ஆனந்த வாழ்வு தரும் அன்னாபிஷேகம்!

ஆனந்த வாழ்வு தரும் அன்னாபிஷேகம்!

மிழ் வருடம் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வதும் வழக்கமான ஒன்றாகும். இந்த அன்னாபிஷேகத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானின் அருள்பெறுவது விசேஷமாகும்.

இந்த சிறப்பு வாய்ந்த அன்னாபிஷேக திருநாளில் சிவபெருமானை அன்ன அலங்காரத் திருக்கோலத்தில் தரிசனம் செய்வது மிகவும் சிறப்பாகும். இந்த அபிஷேகத்திற்குத் தேவையான அரிசி வாங்கி கோயில்களுக்குக் கொடுப்பது, குழந்தைகள் ஐந்து பேருக்காகவும் அன்னதானம் செய்வது போன்ற செயல்கள் நாம் செய்யும் புண்ணியத்தை அதிகரிக்கும்.

அன்னபூரணி அன்னையைத் தொடர்ந்து வணங்கி வந்தால் உணவு வீணாவது குறைவதோடு, வாழ்வில் உணவு பற்றாக்குறையும் ஏற்படாது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய கடவுளரின் சொரூபமாக அன்னம் விளங்குகிறது.

இந்த ஐப்பசி மாதம் பௌர்ணமி தினத்தன்று அனைத்து சிவாலயங்களிலும் லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடைபெறும். ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த அபிஷேகம் ஒரு அரிய வழிபாடு ஆகும். இதைக் காண்பதற்கு ஏராளமான பக்தர்கள் சிவன் கோயிலுக்கு வருகை தருவார்கள். அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படும் அன்னத்தில் ஒவ்வொரு பருக்கையும் லிங்கம் என்பது ஐதீகமாகும்.

இந்த நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று வழிபட்டால் கோடி சிவ தரிசனம் செய்ததற்குச் சமமாகும். அன்னாபிஷேகம் செய்த சாதத்தைக் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் சாப்பிட்டால் கட்டாயம் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த அன்னாபிஷேக திருநாளில் சிவபெருமானின் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் பஞ்சபூதங்களையும் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். பூமிக்கு அருகில் நிலவு வந்து தனது முழு ஒளியும் முழுமையாக வீசுவது இந்த ஐப்பசி பௌர்ணமி திருநாள் ஆகும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

சந்திரன் வெளிப்படுத்தும் முழு ஆற்றலையும் பரிபூரணமாகப் பெறுவதற்கு இந்த ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இன்று (28.10.2023) அனைத்து சிவன் கோயில்களிலும் மாலை நேரத்தில் அன்னாபிஷேகம் நடைபெறும். இந்த அன்னாபிஷேக வழிபாட்டில் நாமும் கலந்து கொண்டு ஈசனின் பேரருளைப் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com