங்கள் கிழமை கொண்டாடப்படுகிறது.
கூர்ம (ஆமை) அவதாரம் :
தேவர்களைக் காப்பாற்ற திருமால் கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்த வைபவம் ஆனி மாதத்தில் அனுசரிக்கப் படுகிறது. மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் இரண்டாவது அவதாரமாக கூர்ம அவதாரம் கருதப்படுகிறது. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, மந்தரா மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர். மலைக்குத் தாங்கும் சக்தி இல்லாததால் அது கடலுக்குள் மூழ்கத் தொடங்கியது. மத்தாகப் பயன்படுத்தப்பட்ட மந்தார மலை கடலில் மூழ்காமல் இருக்க, விஷ்ணு ஒரு பிரம்மாண்டமான ஆமை வடிவம் எடுத்து மலையைத் தன் முதுகில் தாங்கி நிலை நிறுத்தினார் என புராணங்கள் கூறுகின்றன. இந்த கூர்ம அவதாரம் ஆனி மாதத்தில் நிகழ்ந்ததாக கருதப்படுகிறது.
ஆஷாட நவராத்திரி :
இந்த சமயத்தில் வசந்த நவராத்திரி, ஆஷாட நவராத்தி, சாரதா நவராத்திரி, சியாமள நவராத்திரி என நான்கு விதமான நவராத்திரிகள் உள்ளன. இதில் ஆஷாட நவராத்திரி ஆனி மாதம் அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சக்தி வழிபாடாகும்.
ஆஷாட நவராத்திரி என்று அழைப்படும் ‘வராக நவராத்திரி’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாட்களில் வாராஹி தேவியை வழிபடுவது சகல நன்மைகளையும் தரும். ஆஷாட நவராத்திரிக்கு, தஞ்சாவூர் பெரியகோவில் போன்ற புகழ்பெற்ற இடங்களில் வாராஹி அம்மனுக்கு நவதானியம், பழங்கள், சந்தனம், வெண்ணெய் போன்ற பல்வேறு பொருட்களால் தினசரி சிறப்பு அலங்காரங்கள் மற்றும் ஹோமங்கள் செய்யப்படுகின்றன.
பகவதாஷ்டமி :
ஒவ்வொரு மாதம் பௌர்ணமிக்கு பிறகு வரும் எட்டாவது நாள் ‘தேய்பிறை அஷ்டமி’ எனப்படுகிறது. ஆனிமாதம் தேய்பிறை அஷ்டமிக்கு ‘பகவதாஷ்டமி’ என்ற பெயர் உண்டு. ஆன்மிக ரீதியாக இந்த நாள் மிகுந்த சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்நாளில் சிவபெருமானையும், சிவனின் அம்சமான காலபைரவரையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் எல்லா இன்னல்களும் நீங்கும் என்பது நம்பிக்கையாகும். அஷ்டமச்சனி, ஏழரைச்சனி தாக்கத்தில் இருப்பவர்கள் பைரவரை வழிபடுவது சிறந்த பரிகாரமாகும். ஆனி மாத பௌர்ணமி நாளில் சிவபெருமானுக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளைப் படைத்து வழிபடுவது சிறப்புக்குரியது.
நிர்ஜல ஏகாதசி :
ஆனி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசி ‘நிர்ஜல ஏகாதசி’ என்று போற்றப்படுகிறது. இந்நாளில் தண்ணீர், உணவு ஏதும் அருந்தாமல் முழுமையாக விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவது வழக்கம்.
இது வருடம் முழுவதும் வரும் ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனை தரும் என்பது ஐதீகம். இந்த விரதத்தை பீமன் கடைப்பிடித்ததால் ‘பீம ஏகாதசி’ என்றும் அழைக்கப்படுகிறது.
நாயன்மார்களின் அவதார தினம் :
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்திலும், திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் ஆனி மாதம் மூல நட்சத்திரத்திலும், நாதமுனீகள் ஆனி மாதம் அனுஷ நட்சத்திரத்திலும் அவதரித்ததாக கூறப்படுகிறது. திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் போன்ற நாயன்மார்களும் ஆனி மாதத்தில் அவதரித்தவர்கள்.
ஜேஷ்டாபிஷேகம் :
ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் வைணவ தலங்களில் ஜேஷ்டாபிஷேகம் கொண்டாடப்படுகிறது. இது ஒரு முக்கிய விசேஷ திருமஞ்சன வைபவமாகும். பெருமாள் கோவில்களில், மூலவரின் திருமேனியில் உள்ள களங்கத்தை நீக்க ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் திருமஞ்சன விழா ஆனி மாத கேட்டை நட்சத்திரத்தில் நடைபெறும்.
'ஜேஷ்டா' என்றால் பெரிய அல்லது மூத்த என்று பொருள். உற்சவ மூர்த்திகளுக்கு (விழாக்காலங்களில் ஊர்வலமாக எழுந்தருளும் சிலைகள்) தொடர்ந்து செய்யப்படும் அபிஷேகங்களால் தேய்மானம் ஏற்படாமல் பாதுகாக்கவும், பழுதுபார்ப்புகளை மேற்கொள்ளவும் இந்த விழா நடத்தப்படுகிறது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் மற்றும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் மூன்று நாட்கள் வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது.
கேட்டை நட்சத்திரத்திற்கு ‘ஜேஷ்டா நட்சத்திரம் என்ற பெயர் உண்டு. எனவே இந்நாளில் செய்யப்படும் அபிஷேகம் ‘ஜேஷ்டாபிஷேகம்’ என்று அழைக்கப் படுகிறது. ஜேஷ்டா நட்சத்திரத்திற்குரிய தெய்வமாக இந்திரம் கருதப்படுகிறார். எனவே இந்நாளில் நடைபெறும் ஜேஷ்டாபிஷேகத்தை தரிசனம் செய்தால் இந்திரனை போல வாழ்வு அமையும் தலைமை பதவி தேடி வரும். இந்தாண்டு திருப்பதியில் வருகிற 26-ம்தேதி (வெள்ளிக்கிழமை ) முதல் 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது.
குருபூஜை :
சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகரின் குருபூஜை, ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. சிவபெருமானின் திருவிளையாடல்களில் ஒன்றான, நரியைப் பரியாக்கிய நிகழ்வு ஆனி மூலம் நட்சத்திரத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்நாளில் மாணிக்கவாசகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கும். அன்றைய தினம் திருவாசகம், திருவெம்பாவை பாடல்கள் ஓதப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
மாங்கனித் திருவிழா :
காரைக்கால் அம்மையார் வரலாற்றோடு தொடர்புடைய புகழ்பெற்ற மாங்கனித் திருவிழா இந்த ஆனி மாதத்தில் தான் கொண்டாடப்படுகிறது. ஆனி மாதம் பௌர்ணமி நாளன்று, புதுச்சேரி காரைக்காலில் உள்ள சைலாசநாதர் கோவிலில் புகழ்பெற்ற மாங்கனி திருவிழா கொண்டாடப் படுகிறது. அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இத்திருவிழா நடத்தப்படுகிறது.
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பிச்சாண்டவர் (சிவபெருமான்) வீதி உலா வரும்போது பக்தர்கள் இறைவன் மீது மாம்பழத்தை வீசி வழிபடுவார்கள்.