அட்சய திரிதியை – தெரிந்ததும் தெரியாததும்!

Atchaya Thiruthiyai
Atchaya Thiruthiyai

சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய வளர்பிறை திரிதியை திதி, 'அட்சய திரிதியை' என கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால் வளர்தல். ஆகவே, மூன்றாம் பிறை நாளான, வளர்பிறை திரிதியை திதியில், எந்த சுப காரியம் செய்தாலும் அது, வளர்ச்சியடையும் என்றே, அட்சய திரிதியை தினம் கொண்டாடப்படுகிறது. இத்திருநாளில் நடைபெற்ற சில முக்கியமான நிகழ்வுகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. பரசுராமர் அவதார தினம்

பரசுராமர்
பரசுராமர்

கவான் மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரம் பரசுராமர் ஆவார். இவரது அவதாரம் நிகழ்ந்தது ஒரு அட்சய திரிதியை தினம் என்று கூறப்படுகிறது. இவரது காலம் திரேத யுகம் ஆகும். இவர் ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக அவதரித்தார். பரசு என்றால் கோடரி என்று பொருள். கடுந்தவம் செய்து சிவபெருமானிடம் இருந்து ஒரு கோடரியைப் பெற்றதால் இவர் பரசுராமர் என்று அழைக்கப்படுகிறார். ‘தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை’ என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம் இது. இன்றும் பரசுராமர் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம்.

2. ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் இயற்றிய நாள்

கனகதாரா ஸ்தோத்திரம்
கனகதாரா ஸ்தோத்திரம்

திசங்கரர் பிட்சை வேண்டி ஏழை பெண் ஒருத்தியின் வீட்டின் முன்பு நின்று, ‘பிட்சாம் தேஹி’ என்று கூறி அழைக்கிறார். அந்த வீட்டிலிருந்த பெண் தன்னிடம் கொடுக்க ஒன்றுமில்லாத நிலையில், தம்மிடம் இருந்த ஒரு நெல்லிக்கனியை ஆதிசங்கரரின் பிட்சை தட்டில் இட, அந்த ஏழைப் பெண்ணின் வறுமையை போக்க எண்ணி, அம்பிகையை போற்றி கனகதாரா ஸ்தோத்திரத்தை பாடுகிறார். உடனே அந்த ஏழைப் பெண்ணின் வீட்டில் பொன்மழை பொழிந்தது. ஏழை பெண் ஒருத்தியின் வறுமையை போக்கி இந்த நிகழ்வு நடைபெற்றது ஒரு அட்சய திரிதியை தினம் ஆகும்.

3. திரேதா யுகம் தொடங்கிய தினம்

திரேதா யுகம்
திரேதா யுகம்

திரேதா யுகம் நான்கு யுகங்களில் இரண்டாவதாகும். இந்த யுகம் ஆன்மிகத்திலும் மனித குலத்தின் சக்தியிலும் சரிவைக் கண்டது. மக்கள் பொருள் உடைமைகளில் கவனம் செலுத்தினர். இதனால் உலகில் நோய்கள் அதிகரித்தன. மக்கள் பாரபட்சமான நடைமுறைகளைப் பின்பற்றி பாவங்களைச் செய்யத் தொடங்கியதால் உலகில் போர்கள் அதிகரித்தன. இந்த யுகத்தின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று இலங்கையின் அசுர மன்னன் ராவணனின் சக்திகளின் விண்மீன் எழுச்சி ஆகும். ராவணனை வென்று ஒழுக்கத்தை நிலைநாட்டும் நோக்கத்துடன் படைக்கப்பட்டவர் ராமர். அவர் உண்மை மற்றும் ஒழுக்கத்தின் உருவகமாக இருந்தார். திரேதா யுகத்தில் வகுப்புகள் மற்றும் சாதிகள் பிரிவினைகள் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அழகு, புத்திசாலித்தனம், வலிமை மற்றும் ஆரோக்கியம் ஆகியவை இந்த யுகத்தின் அடையாளங்களாக இருந்தன.

