பிரார்த்தனை செய்வதால் உண்டாகும் பலன்கள்!

பிரார்த்தனை செய்வதால் உண்டாகும் பலன்கள்!

டவுளோடு  நம்மை இணைக்கும் பாலமாகத் திகழ்வது பிரார்த்தனை. தினமும் தொடர்ந்து கடவுளைப் பிரார்த்திப்பதால் நம் வாழ்வில் எண்ணற்ற நன்மைகள் உண்டாகும். நம் வாழ்வு மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். பரபரப்பான இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் மனிதர்கள் சிக்கல்களுக்கும் பிரச்னைகளுக்கும் ஆளாகி தவிக்கும்போது பிரார்த்தனை என்ற ஒரு ஆயுதம் பல விதங்களில் கை கொடுக்கிறது.

1. கடவுளிடம் அதீத நம்பிக்கை வைத்து பிரார்த்தனை செய்யும் மனித மனம் தவறு செய்ய அஞ்சுகிறது.

2. பலவிதமான சமூக ஊடகங்கள் மலிந்திருக்கும் இந்த நாளில் அமைதியாக சிந்திக்கவே முடியாத சூழல் இருக்கிறது. தேவையில்லாத எண்ணங்களால் மனதின் சக்தி விரயம் ஆகிறது. இதை தடுப்பதற்கு பிரார்த்தனை உதவுகிறது.

3. கவலைகளைக் குறைத்து மகிழ்ச்சியை வரவழைக்கிறது.

4. ஒரு தவறுக்காக வருந்தி பிரார்த்தனை செய்யும்போது இறைவனிடமிருந்து நமக்கு மன்னிப்பு கிடைக்கிறது. மனமும் அமைதி அடைகிறது.

5. ஆணவம், கர்வம் அழிந்து பிரார்த்தனையில் மனிதனுடைய மனம் தூய்மையாகிறது. அங்கே பணிவு பிறக்கிறது.

6. பிரச்னைகளாலும் சிக்கல்களாலும் சூழப்பட்டிருப்போம். அப்போது நம் பிரச்னைக்குரிய தீர்வையும், முடிவெடுக்க முடியாத சூழ்நிலையில் அருமையான ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கும் பிரார்த்தனை நமக்குக் கை கொடுக்கிறது.

7. மனம் பலவீனமுற்று இருக்கும் நேரங்களில் பிரார்த்தனை நமக்கு அசுர பலத்தைக் கொடுக்கிறது.

8. மலை போல வரும் துயரங்கள் பனி போல விலகி, பல அற்புதங்களை நிகழ்த்தும் சக்தி பிரார்த்தனைக்கு உண்டு.

9. எத்தனையோ சோதனைகள் வந்தாலும், இறைவன் அருளால் அவை விலகி விடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையைத் தந்து, வாழ்க்கையை நேசிக்கச் செய்வது பிரார்த்தனையே.

தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி இறைவனை மனதாரப் பிரார்த்திப்போம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com