

சிவபெருமானுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிய தினம் அன்னாபிஷேக நாள். ஈசன் பிச்சாடனராக வந்தபொழுது, உலகுக்கே படி அளக்கும் ஈசனுக்கு, அன்னபூரணி தேவி அன்னமிட்டு படியளந்த நாள் இந்த ஐப்பசி பௌர்ணமி திருநாள். இந்நாளில் சிவபெருமானை அன்னாபிஷேகக் கோலத்தில் தரிசிப்பது மிகவும் விசேஷம்.
1. பிரம்மஹத்தி தோஷம்: ஒரு காலத்தில் ஈசனை போலவே பிரம்மனுக்கும் ஐந்து தலை இருந்ததால் தானும் சிவனுக்கு நிகரானவர் என்ற அகந்தையில் பிரம்மன் இருக்க, பிரம்மனின் அகந்தையை அடக்குவதற்கு சிவபெருமான் பிரம்மனின் ஐந்து தலைகளில் ஓன்றைக் கொய்து நான்முகனாக ஆக்கினார். துண்டிக்கப்பட்ட பிரம்ம கபாலம் சிவபெருமானின் கையில் ஒட்டிக்கொண்டு பிரம்மஹத்தி தோஷத்தை ஏற்படுத்தியது. பிரம்மனால் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நீக்க பிரம்மனிடமே உபாயம் கேட்ட ஈசனிடம், தனக்கு போதும் என்ற அளவிற்கு உணவு கிடைக்கும்பொழுது தானே விட்டு விலகி விடுவதாகக் கூறியது. ஈசன், கபாலீஸ்வரர் (கபாலம் ஏந்தியவர்) என்னும் திருநாமத்தோடு பிச்சாடனராக உருமாறி பூலோகம் வந்தார். காசியில் அன்னபூரணி ஈசனுக்கு அன்னமிட, ஈசனின் கையில் ஒட்டிக்கொண்டிருந்த பிரம்மனின் கபாலம் கீழே விழுந்து பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது. அப்படி அன்னை அன்னபூரணி சிவபெருமானுக்கு அன்னமிட்ட நாள்தான் ஐப்பசி மாதப் பௌர்ணமியாகும்.
2. சந்திரனின் சாபம் நீங்கிய நாள்: ஐப்பசி பௌர்ணமி அன்று சந்திரன் தன்னுடைய சாபம் நீங்கி முழு பொலிவுடன் 16 கலைகளும் நிரம்பப் பெற்று உதித்து வருவார். சந்திரன் பூமிக்கு மிக அருகில் தோன்றும் நாள் இந்த ஐப்பசி பௌர்ணமி. நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால் அன்று சிறப்பு வழிபாடாக பிறைசூடிய பெருமானான ஈசனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
3. சோறு கண்ட இடம் சொர்க்கம்: இதன் உண்மையான பொருள் என்னவென்றால், உலகத்திற்கே படியளக்கும் ஈசனை அன்னாபிஷேகக் கோலத்தில் காண சொர்க்கம் கிடைக்கும் என்பதாகும். ஐப்பசி மாத அன்னாபிஷேகத்தின்பொழுது ஈசனுக்கு சாத்தி இருக்கும் ஒவ்வொரு சோற்றுப் பருக்கையிலும் ஈசன் இருப்பதாக ஐதீகம். அன்னாபிஷேகத்தைக் காண பல ஜன்ம பாவங்கள் தீரும் என்றும், அன்னாபிஷேகத்தை தரிசிப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இப்பழமொழி தவறான பொருளில் உபயோகப்படுத்தப்படுகிறது. எந்த வேலையும் செய்யாமல் ஓசிச் சோறு உண்டு வெட்டியாக காலம் கழிப்பவரை குறித்து சொல்வது போல் பழக்கத்தில் உள்ளது.
4. தஞ்சை பெரிய கோயில்: இங்குள்ள சிவலிங்கம்தான் உலகிலேயே மிகப்பெரிய லிங்கமாகும். ஐப்பசி பௌர்ணமி அன்று 100 மூட்டை அரிசியை சமைத்து சோறாக்கி இத்தல சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வது காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
5. தில்லையில் தினம் தினம் அன்னாபிஷேகம்: தில்லையிலே தினமும் காலை 11 மணி அளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். அந்த அன்னத்தை பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்குவார்கள். அதனால்தான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்து பாடியுள்ளார். அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை உண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலை இல்லை.
6. பிரசாதம் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பலன்கள்: அன்னாபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தின் ஒரு பகுதி நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. மற்ற பகுதிகளை தயிர் கலந்து பக்தர்களுக்கு பிரசாதமாகத் தரப்படுகிறது. வியாபாரத்தில் நஷ்டம் அடைந்தவர்களும், வியாபாரத்தில் பிரச்னை உள்ளவர்களும் அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை உண்டால் வியாபாரம் செழிக்கும் என்றும், குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்றும், குழந்தை பாக்கியம் வேண்டி இருப்பவர்கள் அன்னாபிஷேக பிரசாதத்தை சாப்பிட, மழலைப்பேறு கிட்டும் என்றும், உணவுக்கு என்றும் தட்டுப்பாடு வராது என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.