அவல் நிவேதனம் நடைபெறும் அனுமன் கோயில் எங்குள்ளது தெரியுமா?

Sri Anuman
Sri Anuman

கேரள மாநிலம், ஆலத்தியூரில் உள்ளது புகழ் பெற்ற ஒரு அனுமன் கோயில். இது வசிஷ்ட முனிவரால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நிர்மாணிக்கப்பட்ட ஆலயமாகும்.

ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதை இருக்கும் இடத்தை கண்டறிந்து வர தகுதியுடையவர் அனுமனே என்று முடிவு செய்தார் ஸ்ரீராமர். அவர் அனுமனிடம் சீதையை கண்டறிவதற்காக அவரது உருவ அடையாளங்களைத் தெரிவித்து ஸ்ரீராமன் அனுப்பி வைத்த தூதுவனே என்பதை சீதைக்கு தெரிவிக்கும் அடையாளமாக தனது கணையாழியை கழற்றி அனுமனிடம் கொடுத்தார்.

சீதைக்கு அனுமன் மேல் நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக தனக்கும் சீதைக்கும் மட்டுமே தெரிந்த சில தனிப்பட்ட நிகழ்வுகளையும் அவரிடம் சொல்லத் தொடங்கினார். அனுமனும், ராமபிரான் சொல்வதை மிகுந்த கவனத்துடன் கேட்டுக் கொண்டார்

ஸ்ரீராமன், சீதை ஆகியோருக்கு இடையிலான தனிப்பட்ட நிகழ்வுகளைத் தான் தெரிந்துகொள்வது தவறு எனும் எண்ணத்துடன் லட்சுமணன் அங்கிருந்து நகர்ந்து சென்றான். ராமாயணத்தில் வரும் இந்த நிகழ்வு நடைபெற்ற இடமாக கருதப்படும்  இந்த இடத்தில் வசிஷ்ட முனிவர் அனுமனின் சிறப்பை அனைவருக்கும் தெரிவிக்க விரும்பி இந்தக் கோயிலை நிறுவியதாக ஆலய தல வரலாறு கூறுகிறது.

இக்கோயில் கருவறையில் ஸ்ரீராமபிரான் சீதை இல்லாமல் தனித்து வீற்றிருக்கிறார். அதனை அடுத்துள்ள சன்னிதியில் ஸ்ரீராமன் தனக்கும் சீதைக்கும் இடையிலான நிகழ்வுகளை சொல்வதை இடதுபுறம் காதை சாய்த்து கேட்பது போன்ற தோற்றத்தில் அனுமன் அருள்பாலிக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையிலான பேச்சைக் கேட்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக இங்கிருந்து சிறிது தள்ளி இருக்கும் சன்னிதியில் லட்சுமணன் தனியாக இருக்கிறார். இந்தக் கோயில் வளாகத்தில் கணபதி, ஐயப்பன், துர்கா பகவதி, விஷ்ணு, பத்ரகாளி அனைவருக்கும் தனித்தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள அனுமனுக்கு நெய் பாயசம், அவல் ஒட்டப்பம் 853 கதலிப்பழம் வெல்ல அவல் பனப்பாயசம் சாத்து சாதம் போன்றவற்றைப் படைத்தும் அனுமனுக்குரியதாக கருதப்படும் பல்வேறு மலர்களை சமர்ப்பித்தும் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். இங்குள்ள கோயிலில் தினமும் பஞ்சாட்சர பாயசம் படைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.

சீதையைத் தேடிச் செல்லும் அனுமனின் பயணத்தின் இடைவெளியில் உண்பதற்காக ஸ்ரீராமன் அவருக்கு அவல் கொடுத்து அனுப்பினார். அதனை நினைவூட்டும் வகையில் இந்தக் கோயிலில் அனுமனுக்கு ஈரமான அவல் படைத்து வழிபடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது. ஒரு நாழி கால் போதி (25 நாழி) அரைப்பொதி (50 நாழி) ஒரு பொதி (100 நாழி) எனும் அளவுகளில் பக்தர்கள் அனைவரும் அவல் படைத்து வழிபாடு செய்கின்றனர் இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வேண்டியது அனைத்தும் நிறைவேறும் என்பது இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
உறவுகளை மேம்படுத்த என்னவெல்லாம் செய்யக்கூடாது தெரியுமா?
Sri Anuman

சீதையை கண்டறிய சென்ற அனுமன் கடலைக் கடந்து இலங்கைக்கு தாண்டி குதித்ததை நினைவூட்டும் வகையில் கோயில் வளாகத்தில் கல்லில் கட்டிய திடல் ஒன்று உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் இந்த கல் திடலை தாண்டி குதித்தால் அவர்களுடைய உடல் நலம் பாதுகாக்கப்படுவதுடன், அவர்கள் வாழ்நாள் அதிகரிக்கும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது.

இந்தக் கோயிலில் இருக்கும் அனுமனுக்கு, ஸ்ரீராமன், சீதையை கண்டறிந்து வருவதற்காக சீதையின் உருவ அடையாளங்களையும் தனிப்பட்ட நிகழ்வுகளையும் சொல்லியபோது தேவலோகத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் அனுமனின் பலத்தையும் சக்தியையும் அதிகரிக்கத் தங்களது சக்தியை அவருக்கு வழங்கினர். எனவே, இங்கிருக்கும் அனுமனை வழிபடுபவர்களுக்கு அவர்கள் எண்ணிய செயல்கள் அனைத்தும் எளிதில் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இரவில் தூங்கும்போது ஆலத்தியூர்  அனுமன் பெயரை உச்சரித்துத் தூங்கினால் அமைதியான உறக்கம் கிடைக்குமாம்.

கேரள மாநிலம், மலப்புரம் நகரிலிருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்த ஆலத்தியூர் அனுமன் கோயில்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com