செம்பருத்தி மாலை அணிவித்து வணங்கினால் செல்வ வளம் தரும் அம்பிகை!

செம்பருத்தி மாலை அணிவித்து வணங்கினால் செல்வ வளம் தரும் அம்பிகை!
Published on

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகிலுள்ள உமையாள்புரம் (கடியாபட்டி) திருத்தலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு மங்களாம்பிகை சமேத உமாபதீஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் மூலவர் ஸ்ரீஉமாபதீஸ்வரர் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். தனிச் சன்னிதியில் அன்னை மங்களாம்பிகை மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறாள்.

உள்ளன்போடு தம்மை வழிபடும் பக்தர்களுக்கு திவ்ய மங்கலத்தை அருளும்  மாட்சிமையால் இத்தலத்து அம்பிகைக்கு மங்களநாயகி என்று பெயர் ஏற்பட்டது. அம்பாளுக்கு வெள்ளிக்கிழமைகளில் 108 செம்பருத்தி பூக்களை மாலையாகக் கட்டி அணிவிப்பவருடைய குலம் வாழையபடி வாழையாய் வம்ச விருத்தி அடையும். செம்பருத்திப் பூ கிரீடம் செய்து தம் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மங்களாம்பிகைக்கு அணிவிப்பவர்கள் குபேரனைப் போன்று செல்வந்தன் ஆகி விடுவர் என்று பவிஷ்யோத்ரா பிரும்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய உமாபதீஸ்வரர் கோயில் சுவாமி, அம்பாளுக்கு 11 வாரம் மாலை சாத்தி வழிபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கிறது. உமாபதீஸ்வரர் தரிசனத்தால் பெரும் பாவங்கள் அகலும்.

அக்காலத்தில் திருமயத்தைச் சுற்றியிருந்த கிராம மக்கள் திருமயத்துக்கு வர மாட்டு வண்டிகளையே பயன்படுத்தினர். அவர்கள் வரும் வழியில் பாம்பாறு குறுக்கிட்டது. சில சமயம் வண்டிகள், ஆற்று சேற்றில் சிக்கிக்கொண்டு செல்ல முடியாமல் நின்றுவிடும். இதனைப் பயன்படுத்திக் கொண்டு ஈச்சங்காட்டில் மறைந்திருக்கும் திருடர்கள், பெண்களிடமிருந்து நகைகளைக் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்த தகவல் திவான் பகதூர் முத்தையா செட்டியாருக்குச் சென்றது. பாம்பாற்றின் குறுக்கே தனது சொந்த செலவில் பாலம் ஒன்றை கட்டி, வண்டிகள் தடையின்றி செல்ல ஏற்பாடு செய்து கொடுத்தார்.

மேலும், இப்பகுதியில் மக்கள் நடமாட்டத்தை அதிகரிக்க உமையாள்புரம் என்ற ஊரை ஏற்படுத்தினார். அந்த ஊரில் ஒரு குளத்தை  வெட்டித் தந்ததுடன், விநாயகர் கோயில் ஒன்றைக் கட்டவும் முடிவு செய்தார். அப்போது அந்த ஊருக்கு காஞ்சிப்பெரியவர் விஜயம் செய்தார். விஷயத்தை அறிந்த மகாபெரியவர், திவான் பகதூர் முத்தையா செட்டியாரிடம், இந்தத் தலத்தில் சிவாலயம் ஒன்றைக் கட்டி, அதில் விநாயகரையும் பிரதிஷ்டை செய்யும்படி அறிவுறுத்தினார்.

அதன்படி, இத்தலத்தில் அருள்மிகு மங்களாம்பிகை சமேத ஸ்ரீ உமாபதீஸ்வரர் கோயிலில் விநாயகர் சன்னிதியோடு திருக்கோயில் அமைந்து வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.  செல்வம் பெருக, கல்வியில் சிறந்து விளங்க, மகப்பேறு உண்டாக, முக்தி நிலையாகிய பிறப்பற்ற பேரின்ப வாழ்வு கைகூட, துன்பங்கள் யாவும் நீங்கி நினைத்த செயல்கள் கைகூட, வறுமை நீங்கி செல்வ விருத்தி உண்டாக இங்கு வழிபட்டுச் செல்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com