ஈரோடு மாவட்டத்தில் உள்ளது புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெறும். தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடகா, கேரளாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதிப்பார்கள். இந்த ஆண்டு இந்தத் திருவிழா நாளை 11ம் தேதி பூச்சாற்றுடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து 26ம் தேதி அதிகாலை நாலு மணிக்கு குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீ மிதிக்கும் விழா நடைபெறுகிறது.
அக்காலத்தில் சலவை தொழில் செய்யும் தம்பதி தங்களின் சலவைத் துணிகளைத் துவைப்பதற்காக ஒரு பெரிய மலையின் கீழ் ஓடும் ஆற்றுக்கு அவற்றை எடுத்துச் சென்றனர். அப்போது அந்தப் பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். துணி துவைக்கும் வேளையில் கடுமையான மழை பெய்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அந்தப் பெண்ணுக்கு பிரசவலி ஏற்பட்டது. உடனே அவளது கணவன் தான் சலவைக்குக் கொண்டு வந்த சேலைகளை நான்கு புறமும் கட்டி தனது மனைவிக்கு தானே பிரசவம் பார்த்தான். அந்தப் பெண்ணுக்கு இரு பெண் குழந்தைகள் பிறந்ததாக புராண வரலாறு கூறுகிறது.
அதைத் தொடர்ந்து, ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு மற்றொரு குழந்தையையும் தூக்க முயன்றபோது இருவராலுமே அந்தக் குழந்தையை தூக்க முடியவில்லை. அதையடுத்து அவர்கள் நடந்ததை ஊர் தலைவரிடம் சென்று முறையிட்டுள்ளனர். மீண்டும் அவர்களுடன் சென்று அந்தக் குழந்தையை தூக்க முயன்றும் முடியவில்லை. இரும்பு கடப்பாறை கொண்டு குழந்தை இருந்த அந்தத் தாழியை தூக்க முற்பட்டனர். அப்போது அந்தக் குழந்தையின் வலது மார்பில் கடப்பாரை பட்டு இரத்தம் கசிந்தது.
அந்தத் தாழியின் உள்ளேயே இருந்த குழந்தையை மறுநாள் காலை சென்று பார்த்தபொழுது, அந்தக் குழந்தை வடிவாகவே அம்மனாக எழுந்தருளியிருந்தது. கடப்பாறையால் ஏற்பட்ட காயத்தை இன்றளவும் நம் பூஜையில் உன்னிப்பாக கவனித்தால் அம்மனின் வலது மார்பில் சிறு காயம் தென்படும்.
அம்மனே ஒருவரின் கனவில் வந்து, ‘தனக்கு திருவிழா நடத்த வேண்டும்’ என்று கூறியதாக வரலாறு கூறுகிறது. அதைத் தொடர்ந்து, ஊர் மக்கள் அனைவரும் கொங்கு பகுதி வழக்கப்படி பச்சை மாவு எடுத்து வடக்கு திசை நோக்கிச் சென்றனர். அப்போது அந்த சலவை தொழிலாளி பெண் தனது குடும்ப வறுமை காரணமாக பச்சை மாவுக்கு பதில் புளியங்கொட்டை இடித்து அதில் மாவு செய்து தெற்கு நோக்கி எடுத்துக்கொண்டு சென்று இருந்தாள். அந்தப் புளியங்கொட்டை மாவுக்காக அம்மனே வடக்கிலிருந்து தெற்கு நோக்கி திரும்பி காட்சி அளித்தாள். அம்மனின் இந்தக் கோலம் இன்றளவும் அப்படியே உள்ளது என்று நம்பப்படுகிறது.
பண்ணாரி அம்மன் திருக்கோயில் அழகிய கோபுரத்துடனும் அர்த்தமண்டபம், மகாமண்டபம், சோபன மண்டபம் முதலியவற்றுடன் தூண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது.