சிவலிங்கங்களில் இத்தனை வகைகளா?

Are there so many types of Shivalinga?
Are there so many types of Shivalinga?https://astrologicalscience.blogspot.com

ல்லில் வடிக்கப்பட்டு கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவலிங்கம், ‘அசல லிங்கம்’ என்ற வகையைச் சேர்ந்தது. விரும்பும் இடத்துக்கு எடுத்துச் செல்லத்தக்கபடி அமைந்த லிங்கம், ‘சலலிங்கம்’ எனப்படும். ஒரு நிலையில் இருப்பது போல் தோன்றினாலும் இடம் மாற்றி வைக்கும்படி அமைந்த லிங்கம், ‘சலாசல லிங்கம்’ எனப்படும்.

மண், அரிசி, வடித்த சாதம், ஆற்று மணல், சாணம், சந்தனம், வெண்ணெய், ருத்ராட்சம், புஷ்பம், தர்ப்பை மாவு, வெல்லம் முதலிய பன்னிரண்டு பொருட்களால் பூஜைக்காக தற்காலிகமாக உருவாக்கப்படும் லிங்கம், ‘க்ஷணிக லிங்கம்’ எனப்படும். தங்கம், வெள்ளி, செம்பு முதலிய உலோகங்களில் செய்யப்படுவது, ‘லோஹஜ லிங்க’மாகும்.

முத்து, பவளம், ஸ்படிகம், மரகதம், நீலம், புஷ்பராகம் முதலிய விலை உயர்ந்த கற்களால் உருவானவை ரத்னஜ லிங்கம் எனப்படும். உருண்டு ஓடும் பாதரசத்தை திரட்டி சில கலைஞர்கள் சிவலிங்கத்தை உருவாக்குவது உண்டு. அதற்கு ரஸ லிங்கம் என்று பெயர்.

லிங்கத்தின் பாணத்தில் சிவபெருமானின் முகங்கள் காணப்பட்டால் அது முகலிங்கம் எனப்படும். சிவலிங்கத்தின் பாணத்தில் 999 அல்லது 1007 சிறிய லிங்க உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தால் அது சஹஸ்ர லிங்கம் ஆகும்.

லிங்க பகுதியைச் சுற்றிலும் 107 சிவலிங்கங்கள் பொறிக்கப்பட்டிருந்தால் அது அஷ்டோத்திர சதலிங்கம் எனப்படும்.

சிவலிங்கத்தில் உருளை வடிவ லிங்கப்பகுதியில் உருளையாக இருப்பதற்கு பதிலாக பட்டை பட்டையாக நீள வாக்கில் உள்ள லிங்கங்கள் உண்டு. இவை தாரா லிங்கம் என அழைக்கப்படும்.

ஆர்ஷ லிங்கம் என்பது ரிஷிகளால் உண்டாக்கப்பட்டு வணங்கப்படுபவை. அவை அடிப்புறம் சற்று பெருத்து கிட்டத்தட்ட தேங்காய் வடிவம் போல் இருக்கும். சிவபெருமான் ஆர்ஷ லிங்கம், தெய்வீக லிங்கம், பாண லிங்கம், மானுஷ லிங்கம், சுயம்பு லிங்கம் என ஐந்து வகை லிங்கங்களாக எழுந்தருளியுள்ளார். முனிவர்களால் பூஜிக்கப்பட்டது ஆர்ஷ லிங்கம், தேவர்களால் பூஜக்கப்பட்டது தெய்வீக லிங்கம், பாணாசுரன் என்பவனால் சிருஷ்டிக்கப்பட்டது பாண லிங்கம், மனித சிற்பிகளால் உண்டாக்கப்பட்டது மானுஷ லிங்கம், மலைகளிலும் நதிக்கரை ஓரங்களிலும் சுயம்புவாக தோன்றியது சுயம்புலிங்கம் எனப்படும்.

கோயிலில் பரமேஸ்வரனின் சாந்நித்தியம் மூன்று நிலைகளில் மூவகையாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஸ்தூல லிங்கம் என்று கோபுரத்தை குறிப்பிடுவார்கள். பலி பீடத்தை பத்ரலிங்கம் என்பர். கர்ப்ப கிரகத்தில் உள்ள மூலஸ்தானத்தை பரார்த்த லிங்கம் என்பர்.

நேபாளத்தில் உள்ள காட்மாண்டுவில் பசுபதிநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள கோரக்க நாதர் ஆலயத்தில் வெள்ளியாலான சிவலிங்கம் உள்ளது. தங்கத்தால் ஆன சிவலிங்கம் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் மட்டும் சிதம்பர ரகசியத்திற்கு கீழே ஒரு அடி உயரம் உள்ளதாக உள்ளது. இது ஏக முக சிவலிங்கமாக திகழ்கிறது. இந்த தங்கத்தாலான சிவலிங்கத்திற்கு உச்சி வேலையில் ஒரு கால பூஜை தீட்சிதர் ஒருவரால் செய்யப்படுகிறது. இவருக்கு காவலாக சொர்ண கால பைரவர் அருகில் எழுந்தருளியுள்ளார்.

அரிதான லிங்கம் ஒன்று காஞ்சிபுரத்தில் உள்ளது. சிவன் சக்தி ரூபத்தில் ஒருமித்த வடிவமாக அமைந்துள்ள இது சக்தி லிங்கம் என அழைக்கப்படுகிறது. இதன் பாணத்தில் வீராசனத்தில் நான்கு கரங்களுடன் சக்தி அமர்ந்திருக்கிறாள்.

கர்நாடக மாநிலம், கோகர்ணம் என்ற இடத்தில் ராவணன் கொண்டு வந்த ஆத்ம லிங்கம் அமைந்துள்ளது. இது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே எடுக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது.

மரகத லிங்கம்
மரகத லிங்கம்https://www.pinterest.com

ஜடாமுடியுடன் கூடிய லிங்கத்தை திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகில் உள்ள சிவசைலம் சிவசைலநாதர் கோயிலில் மட்டும்தான் காண முடியும். சிவ லிங்கத்தின் பின்னால் உள்ள ஜடா முடியை லிங்கத்தின் பின்புற சுவரில் உள்ள துவாரம் வழியாக தரிசிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
வீட்டு உபயோகத்தில் வினிகரின் பயன்கள் இத்தனையா?
Are there so many types of Shivalinga?

காசி விசுவநாதர் கோயிலில் 511 சிவலிங்கங்கள் உள்ளன. இதில் சுயம்பு லிங்கங்கள் 11, தேவர்கள் உருவாக்கியவை 46, கிரகங்கள் வணங்கியவை ஏழு, முனிவர்கள் பிரதிஷ்டை செய்தவை 47, பக்தர்களால் உருவாக்கப்பட்டவை 295, பூத கணங்கள் வழிபட்டவை 40, பல்வேறு கோயில்களின் பிரதியாக உருவாக்கியவை 65.

திரு இடைச்சுரம் ஊரில் உள்ள ஞானபுரீஸ்வரர் ஆலயத்திலும் திரு ஈங்கோய்மலை மரகதாலேஸ்வரர் ஆலயத்திலும் சிவபெருமானின் திருமேனி பச்சைக் கல் மரகதத்தால் ஆனவை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com