நெப்போலியன் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ஜோசியமும் ஜாதகமும்!

நெப்போலியன் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ஜோசியமும் ஜாதகமும்!

நாம் சிறுவர்களாக இருந்தபொழுது உலகப் புகழ்பெற்றவர்களின் வரலாறுகளை படிப்போம். அப்போது பிரான்ஸ் நாட்டு வீரன் நெப்போலியனை பற்றி படிக்கும்பொழுது எப்பொழுதுமே அவரின் வெற்றியை பற்றி புகழ்வதாகத்தான் இருக்கும். நெப்போலியன் என்றால் வெற்றி; வெற்றி என்றால் நெப்போலியன். அப்படித்தான் அவரைப் பற்றி அறிந்திருப்போம்.

அவர் சிறுவனாக இருந்தபொழுது கைரேகை பார்க்கும் நிபுணரிடம் அவரது கையை நீட்டி பலன் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த நிபுணர், “உன் கையில் உள்ள ரேகையில் பெரிதாகப் புகழ்ந்து கூறும் அளவுக்கு எதுவும் இல்லை” என்று கூறிவிட்டாராம். நெப்போலியன் உடனே ஒரு கத்தியால் தனது கையில் கோடு கிழித்து, “உலகையே ஆண்டு காட்டுகிறேன் பார்” என்று கூறினாராம். அவ்வளவு தன்னம்பிக்கை உடையவர் அவர்.

‘ஆனைக்கும் அடி சறுக்கும்’ என்பது போல், ‘வாட்டர் லூ’ போர் ஒன்றுதான் அவருக்கு சறுக்கிவிட்டது. அவர் அடைந்த ஒரே தோல்வி அது மட்டும்தான்.

நெப்போலியனிடம் இரண்டறக் கலந்திருந்த வெற்றிக்குப் பின்னால், ஜோதிடமும் இருந்திருக்கிறது என்பதையும், அதை அவர் பின்பற்றி இருக்கிறார் என்பதையும் அறியும்போது வியப்பாக இருக்கிறது அல்லவா? அதனைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்! அதற்கு முன்பாக இதையும் தெரிந்துகொள்வோம்.

மாவீரன் நெப்போலியன் தனது வெற்றியின் ரகசியமாக கூறுவது என்ன தெரியுமா?

‘நான் செய்ய வேண்டிய வேலைகளை எனது மூளையில் புறா கூண்டறைகளை போல் பல அறைகளில் பிரித்து வைத்துக்கொள்வேன். ஒரு வேலையைச் செய்ய வேண்டும் என்றால், அந்த நேரத்தில் வேறு வேலை பற்றி சிந்திக்க மாட்டேன். வேறொரு வேலையை நான் செய்ய விரும்பினால் அதற்குரிய கூண்டை மட்டும் திறந்து விட்டு, மற்றதை எல்லாம் மூடி வைப்பேன். தூக்கம் வந்தால் மூளையின் எல்லா கூண்டுகளையும் மூடிவிட்டு நிம்மதியாய்த் தூங்குவேன். எந்த வேலை செய்தாலும் அந்த வேலையில் மட்டுமே என் கவனம் இருப்பதால் என்னால் எளிதில் வெற்றி பெற முடிகிறது’ என்றார் நெப்போலியன்.

அப்பேர்ப்பட்டவர் ஒதுக்கி வைத்த ஆங்கில மாத தேதிகளும் , அவரது வெற்றிக்குப் பின்னால் ஒளிந்திருந்த ஜாதகமும் இதோ:

ஜனவரி - 1, 2, 4, 6, 11, 12, 20, பிப்ரவரி - 1, 6, 8, 9, 17, 18, மார்ச் - 11, 12, 14, 16, ஏப்ரல் - 7, 8, 10, 17, 18, மே -1, 3, 5, 6, 7, 8, ஜூன் - 1, 5, 17, ஜூலை - 4, 6, 17, 21, ஆகஸ்ட் - 6, 13, 20, 21, செப்டம்பர் - 3, 6, 10, 18, அக்டோபர் - 10, 15, 16, நவம்பர் - 6, 8, 16, 20, டிசம்பர் - 8, 16, 19, 22.

கரி என்றால், 'நஞ்சு' என்று பொருள். இந்த கரி நாட்களில் சுப காரியம் எதுவும் செய்தல் கூடாது என்பது சாஸ்திர நியதி. மேற்கண்ட ஆங்கில தேதிகளானது பிரான்ஸ் நாட்டு வீரன் நெப்போலியன் தனது அனுபவத்தில் கண்டு ஒதுக்கி வைத்த தேதிகளாகும். இந்தத் தேதிகளில் நெப்போலியன் சுப காரியங்கள் எதுவும் செய்ததில்லையாம். ஏனென்றால், தமிழ் மாதங்களில் கரி நாட்கள் இருப்பது போல், ஒவ்வொரு ஆங்கில மாதங்களுக்கும் மேற்கண்டவாறு கரி நாட்கள் உண்டு. அந்த கரி நாட்களில் நெப்போலியன் சுப காரியங்கள் எதையும் செய்யாமல் இருந்திருக்கிறார். அதனால்தான் அவர் வெற்றி மேல் வெற்றி குவித்தாரோ? நம்மூர் பெரியவர்கள், ‘எதைத் தொடங்கினாலும் நல்ல நேரத்தில் தொடங்கு; எல்லாம் நல்லபடியாகவே முடியும்’ என்று கூறுவார்களே, இந்தத் தகவல் அதை நினைவுபடுத்துகிறது இல்லையா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com