4. சூரியனிடமிருந்து பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்ற தினம்

சூரியன் தந்த அட்சய பாத்திரம்
சூரியன் தந்த அட்சய பாத்திரம்

னவாசம் மேற்கொண்ட பாண்டவர்கள் உணவுக்கு பெரும் கஷ்டங்களை சந்தித்தனர். இந்த சமயத்தில் சோதனையாக துர்வாச முனிவரும் அவரது சீடர்களும் பாண்டவர்களை சந்தித்து, உணவு கேட்டு யுதிஷ்டிரரின் விருந்தோம்பலை சோதித்தனர். அப்போது ஸ்ரீ கிருஷ்ணர், சூரிய பகவானிடம் உதவி பெறுமாறு யுதிஷ்டிரருக்கு அறிவுறுத்தினார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஆலோசனைப்படி யுதிஷ்டிரர் சூரியனை மனதார வேண்டினார். இதில் மகிழ்ந்த சூரிய பகவான் அவருக்கு ஒரு அசாதாரண அட்சய பாத்திரத்தை வழங்கினார். அது தினமும் ஒருமுறை வரம்பற்ற உணவை வழங்கக்கூடிய ஒரு பாத்திரம். பாண்டவர்கள் இந்த அட்சய பாத்திரத்தைப் பெற்றது ஒரு அட்சய திரிதியை தினமாகும்.

5. கங்கை நதி பூமியைத் தொட்ட தினம்

பகீரத பிரயத்தனம்
பகீரத பிரயத்தனம்

‘பகீரதப் பிரயத்தனம்’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். தனது முன்னோர்கள் 60,000 பேர் நரகத்தில் உழல்வதைத் தாங்கிக்கொள்ள முடியாத திலீபனின் மகன் பகீரதன், குலகுரு வசிஷ்டரின் ஆலோசனைப்படி பிரம்மாவை நோக்கி தவமியற்றினான். அவனது தவத்தை மெச்சிய பிரம்மா, ஈசனின் ஜடா முடியில் வாசம் செய்யும் கங்கா தேவி அந்த 60,000 பேரின் சாம்பலின் மீது பாய்ந்தால் அவர்கள் அனைவரும் மோட்சம் பெறுவர் என்று கூறுகிறார். அதன்படி சிவனை நோக்கி தவமிருந்த பகீரதனின் பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு ஈசனின் ஜடா முடியிலிருந்து பூமிக்கு இறங்கி வந்து பகீரதனின் முன்னோர்கள் 60,000 பேர் சாம்பலின் மீது பாய்ந்து அவர்களுக்கு மோட்சம் பெற்று தருகிறாள். இப்படி கங்கா தேவி பூமிக்கு இறங்கி வந்த நாள் ஒரு அட்சய திரிதியை தினம் ஆகும்.

6. குபேரன் இழந்த செல்வங்களை மீட்ட நாள்

குபேரன்
குபேரன்

ழகாபுரியின் மன்னன் ஸ்ரீ குபேர பகவான். ஒரு சமயம் இவன் செய்த பாவத்தின் காரணமாக தனது அனைத்து செல்வங்களையும் இழந்து தவித்தான். இழந்த செல்வங்களை திரும்பப் பெற வேண்டி குபேரன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து வழிபட்டான். அவனது வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான், குபேரனை வடதிசைக்கு அதிபதியாக்கி சங்கநிதி, பதுமநிதி, கச்சநிதி, கற்பநிதி, நந்தநிதி, நீலநிதி, மகாநிதி, முகுந்த நிதி, மகாபத்மநிதி என்னும் நவநிதிகளையும் அளித்து அழகாபுரி என்னும் குபேரபுரியை ஆளும்படி அருள்பாலித்தார். இப்படி குபேரன் தம் இழந்த செல்வங்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றது ஒரு அட்சய திரிதியை தினம் என்று கூறப்படுகிறது.

