‘அம்பாள் வேறு மகாபெரியவர் வேறு கிடையாதே!’

‘அம்பாள் வேறு மகாபெரியவர் வேறு கிடையாதே!’
Published on

காஞ்சி ஸ்ரீ மகாபெரியவரிடம் மிகவும் பக்தி கொண்டவர்கள் நடராஜ சாஸ்த்ரிகளும் அவரது குடும்பமும். தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷியம்மன் கோயில் டிரஸ்டியாக நடராஜ சாஸ்த்ரிகள் பணியாற்றிக்கொண்டிருந்த சமயம் அது. அப்போது மகாபெரியவர் தஞ்சாவூருக்கு முகாமிட வந்திருந்தார். தஞ்சாவூருக்கு வருகை தரும் மகாபெரியவருக்கு ஒரு அழகான ரோஜாப் பூ மாலையை அணிவித்து அழகு பார்க்க வேண்டும் என்று நடராஜ சாஸ்த்ரிகளுக்கு ஆசை. அதற்காக மகாபெரியவரின் தஞ்சை முகாமுக்கு ஒரு நாள் முன்பே பூக்கடையில் ஆர்டர் செய்து, அழகான குண்டு குண்டு பன்னீர் ரோஜாக்களைக் கொண்டு ஒரு பெரிய மாலை கட்டச் சொல்லி இருந்தார்.

மறுநாள் மகாபெரியவரை வரவேற்று தரிசனம் செய்ய ரோஜாபூ மாலையோடு சென்றார். ஆனால், இவர் அங்கு போய் சேர்வதற்குள் மகாபெரியவர் வந்து சேர்ந்து, பக்தர்கள் தரிசனமும் முடிந்து உள்ளே போய்விட்டார். நடராஜ சாஸ்த்ரிகளுக்கோ மிகப்பெரிய ஏமாற்றம், வருத்தம். மாலையோடு வீடு திரும்பினார். இவரது வருத்தத்தைக் கண்ட அவரது மனைவி, ‘அம்பாள் வேறு மகாபெரியவர் வேறு கிடையாதுதானே... இரண்டும் ஒன்றுதான் எனும்போது இந்த மாலையை அம்பாளுக்கே போட்டுடுங்களேன்’ என்றாள்.

அதைக் கேட்ட நடராஜ சாஸ்த்ரிகள், ‘அம்பாளும், பெரியவாளும் வேற வேற இல்லேதான். ஆனாலும், இந்த மாலையை நாம ப்ரத்யக்ஷமா பார்க்கற பெரியவாளுக்குதான் போடணும் அப்படிங்கறது என்னோட ஆசை!’ என்று சொல்லிவிட்டு, அந்த மாலையை பூஜை அறையில் இருந்த ஒரு ஆணியில் தொங்கவிட்டார்.

மறு நாள் காலை விடிந்தும் விடியாமலும் இருந்த பொழுதில் மகாபெரியவர் தஞ்சை, மேலவீதி சங்கர மடத்திலிருந்து ஸ்ரீனிவாசபுரத்திலிருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு தரிசனம் பண்ண வருவதாக செய்தி பரவி, அந்தத் தெருவே திமிலோகப்பட்டது. நடராஜ சாஸ்த்ரிகள் வீட்டிலும் ஒரே பரபரப்பு! ‘மகாபெரியவா வரா! மகாபெரியவா வரா! தர்சனம் பண்ணிக்கோங்கோ!’ என்று ஒருவர் உச்சஸ்தாயியில் தெருவில் சொல்லிக்கொண்டே போனார். அந்தத் தெருவின் வீடுகளுக்குள் இருந்தவர்கள் நண்டு சிண்டுவிலிருந்து தாத்தா, பாட்டி வரை அவசர அவசரமாக பூர்ண கும்பம், குத்து விளக்கு, புஷ்பம் சஹிதமாக அடிச்சு பிடிச்சு வாசலுக்கு ஓடி வந்தனர்! மகாபெரியவாளுடைய வேகம் அப்படி இருக்கும்! அவர் என்னவோ சாதாரணமாக நடப்பது போல்தான் இருக்கும். ஆனால், உடன் வரும் அனைத்து மனிதர்களும் குதிகால் பிடரியில் அடிக்க அவருடன் ஓடி வரவேண்டியிருக்கும். அப்படி ஒரு வேகம் மகா பெரியவரிடம் இருக்கும். அந்த வேகம், உண்மையான மஹான்களுக்கே உரித்தான லக்ஷணம்!

கோயிலுக்கு வந்த மகாபெரியவர், பிள்ளையாரை தரிசனம் பண்ணிவிட்டு யாரும் சற்றும் எதிர்பார்க்காத விதமாக நேராக நடராஜ சாஸ்த்ரிகள் வீட்டுக்குள் நுழைந்தார். ஆச்சரியத்தில் உறைந்துபோய் இருந்த நடராஜ சாஸ்த்ரிகள் குடும்பத்துக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. வீட்டுக்குள் நுழைந்த மகாபெரியவர், பூஜை அறைக்குள் சென்றார். அங்கே முன்தினம் ஆணியில் மாட்டப்பட்டிருந்த ரோஜாப் பூ மாலையை தானே எடுத்து தமக்குச் சூட்டிக் கொண்டார்!

இதைக் கண்ட நடராஜ சாஸ்த்ரிகள் குடும்பத்தாரின் கண்களில் கண்ணீர் பெருகி, ஆச்சரியத்தில் மூழ்கி நின்றனர். சந்தோஷத்தில் அவர்களது இதயம் விம்மிக் கொண்டிருந்தது. அந்த வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் மகாபெரியவரின் திருப்பாதத்தில் விழுந்து நமஸ்கரித்தவுடன், விறுவிறுவென்று வீட்டுக்கு வெளியே வந்தார். வெளியே வந்தவர், சற்று நேரம் நின்று திரும்பிப் பார்த்து, ‘எங்கே வெள்ளிக்கிண்ணம்’ என்று நடராஜ சாஸ்த்ரிகளிடம் கேட்டார்.

அதைக்கேட்ட சாஸ்த்ரிகள், ஆச்சரியத்தில் ஆடிப் போய்விட்டார். நேற்று தனது மனைவியிடம், ‘மகாபெரியவரைச் சந்திக்கும்போது ரோஜாப் பூ மாலையைப் போட்டு, கூடவே ஒரு புது வெள்ளிக்கிண்ணத்தையும் கொடுக்க வேண்டும்’ என்று சொல்லி, ஒரு புது வெள்ளிக் கிண்ணத்தையும் வாங்கி வைத்திருந்தார். ‘நேற்று என் மனைவிடம் பேசியதை, இவர் பக்கத்தில் இருந்து கேட்டதைப் போல் அல்லவா கேட்கிறார்!’ என்று நினைத்துப் பூரித்து, உடனே வீட்டுக்குள்ளே ஓடிப்போய் பெட்டியில் வைத்திருந்த வெள்ளிக்கிண்ணத்தைக் கொண்டு வந்து மகாபெரியவாளிடம் சமர்ப்பித்தார். மகாபெரியவர் சர்வ வ்யாபி! என்பதை அன்று அங்கிருந்த அனைவரும் கண்கூடாகக் கண்டார்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com