அளவற்ற புண்ணியம் தரும் அதிதி பூஜை!

அளவற்ற புண்ணியம் தரும் அதிதி பூஜை!
Published on

மக்காகவும் நமது சந்ததிகளுக்கும் வாழ்வில் புண்ணியம் சேர்த்து நன்மைகள் பெற நாம் எத்தனையோ செயல்களைச்  செய்து வருகிறோம். அன்னதானம் முதற்கொண்டு உடை தானம், பூஜை புனஸ்காரங்கள் சேவைகள் என அனைத்தும் நாம் செல்லும் வழிக்கு தீமைகள் வராமல் காத்து புண்ணியம்  சேர்க்கிறது என்கின்றனர் பெரியவர்கள். அந்த வகையில் நமக்கு புண்ணியத்தைத் தந்து வாழும்போதே அளவற்ற நன்மைகளைத் தரும் ஒரு பூஜைதான் அதிதி பூஜை என்பதாகும்.

அதிதி பூஜை பற்றி சூத கோஸ்வாமி இப்படிக் கூறியுள்ளார், “மாமுனிவர்களே, உலகில் அனைத்து பூஜைகளிலும் சிறந்தது அதிதி பூஜை. அளவற்ற நற்பலன்களைத் தரவல்லது. தன்னிடமுள்ளவற்றால், தம்மைத் தேடிவரும் அதிதியை திருப்திப்படுத்துபவர்கள் உத்தம லோகங்களை அடைவார்கள். தன் வீட்டுக்கு வந்தவர்களை நாராயண சொரூபமாக நினைத்து பூஜிப்பவர்கள் நரகங்களை வென்று, திவ்ய வைகுண்டத்துக்குச் செல்வார்கள்.“

அதிதி பூஜை என்பது, பசித்துக் களைத்து வரும் சன்னியாசிகள், பிரம்மச்சாரிகள் மற்றும் வறுமையில் உள்ளவர்கள் பசியைப் போக்கும்படி உணவளித்து உபசரிப்பது ஆகும். கையேந்தி வரும் சன்னியாசிகளுக்கும் பிரம்மச்சாரிகளுக்கும் சமைத்த அன்னமாகவும் குடும்பஸ்தர்களுக்கு அரிசியாகவும் அளிக்க  வேண்டும். இதில் ஜாதி, மத, இன வேறுபாடுகள் பார்க்கக்கூடாது.

மனிதனின் பசியைப் போக்கக் கிடைத்த புண்ணிய வாய்ப்பாக இதைக் கருதி ஒவ்வொருவரும் தம்மால் முடிந்த அதிதி பூஜையை செய்ய வேண்டும். அதிதி என்றால் விருந்தினர் என்றும் பொருள். வீட்டுக்கு வரும் விருந்தினரை மனதார உபசரிப்பதைப் போல், நம்மை நாடி வந்து பசியைப் போக்கச் சொல்லி இறைஞ்சுவோரையும் விருந்தினராக மனதில் நினைத்து உள்ளன்புடன் உபசரிப்பதே அதிதி பூஜை.

தம் வீட்டுக்கு வருவோரை எதிர்கொண்டு அழைப்பது, இனிய சொற்களால் வரவேற்பது, களைப்புத் தீர தண்ணீர் தருவது, கால்களைக் கழுவ நீரூற்றுவது,  களைத்த கால்களுக்கு தைலம் தருவது, ஆசனம் தந்து அமர வைப்பது, பசியாற உணவிடுவது, களைப்பாற படுக்கை தருவது ஆகியவை அதிதி பூஜையில் அடங்கும். அதிதி பூஜையினால் எந்தெந்த தெய்வங்களை திருப்தி படுத்துகிறோம் தெரியுமா?  எதிர்கொண்டு அழைப்பதால் சூரியனும், நல்ல வார்த்தைகளால் சரஸ்வதியும், நல்வரவு சொல்வதால் அக்னியும், ஆசனம் தருவதால் இந்திரனும், கால்களை அலம்புவதால் பித்ருக்களும், உணவால் பிரஜாபதியும், படுக்கை தருவதால் பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஸ்வரர்களும் ப்ரீத்தி அடைகிறார்கள் என்கிறது சாஸ்திரம்.

இவற்றைச் செய்யும் வசதி நமக்கு இல்லையே என ஏங்குபவர்கள் இல்லை எனக் கையேந்தி வருபவர்களை புறந்தள்ளாமல் தங்களால் முடிந்ததை செய்யும்போது தெய்வங்கள் மட்டுமின்றி, நமது முன்னோர்களும் நம்மை வாழ்த்தி அளவற்ற நன்மைகளை வழங்குவதாக ஐதீகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com