7. ஸ்ரீ கிருஷ்ண பகவானை குசேலர் சந்தித்த தினம்

ஸ்ரீ கிருஷ்ணர் குசேலர்
ஸ்ரீ கிருஷ்ணர் குசேலர்

ஸ்ரீ கிருஷ்ணரும் குசேலரும் பால்ய நண்பர்கள். கால ஓட்டத்தில் ஸ்ரீகிருஷ்ணன் மன்னன் ஆனார். குசேலர் வறுமையில் வாடினார். ஒரு சமயம் ஸ்ரீ கிருஷ்ணரைக் காணச் சென்ற குசேலர் வெறுங்கையுடன் செல்லாமல், வீட்டில் இருந்த ஒரு பிடி அரிசியை அவலாக்கி, அதனை சுத்தமான துணியில் கட்டிக்கொண்டு சென்றார். ஆர்வமாய் கிருஷ்ணர் அதனைப் பெற்றுக்கொண்டு, அவலை வாயில் இடும்போது ‘அக்ஷய’ என்றார். வறுமையில் வாடிய குசேலரின் வீட்டில் செல்வம் பெருகியது. நண்பனிடம் விடைபெற்று, தனது இல்லம் திரும்பிய குசேலர், அங்கே தனது இல்லத்தைக் காணாது தேடினார். அது மாளிகையாக மாறிவிட்டிருந்தது. செல்வச் செழிப்புடன் இருந்த மனைவியைக் கண்டு குசேலர் வியந்தார். இந்த வளங்கள் யாவும் ஸ்ரீ கிருஷ்ணர் கூறிய ‘அக்ஷய’ என்ற சொல்லால் கிடைத்தது. இந்த நிகழ்வு நிகழ்ந்து ஒரு அட்சய திரிதியை தினம் என்று புராணம் கூறுகிறது.

8. வியாசர் மகாபாரம் இயற்ற ஆரம்பித்த தினம்

வியாசர்
வியாசர்

காபாரதம் பாரதத் திருநாட்டின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். வியாச முனிவர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதத்தின் வரலாறு கூறுகிறது. இந்திய துணைக்கண்டத்தைப் பொறுத்தவரை இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்றாகும். அறம், பொருள், இன்பம், வீடு பேறு என்னும் மனிதனுடைய நால்வகை குணங்களையும் பற்றி இது விளக்குகிறது. மகாபாரதம் 74,000க்கும் மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்டு விளங்குகிறது. இதுவே உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பாண்டு, திருதராட்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே நடைபெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே மகாபாரதக் காப்பியமாகும்.

9. அன்னபூரணி தேவி அவதரித்த நாள்

அன்னபூரணி தேவி
அன்னபூரணி தேவி

ணவம் கொண்ட பிரம்மனின் சிரசைக் கொய்த சிவபெருமானை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. பிரம்ம கபாலமும் ஈசனின் கையிலேயே ஒட்டிக்கொண்டது. மேலும், சிவன் தீராத பசிப்பிணிக்கும் ஆளானார். கபாலம் நிறைந்தால்தான் அவருக்கு விமோசனம் கிடைக்கும். எனினும் அது பிரம்ம கபாலம் என்பதால் எவ்வளவு பிக்ஷை இட்டாலும் நிறையவில்லை. நிறைவில் அன்னபூரணி தேவி சிவபெருமானுக்கு பிக்ஷையிட்டாள். கபாலமும் நிறைந்தது; ஈசனின் வயிறும் நிறைந்தது. அது மட்டுமின்றி பிரம்ம கபாலமும் சிவனின் கையைவிட்டு அகன்றது. இப்படி, சிவபெருமானுக்கு அன்னபூரணி பிக்ஷையிட்ட திருநாள் ஒரு அட்சய திரிதியை என்று கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com