ஊசி முனையில் அம்மன் (ஆடி) தபஸ்!

ஊசி முனையில் அம்மன் (ஆடி) தபஸ்!
Published on

சி முனையில் தபஸ்ஸா? யார்? எதற்காக இருந்தார்கள்? இதன் பின்னணி என்ன? சங்கன் – பதுமன் எனும் இரண்டு நாகர்கள் தங்களுடைய இஷ்ட தெய்வங்களான சிவன், திருமால் ஆகியவர்களில் யார் பெரியவர் என தங்களுக்குள்ளேயே வாதம் செய்தனர். பின்னர் இதை அம்பாளிடம் சென்று முறையிட, அவர் சிவபெருமானிடம் இதற்கு விளக்கம் கேட்டார். அச்சமயம் இறைவன், அம்பாளிடம் ‘பூவுலகிலுள்ள புன்னை வனம் சென்று தவமியற்றினால், அங்கே காட்சியளித்து உனது சந்தேகம் தீர்க்கப்படும்’ எனக் கூறினார்.

அவ்விதமே, பூவுலக புன்னை வனம் வந்த அம்பிகையும் ஊசி முனையில் அமர்ந்து, சிவபெருமானை எண்ணி, ஆடி மாதத்தில் தபஸ் மேற்கொண்டார். அம்மனின் கடுமையான தபஸினைக் கண்ட இறைவன், சங்கர நாராயணராக அம்மன், சங்கன், பதுமன் ஆகிய மூவருக்கும் காட்சி அளித்து ஹரியும், ஹரனும் ஒன்றுதான் என்பதை உணர்த்தினார்.

‘ஹரியும் சிவனும் ஒன்று’ என்பதை கோமதி அம்மனுக்கு உணர்த்தும் வகையில், ஆடி மாதம் உத்திராட நட்சத்திரத்தன்று சங்கர நாராயணராகக் காட்சி கொடுக்கும் ஆடித்தபசு நிகழ்வு சங்கரன்கோவிலில் பிரசித்தி பெற்றதாகும். ஆடித்தபசு உத்ஸவம் இக்கோயிலில் 12 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த உத்ஸவத்தைக் காண இன்று லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள். கால சர்ப்ப தோஷம், ராகு – கேது தோஷம், செவ்வாய் தோஷம் போன்றவற்றை நீங்கும் புண்ணியத் தலம் சங்கரன்கோவில் ஆகும். கோமதி அம்மன் சன்னிதி பிரதானமாக இருக்க, வலப்புறம் மற்றும் இடப்புறம் உள்ள சன்னிதிகளில் முறையே சங்கரன் மற்றும் சங்கரநாராயணராக இறைவன் அமர்ந்துள்ளார்.

கோயிலின் சிறப்பம்சங்கள்:

கோமதி அம்மன் வீற்றிருக்கும் சன்னிதிக்கு முன்பு தரையில் ஸ்ரீசக்கரம் ஒன்று உள்ளது. இதை பிரதிஷ்டை செய்தவர் திருவாவடுதுறை ஆதீனம் 10வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிக சுவாமிகள் ஆவார். இந்தச் சக்கரத்தின் மீது அமர்ந்து கண்களை மூடி, கைகளைக் கூப்பி கோமதி அம்மனை வேண்டி பிரார்த்தனை செய்தால் எண்ணிய காரியங்கள் ஸித்தி பெறும்.

சன்னிதியின் பிராகார வாயு மூலையில் புற்று மண் பிரசாதம் சேமிக்கப்பட்டு உள்ளது. இது சகல தோஷங்களையும் நீக்கவல்லது. புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில் மூலவர் சங்கரலிங்கம் மீது சூரியக் கதிர்கள் விழுந்து பூஜிப்பதைக் காண கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

சங்கரநாராயணரின் தரிசனம் காண பார்வதி தேவி ஊசி முனையில் அமர்ந்து புரிந்த முதல் தவம், ‘ஆடித்தபஸ்’ எனவும், சிவனாரின் சுய ரூப தரிசனம் வேண்டி அம்மன் புரிந்த இரண்டாவது தவம், ‘ஐப்பசி திருக்கல்யாண விழா’ எனவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

தென்காசி கோமதி அம்மன் கோயில்:

சங்கரன்கோவிலில் இருப்பது போலவே, தென்காசியிலும் ஸ்ரீ கோமதி அம்மன் சங்கரநயினார் கோயில் உள்ளது. இந்தத் தலத்திலும் ஆடித்தபசு விழா கோலாகலமாக நடைபெறும். ராகு – கேது மற்றும் சனி தோஷம் நீக்கும் பரிகாரத் தலமாகும் இது. இந்தக் கோயிலில் மூன்று சிறப்பான மகிமைகள் உண்டு.

ஸ்தல மகிமை: ‘தட்சிண காசி’ என அழைக்கப்படும் தென்காசியில் வடக்கு – தெற்காக ஓடும் சித்ரா நதிக்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது.

தீர்த்த மகிமை: சித்ரா, கங்கா, சிற்றாறு ஆகிய மூன்று நதிகள் இங்கு சங்கமமாகின்றன.

மூர்த்தி மகிமை: ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி, ஸ்ரீ கோமதி அம்மன் மற்றும் ஸ்ரீ சங்கர நாராயணர் ஆகியோர் இக்கோயிலில் வீற்றிருக்கின்றனர்.

வாஸ்து சாஸ்திரப்படி அமைந்த திருக்கோயில் இது. இன்று ஆடித்தபசு திருநாள். இந்நன்னாளில் இம்மூவரையும் வணங்கி வழிபட்டு, வாழ்வில் வளம் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com