கயிலாயத்தில் ஒருசமயம் சிவபெருமானும் பார்வதி தேவியும் உரையாடிக் கொண்டிருந்தபொழுது, பார்வதி தேவிக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. அதை கயிலைநாதனிடம் கேட்க ஆரம்பித்தார். அதாவது, மக்கள் கங்கையில் நீராடினால் தங்களது பாவம் போய்விடும் என்று நீராடுகிறார்களே, அவர்களின் அனைத்து பாவங்களும் போய்விடுமா? என்பதுதான் அந்தக் கேள்வி.
அதற்கு சிவபெருமானோ, தனது பதிலை ஒரு சிறு நாடகமாக நடத்திக்காட்ட எண்ணி, பார்வதி தேவி என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறினார். அதன்படி சிவபெருமான் வயதான ரிஷி போலவும், பார்வதி தேவி ரிஷி பத்தினியாகவும் மாறினார்கள். கங்கையில் நீராடிவிட்டு வரும் வழியில், ஒரு சிறு பள்ளம் தோன்றச் செய்து, சிவபெருமான் அதில் விழுந்து தத்தளித்தபடி இருந்தார். பார்வதி தேவி பள்ளத்தின் அருகே நின்று கொண்டு, தனது கணவரை காப்பாற்ற வேண்டும் என்று கூக்குரலிட்டு கத்தியபடி இருந்தார். இருவரும் ஏற்கெனவே பேசிக்கொண்டபடி நாடகத்தை அரங்கேற்றினார்கள்.
அந்த சமயத்தில் கங்கையில் குளித்து விட்டு வந்த பலர், பள்ளத்தில் கிடந்த சிவபெருமானை வெளியே தூக்க வந்தபோது, பார்வதி தேவி தனது கணவர் ஒரு உத்தமமான ரிஷி என்றும், அவரை பாவம் செய்தவர் தொட்டால் மறுகணமே சாம்பலாகி விடுவார்கள் என்றும் கூறி எச்சரிக்கை செய்தார். இதனால் உதவ வந்த அனைவரும் பயந்து அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தனர்.
அப்பொழுது ஒருவன் துணிந்து வந்து பள்ளத்தில் இருந்தவரை தூக்க முனைந்தான். பார்வதி தேவியார் அவனையும் எச்சரிக்கை செய்தார். ஆனால், அவன் தான் இப்பொழுதுதான் கங்கையில் நீராடிவிட்டு வருவதாகவும் தன்னுடைய பாவங்கள் எல்லாம் கங்கையில் கரைந்து விட்டது என்றும் கூறியபடி அவரைத் தூக்க பள்ளத்தில் இறங்கினான். அவனது பதிலைக் கேட்டு சிவபெருமானும் பார்வதியும் மிகவும் மகிழ்ந்தார்கள். கங்கையில் நீராடிவிட்டு வந்த அனைவரிலும் அவன் ஒருவனே உண்மையான பக்தன் என்று அவன் செய்கையின் மூலம் திருப்தி கொண்டார்கள். தம்பதி சமேதராக அவனுக்கு சுய ரூபத்தில் காட்சி கொடுத்து, ஆசி கூறி மறைந்தார்கள் சிவபெருமானும் பார்வதி தேவியும்.
எந்த செயலையும் நம்பிக்கையோடும், சிரத்தையோடும் ஆத்மார்த்த பக்தியோடும் செய்து வந்தால், அதற்கு உண்டான பலன் கிடைக்கும் என்பது நிச்சயம்.