தமிழ்நாட்டின் 'தட்சிண அகோபிலம்' ஆவணியாபுரம் நரசிம்மர் கோவில் அதிசய ரகசியங்கள்!

Dakshina Ahobilam - நரசிம்மர் கோவில்
Dakshina Ahobilam - நரசிம்மர் கோவில்AI Image
Updated on

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி-ஆரணி சாலையில் உள்ள ஆவணியாபுரம் (Avaniyapuram) என்னும் ஊரில் சிறிய குன்றின் மீது ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. 'தட்சிணகோபிலம்' என்று அழைக்கப்படும் இத்தலத்தில் மூலவர் நரசிம்மருடன் சேர்த்து ஒரே இடத்தில் நவ நரசிம்மர்கள் (9) அருள்பாலிக்கின்றனர்.

சிம்ம முகத் தாயார்:

லட்சுமி தாயார் இங்கு சிங்க முகத்துடன் காட்சி தருவது மிகவும் அரிதான மற்றும் தனித்துவமான காட்சியாகும். திருமகளும், கருடாழ்வாரும் சிம்ம முகத்துடன் காட்சி தரும் இத்தலத்தில் நவ நரசிம்மர்கள் அருளாட்சி செய்வதால் தட்சிண அகோபிலம் என்று போற்றப்படுகிறது. லஷ்மி நரசிம்மரின் மடியில் அமர்ந்திருக்கும் தாயாரும் சிம்ம முகத்துடனே காட்சி தருகிறார். கருவறை ஒரு பாறையில் செதுக்கப்பட்ட குகை என்று கூறப்படுகிறது. கோவிலுக்கு வெளியே தனியாக உள்ள ஆஞ்சநேயர் வில் ஏந்தியவாறு வீர ஆஞ்சநேயராக காட்சி தருகிறார்.

தட்சிண அகோபிலம் ஆவணியாபுரம் நரசிம்மர் கோவில் தல வரலாறு:

பிருகு மகரிஷியின் பிரார்த்தனைக்கு இறங்கி 5 திவ்ய தேசங்களில் எழுந்தருளி இருக்கும் திருக்கோலங்களில் பெருமாள் இங்கு காட்சி தந்து அருளிய அற்புத தலமிது. ஆவணி நாராயணபுரம் என்று அழைக்கப்பட்ட இந்த இடம் தற்போது ஆவணியாபுரம் என்று வழங்கப்படுகிறது. சின்ன திருப்பதி, தட்சிண அகோபிலம், பஞ்ச திருப்பதி என பக்தர்களால் போற்றப்படும் இத்தலத்தில் திருமணத் தடை நீங்கவும், புத்திர பாக்கியம் பெறவும் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.

இதையும் படியுங்கள்:
பாம்பின் வயிற்றுக்குள் பிரகலாதன் சரித்திரம்... நம்பள்ளிகுட்டா நரசிம்மர் கோவில்!
Dakshina Ahobilam - நரசிம்மர் கோவில்

பஞ்ச நரசிம்மர்கள்:

கோவில்கள் இரண்டு அடுக்குகளில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. கோவிலின் நுழைவாயிலில் மூன்று அடுக்கு ராஜகோபுரம் அமைந்துள்ளது. இங்கு இரண்டு கருடாழ்வார்களும், அவர்களில் ஒரு கருடன் சிம்ம முகத்துடனும் காட்சி தருகிறார். மலைப்பகுதியின் முதல் தளத்தில் லட்சுமி நரசிம்மர் அலமேலுமங்கைத் தாயார் மற்றும் பஞ்ச நரசிம்மர்களை தரிசிக்கலாம். இங்குள்ள உற்சவமூர்த்தி நரசிம்மருக்கு மூன்று கண்கள் உள்ளன. இரண்டாவது குன்றின் மீது வெங்கடேச பெருமாள், சோளிங்கர் நரசிம்மர், வரதராஜ பெருமாள், ரங்கநாதர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.

பிரார்த்தனை:

மலையில் அமைந்துள்ளதால் நரசிம்மரை தரிசிக்க சுமார் 250 முதல் 300 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். இக்கோவிலின் விசேஷம் துலாபாரம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு துலாபார பிரார்த்தனை மேற்கொள்வது வழக்கமாக உள்ளது.

பிள்ளை வரம் கிடைத்ததும் குழந்தையைக் கொண்டு வந்து எடைக்கு எடை துலாபாரம் அளிக்கிறார்கள். அதேபோல் சுவாதி நட்சத்திர நாளில் இங்கு வந்து வழிபட எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் விலகும் என்றும், திருமணத்தடைகள் நீங்கி விடும் என்பதும் நம்பிக்கை.

Dakshina Ahobilam - நரசிம்மர் கோவில்
Dakshina Ahobilam - நரசிம்மர் கோவில்AI Image

இக்கோவில் சன்னதிகள் மலையில் இரு நிலைகளாக அமைந்துள்ளன. மலை உச்சியில் ஸ்ரீ ரங்கநாதரும், ஸ்ரீ வெங்கடாஜலபதியும், ஸ்ரீ வரதராஜப் பெருமாளும், ஸ்ரீயோக நரசிம்மரும் எழுந்தருளியுள்ளனர். கீழே குகை போன்ற கர்ப்ப கிரகத்தில் லட்சுமி நரசிம்மர் அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

அவருடைய இடதுபுறம் எழுந்தருளியுள்ள தாயாருக்கும் சிம்மமுகம், சன்னதியின் எதிரில் எழுந்தருளியுள்ள கருடாழ்வாருக்கும் சிம்ம முகம் அமைந்திருக்கின்றது. இத்தகைய சிறப்பு வேறு எங்கும் காணக் கிடைக்காதது. நரசிம்ம அவதாரம் நடைபெற்று அசுர சம்ஹாரம் முடிந்த பிறகு, தட்சிண பகுதியில் இந்த மலைக் குகையில் தான் சுயம்பு மூர்த்தமாக தோன்றினார் என்றும், அவரே இங்கு மூலவராக உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

வரலாறு மற்றும் கல்வெட்டுகள்:

கோவிலின் அறிவிப்பு பலகையின் படி, இக் கோவில் பல்லவ காலத்தைச் சேர்ந்தது என்றும், 12ஆம் நூற்றாண்டிலும் நன்கொடைகளைப் பெற்றுள்ளது என்றும் தெரிகிறது. இக்கோவில் அகோபில மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கோவில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6:00 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மதியம் 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

எங்கு உள்ளது?

ஆரணியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும், வந்தவாசியில் இருந்து சுமார் 26 கிலோ மீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.

இந்த ஆன்மீகப் பதிவின் மூலம் உங்கள் தீராத கடன் தொல்லைகள், எதிரிகள் பயம் மற்றும் திருமணத் தடைகளை நீக்கவல்ல தமிழ்நாட்டின் மிக அரிய தட்சிண அகோபில திருத்தலத்தைப் பற்றிய முழுமையான வழிகாட்டுதலையும், அங்கு வழிபட வேண்டிய விசேஷ நாட்களின் ரகசியங்களையும் அறிந்துகொண்டு உங்கள் வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களையும் பெற முடியும்.

logo
Kalki Online
kalkionline.com