

அன்னை பிரத்யங்கிரா தேவி ஸ்ரீ சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவர். சரபேஸ்வரரின் சக்தியாக விளங்குபவர். இந்த அவதாரம் பூண்டு அசுரனை அழித்த நரசிம்மருக்குள் பரவிய அசுர குணம் போக்க, அவரை விழுங்கி வெளியேற்றி அவரை புனிதராய் மாற்றினார் மஹா பிரத்யங்கிரா தேவி. இந்த பெண் தெய்வத்திற்காக மதுரை மாவட்டத்தின் ஒரே ஒரு கோயில் மதுரை அருகே நரசிங்கம் கிராமத்தில் உள்ளது.கேரள கோயில் வடிவத்தில் மாறுபட்ட கட்டட அமைப்பில் உள்ள இக்கோயில் கருவறையில் மனித உடலும் சிம்ம முகமும் கொண்ட பிரத்யங்கிரா தேவி தீயவை எல்லாம் அழித்து நன்மையை தரக்கூடிய சக்தி படைத்தவளாக திகழ்வதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
நரசிம்மருடன் சம்பந்தப்பட்ட இந்த பிரித்யங்கிரா தேவி கோவில் மதுரையில் யானைமலை ஒத்தக்கடையின் பிரசித்தி பெற்ற யோக நரசிம்மர் கோயில் செல்லும் முன் உள்ள பகுதியில் ஒரு குன்றின் மீதுஅமைந்துள்ளது. இந்தப்பகுதியில் யானைமலை அருகில் சிறிய குன்றின் மேல் முருகன் கோவில் ஒன்று உள்ளது. இக்கோவில் அருகில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமான பிரித்யங்கிரா தேவி ஆலயம் உள்ளது. இந்தப் பிரத்யங்கிரா தேவியிடம் வேண்டிக் கொண்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது.
காயத்ரி மந்திரங்கள், ஸ்தோத்ரம் சொல்லி வர மிளகாய் யாகம் செய்து வழிபாடு செய்வது தேவி பிரத்தயங்கிர தேவிக்கு பிடித்தமானது . அதனைச் செய்ய காரியத் தடைகள் விலகும், வெற்றி கிடைக்கும், பில்லி, சூனியம், ஏவல், கண் திருஷ்டி நீங்கும் .இது போக நீண்ட நாட்களாக நோயில் இருக்கக் கூடியவர்கள், திருமண தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு உரிய பரிகாரம் கிடைக்கும்.
இந்த கோவிலில் அமாவாசை நாட்களில் நடைபெறும் யாக வேள்வியில் காய்ந்த மிளகாயும், மிளகும் கொட்டுகின்றனர். இக்கோவிலில் அமாவாசை நாளில் மட்டும் பிரத்யங்கிரா தேவியை நினைத்துக் காய்ந்த மிளகாய்களை வாங்கிக்கொண்டு, சிறிய பேப்பரில் தன்னுடைய குறைகளை எழுதி, அந்நாளில் நடத்தப்படும் சிறப்பு யாகத்தில் காய்ந்த மிளகாய் மற்றும் குறைகளை எழுதிய பேப்பரை போட்டு பூஜை மேற்கொள்வார்கள்.
அமாவாசை வழிபாட்டையொட்டி காலையிலிருந்து பக்தர்கள் தங்களது குறைகளை எழுதிய பேப்பரையும், காய்ந்த மிளகாய்களையும் வாங்கிக்கொண்டு வரிசையாக யாகத்தில் போட்டு வழிபாடு செய்வர் அப்போது கோயில் பூசாரிகள் மந்திரங்கள் சொல்லி வருவார்கள். இப்படி மேற்கொள்ளப்படும் இந்த சிறப்பு யாக பூஜையின் மூலமாகப் பக்தர்களின் குறைகள் அனைத்தும் படிப்படியாகத் தீர்ந்து விடுவதாகச் சொல்லப்படுகின்றது. இப்படி காய்ந்த மிளகாய்களை யாகத்தில் போடும் பொழுது சிறிது கூட அப்பகுதியில் மிளகாய் நெடி ஏற்படாமல் இருப்பதைப் பக்தர்கள் அதிசயமாகக் கருதுகின்றனர்.
பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் அமாவாசை நாளில் மட்டும் கிலோ கணக்கில் காய்ந்த மிளகாய் வைத்து யாக வழிபாடு நடக்கின்றது. இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் உங்களுடைய தீமைகள் அனைத்தும் தீரும் என்று மதுரை மக்களால் நம்பப்படுகின்றது. பழமையான இந்த கோவிலில் அமாவாசை அன்று அதிக கூட்டம் வருகிறது.
எப்படி செல்வது இந்த கோவிலுக்கு...?
மதுரை – திருச்சி நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் யா.ஒத்தக்கடை கிராமத்தின் அருகே உள்ள யானைமலை அடிவாரத்தில் யோக நரசிங்கர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு செல்ல மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து மற்றும் சிற்றுந்து வசதி உள்ளது.இந்த யோக நரசிம்மர் கோவிலுக்கு சற்று முன்னர் ஒரு குன்றின் மீது பிரத்தியங்கரா தேவி கோவில் உள்ளது.