ஐப்பசி வளர்பிறை பிரதோஷம்: அண்ணாமலையாருக்கு சிறப்பு பூஜை!

ஐப்பசி வளர்பிறை பிரதோஷம்: அண்ணாமலையாருக்கு சிறப்பு பூஜை!

ப்பசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்தியம் பெருமானுக்கும் சுவாமிக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

உலகப் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதுவும் குறிப்பாக அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷ நாட்களில் பொதுமக்கள் கிரிவலம் செல்ல அலைமோதுவது வழக்கமாகி விட்டது. இந்த நிலையில், நேற்று ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி திருவண்ணாமலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்தியம் பெருமானுக்கு ஐப்பசி மாத பிரதோஷ தினத்தையொட்டி, அரிசி மாவு, மஞ்சள் தூள் அபிஷேகத் தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் 1000 லிட்டர் பால் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து நந்தியம்பெருமானுக்கு அருகம்புல், வில்வ இலை, சாமந்திப்பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய பூக்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சங்கொலி முழங்க பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது.

பிரதோஷ தினத்தின்போது நந்தியம்பெருமானை வழிபட்டால் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கைகூடும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். இந்த பிரதோஷ வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில், வார இறுதி நாட்கள் மற்றும் திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு நாளை 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஐப்பசி மாத பெளர்ணமி நாளை (சனிக்கிழமை) அதிகாலை 4.01 மணிக்கு தொடங்கி, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.27 மணிக்கு நிறைவடையும் என்பதால் பக்தர்கள் இந்த நேரத்தில் கிரிவலம் செல்வார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com