அருளை வாரி வழங்கும் ஆஷாட நவராத்திரி ஆரம்பம்!

Varahi Amman
வாராகி அம்மன்
Published on

ண்டின் 12 மாதங்களிலும் 12 நவராத்திரிகளை கொண்டாடும் வழக்கத்தை நம் முன்னோர்கள் கொண்டிருந்தார்கள். காலப்போக்கில் அவை குறைந்து முக்கியமான நான்கு நவராத்திகளை மட்டும் கொண்டாடும் வழக்கம் வந்தது. பொதுவாக, நவராத்திரி என்றதும் நமக்கு புரட்டாசி மாதம் கொண்டாடும் மகா நவராத்திரியே நினைவுக்கு வரும். ஆனால், வசந்த நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி, சியாமளா நவராத்தி என்று இந்த நான்கு நவராத்திரிகளில் ஆஷாட நவராத்திரி மிகவும் விசேஷமாகக் கூறப்படுகிறது.

ஆஷாட மாதம் என்பது சந்திரனை அடிப்படையாகக் கொண்ட மாதங்களில் ஒன்று. இந்த மாதம் ஆனி மாத அமாவாசையோடு தொடங்கி ஆடி மாத அமாவாசை முன் தினத்தோடு முடியும். ஆனி மாத அமாவாசைக்கு மறு தினமான இன்று ஆரம்பித்து அடுத்த ஒன்பது நாட்களும் இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படும். இந்த நவராத்திரிக்கு உரிய தேவி வாராகி அம்மனாகும்.

வாராகி என்பவள் சப்த மாதர்களுள் ஒருவர். கிராமங்கள் தோறும் எல்லா கோயில்களிலும் சப்த மாதர்களுக்கு என வழிபாட்டு முறை உண்டு. வாராகி அம்மன் கையில் ஏர் கலப்பையும், உலக்கையும் கொண்டு காட்சி தருகிறாள். இவள் உழவுத் தொழிலை காத்து அருள்புரிபவள். அதனால்தான் தமிழத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை பெரிய கோயிலில் அன்னை வாராஹிக்கு தனி சன்னிதி உண்டு.

தஞ்சை பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும். இந்த நாட்களில் நவதானிய அலங்காரம், குங்கும அலங்காரம், தேங்காய் பூ, சந்தன அலங்காரம் என தினம் ஒரு பொருளால் சிறப்பாக அலங்காரம் செய்யப்படும். அம்பாளை துதிக்கும்பொழுது, ‘பஞ்சமி பஞ்சபூதேசி’ என சகஸ்ரநாமத்தில் வரும். அன்னைக்கு பஞ்சமி என்ற திருநாமம் உண்டு. இதற்கு பஞ்சமி திதிக்கு உரியவள் என்றும் பஞ்சம் போக்குபவள் என்றும் பொருள்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளின் மனநிலையை மேம்படுத்தும் டான்ஸ்!
Varahi Amman

வாராகி அம்மனை வழிபட உகந்த தினம் பஞ்சமியாகும். அன்று வாராகி தேவிக்கு தானிய கோலமிட்டு, விளக்கேற்றி வழிபட வீட்டில் எப்பொழுதும் தானியங்கள் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. லலிதாம்பிகையின் நால்வகை படைகளுக்கும் சேனாதிபதியாக திகழ்பவள் இந்த வாராகி. இவளை வழிபடுபவர்களுக்கு எதிரிகளால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும்.

பிரம்மாண்ட புராணத்தில் வாராகி தேவியை சுற்றி இருந்த தேவதைகள் துவாதச நாமங்கள் சொல்லி துதித்ததாகவும் அந்த 12 நாமங்களை சொல்லி துதிக்க எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்பதுடன், பூமி தொடர்பான தீர்க்க முடியாத பிரச்னைகள், வழக்குகள் அனைத்தும் தீரும் என்பது நம்பிக்கை.

துவாதச நாமங்கள்: பஞ்சமி, தண்டநாதா, சங்கேதா, சமயேஸ்வரி, சமய சங்கேதா, வாராஹி, போத்ரினி,சிவா,வார்த்தாளி,மகா சேனா, ஆக்ஞா சக்ரேஸ்வரி,அரிக்ஞை என்பதுதான் அந்த பன்னிரு திருநாமங்கள்.

வாராகி தேவிக்கான நிவேதனங்கள் தோல் நீக்காத உளுந்து வடை, நவதானிய வடை, மிளகு சேர்த்த தயிர் சாதம், சுண்டல், பானகம், சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்றவற்றில் நம்மால் இயன்றதை நிவேதித்து வழிபட, துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com