காயத்ரி மந்திரத்தின் சிறப்பும் பலனும்!

Gayathri Devi
காயத்ரி தேவி
Published on

காயத்ரி மந்திரத்தை, ‘சாவித்திரி மந்திரம்’ என்றும் கூறுவார்கள். மந்திரங்களில் முதன்மையாகத் திகழும் காயத்ரி மந்திரம் மிகவும் எளிமையானது. அதேசமயம் இந்த காயத்ரி மந்திரத்திற்கு ஈடான மந்திரம் உலகில் கிடையாது என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு கடவுளுக்கும் காயத்ரி மந்திரங்கள் உள்ளன. இதனை விசுவாமித்திரர் என்ற முனிவர் இயற்றியதாகக் கூறப்படுகிறது. இந்த மந்திரமானது ஒரு தினசரி பிரார்த்தனையாக உள்ளது.

காயத்ரி மந்திரம் 11 சொற்களைக் கொண்டது. இதன் பொருள் மூன்று உலகங்களையும் படைக்கக் காரணமான (பூர் லோகம், புவர் லோகம், ஸ்வர லோகம்) ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும் என்பதுதான் இதன் பொருள்.

சுருக்கமாகக் கூற வேண்டுமானால், நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பதே இதன் பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு எடுத்து உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விசுவாமித்திரர். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவைக் கொண்டது.

‘காயத்ரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு, ‘காயத்ரி மந்திரம்’ என்று பெயர். உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்ரி மந்திரத்தை ஜபிப்பது வழக்கம். மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத்தான் முதலிடம். காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே பிற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. ஒவ்வொரு கடவுளுக்கும் தனித்தனியாக காயத்ரி மந்திரங்கள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
பெண்கள் தவிர்க்கக்கூடாத 8 உடல் அறிகுறிகள்! ஜாக்கிரதை!
Gayathri Devi

காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க காரிய வெற்றி உண்டாகும். தினசரி காயத்ரி மந்திரத்தை ஜபிப்பவர்களுக்கு அஷ்டமா சித்திகளும் கைகூடி வரும் என்று பல முனிவர்களும் அனுபவப் பூர்வமாக உணர்ந்துள்ளனர். வாழ்வில் சுகமும் சந்தோஷமும் கிடைக்க தினமும் காயத்ரி மந்திரத்தினை உச்சரிக்கலாம். இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துகளும் நீங்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த மந்திரம் நாளொன்றுக்கு மூன்று முறை ஜபிக்கப்படுகிறது. காலையில் காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்திரிக்காகவும், மாலை சந்தியா காலத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.

காயத்ரி மந்திரத்தை குருவின் மூலம் உபதேசம் பெற்று ஜபிக்கலாம். இந்த மந்திரத்தை சரியான முறையில் உச்சரிக்கும்போது அவற்றின் சக்தியை நம்மால் உணர முடியும். மனதை ஒருமுகப்படுத்தி சொல்லுதல் சிறந்த பலனைத் தரும். இந்த மந்திரத்தை ஜபிப்பவர்கள் ஒழுக்க நெறியுடனும், உள்ளத் தூய்மையுடனும் இருக்க வேண்டியது அவசியம்.

காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து சொல்ல மனம் அமைதிப்படும். ஹார்மோன்களை அமைதிப்படுத்தும். உடலில் உள்ள சக்கரங்களை ஊக்குவிக்க உதவும். காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும்போது, அதனால் உண்டாகும் அதிர்வு ஒருமுனைப்படுத்தும் ஆற்றலையும், நினைவாற்றலையும்  சிறப்பாக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com