அஷ்டதிக் பாலகர்களும் வழிபாடும்!

அஷ்டதிக் பாலகர்களும் வழிபாடும்!
Published on

ஹோமம் மற்றும் பூஜைகளின்போது வழிபடப்படுபவர்களில் முக்கியமானவர்கள் அஷ்டதிக் பாலகர்கள். ‘திக்’ என்றால் திசை எனப் பொருள். ‘அஷ்டம்’ என்றால் எட்டு என அர்த்தம். அமாவாசைக்கு அடுத்தும், பெளர்ணமிக்கு அடுத்தும் வருகின்ற எட்டாம் நாளை அஷ்டமி திதி என்று சொல்கிறோம். ‘அஷ்ட திக்’ என்றால், எட்டுத் திசை என்று அர்த்தம். அதேபோல், அஷ்ட திக் பாலகர்கள் என்றால், எட்டு திசைகளுக்குமான நாயகர்கள், தலைவர்கள், பாதுகாவலர்கள் என்று பொருள். இந்திரன், அக்னி, எமன், வருணன், நிருதி, வாயு, குபேரன், ஈசானன் ஆகிய எட்டு பேரும் அஷ்ட திக் பாலகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையின் நாயகர்கள். அந்தந்த திசைக்கு அதிபதிகள்.

விடியலுக்கும் சூரியோதயத்துக்குமான கிழக்குத் திசைக்கு அதிபதி இந்திரன். இவரே தேவர்களின் தலைவன். தேவர்களுக்கு மட்டுமின்றி, அஷ்ட திக்குகளுக்கும் அஷ்டதிக் பாலகர்களுக்கும் தலைவனும் இவர்தான். இவரை வழிபடும்போது இந்திரனை நினைத்து வேண்டிக்கொண்டால், சகல வளமும் நலமும் கிடைக்கப்பெறலாம். நோய் நொடியில்லாமல் ஆரோக்கியத்துடன் வாழலாம். தீராத நோயையும் தீர்த்து வைப்பவர் இந்திரன்.

தென்கிழக்கு திசைக்கு அதிபதி அக்னி தேவன். ஹோமங்களின்போது, அதில் இடப்படுகின்ற நைவேத்தியங்களை மற்ற தெய்வங்களுக்கு நம் சார்பாக எடுத்துச் செல்லும் பணியைச் செய்பவர் இவர். அக்னி தேவனின் மனைவி சுவாஹா தேவி என்கிறது புராணம். அதனால்தான், அக்னியில் நெய் வார்க்கும்போது, ஒவ்வொரு முறையும், ‘சுவாஹா’ என்று சொல்லுகிறோம். அக்னி தேவனை வணங்கி வழிபட்டால், சகல தெய்வங்களின் அருளையும் பெறலாம். இதனால் வீட்டில் தனம், தானியம் பெருகுவதோடு சுபிட்சம் நிலவும்.

தெற்கு திசைக்கு அதிபதி எமதருமன். இவரே காலதேவன் என்றும் தருமதேவன் என்றும் அழைக்கப்படுகிறார். எமதருமனை வணங்கினால், எம பயம் விலகும். தீராத நோய்கள் அகலும். நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்கப் பெறலாம்.

மேற்கு திசைக்கு அதிபதி வருண பகவான். மழைக் கடவுளான இவரை குளிர்ந்த மாலை வேளையில் நினைத்து பிரார்த்தனை செய்தால், பூமியை மழை பொழியச் செய்து குளிரப் பண்ணுவார். விவசாயம் தழைக்க அருளுவார்.

தென்மேற்கு திசைக்கு அதிபதி நிருதி பகவான். இவரை வழிபட்டு வந்தால், மனோபலம் பெருகும். மனதில் தைரியம் பிறக்கும். எதிரிகள் பற்றிய பயமும் நீங்கும்.

வடமேற்கு திசைக்கு காவலன் வாயு பகவான். இவரை வழிபட்டு பிரார்த்தனை செய்தால், உடல் நலக் கோளாறுகள் நீங்கும். வயிறு சம்பந்தமான பிரச்னைகளும் குறைபாடுகளும் தீரும்.

வடக்கு திசையின் அதிபதி குபேரன். இவரை வழிபட்டால், குபேர யோகம் கிடைக்கும். சகல ஐஸ்வர்யங்களையும் தந்தருள்வார் குபேரன்.

வடகிழக்கு திசையின் அதிபதி ஈசானன். மங்கல காரியங்கள் அனைத்தையும் நடத்திக் கொடுப்பவர். சிவனாரின் ஐந்து முகங்களில், ஈசானமும் ஒன்று. அந்த ஈசான உருவம் கொண்டவர்தான் வடகிழக்கு திசையின் நாயகன். இவரை வழிபட்டு வந்தால், ஞானமும் யோகமும் கைவரப் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com