நமது வீடுகளில் கண்ணாடி என்பது மிகவும் இன்றியமையாத ஒரு பொருளாகும். நமது பிம்பங்களை பிரதிபலிக்கும் கண்ணாடியை வீட்டில் வைத்திருப்பது அழகுக்காக என்பதையும் தாண்டி, வாஸ்து ரீதியாகவும் கண்ணாடி நமக்கு நிறைய பலன்களைத் தருகிறது. அதைப் பற்றித்தான் இந்தப் பதிவில் பார்க்க உள்ளோம்.
சிலர் எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும், எல்லாமே விரயம் ஆகிவிடுவது போல தோன்றும். எவ்வளவுதான் உழைத்தாலும் பணத்தை சேமித்து வைக்க முடியவில்லை என்று நினைப்பவர்கள், தங்கள் வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் கண்ணாடி இருப்பது போல வைத்தால் பண விரயம் அதிகம் ஆகாது.
கண்ணாடியை பூஜையறையில் வைப்பது மிகவும் நல்லதாகும். வீட்டில் கண்ணாடியை மாட்ட வேண்டிய திசைகள் கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய திசைகளில் மாட்டலாம். இதுவே பாத்ரூமில் கண்ணாடியை மாட்ட வேண்டிய திசைகள் கிழக்கு, வடக்கு திசைகளாகும்.
வீட்டில் வைத்திருக்கும் கண்ணாடி நன்றாக பளிச்சென்று இருக்க வேண்டியது அவசியமாகும். உடைந்த கண்ணாடி, இரசம் போன கண்ணாடி போன்றவற்றை வீட்டில் வைத்துக்கொள்ளாமல் அகற்றி விடுவது நல்லதாகும். உடைந்த கண்ணாடியை வீட்டில் வைத்திருப்பது கெட்ட சக்திகளை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது.
வீட்டில் கண்ணாடியை நிச்சயமாக வைக்கக் கூடாத இடம், படுக்கையறையாகும். படுக்கையறையில் கண்ணாடி வைப்பதால், கணவன் மனைவிக்குள் பிரச்னைகள் வரவும், நோய்கள் வருவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது.
அதேபோல, சிலர் கண்ணாடியை வீட்டின் வாசலில் வைத்திருப்பார்கள். அதாவது யாராவது வீட்டின் உள்ளே நுழையும்போது, கண்ணாடியை பார்த்துவிட்டு வருவது போல இருக்கும். இது திருஷ்டியை போக்கும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால், இப்படிச் செய்வதால், வீட்டிற்கு வர வேண்டிய செல்வமும் தடைப்பட்டு போகும் என்பது பலருக்குத் தெரிவதில்லை.
கண்ணாடியை வீட்டில் வைக்கும் உயரமானது சற்று மேலே இருக்க வேண்டும். அதாவது நாம் கண்ணாடியை சற்று எட்டிப்பார்ப்பது போல இருந்தால் அது நம் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்று நம்பப்படுகிறது. கண்ணாடியை நாம் குனிந்து பார்ப்பது போல வைக்கக் கூடாது, அது நம் வாழ்க்கை தரத்தை குறைத்து விடும் என்று சொல்லப்படுகிறது.
வெட்டவெளியான இடத்தை, முற்செடிகளை, வறண்ட நிலப்பரப்பு போன்றவற்றை கண்ணாடி பிரதிபலிக்கக் கூடாது. குழந்தைகள் படிக்கக்கூடிய இடத்தில் கண்ணாடி வைக்க வேண்டாம். அது குழந்தைகள் படிப்பை பாதிக்கும் என்று சொல்லப்படுவதால்.
பெரும்பாலும், வீட்டில் வைக்கக்கூடிய கண்ணாடிகள் செவ்வகமாக இருக்கலாம், வட்ட வடிவில் இருக்கலாம். ஓவல் வடிவம், அலங்காரம் செய்யப்பட்டு இருப்பது போன்றவற்றை வீட்டில் வைக்காமல் இருப்பது சிறந்ததாகும். அலங்காரம் செய்யப்பட்டுள்ள கண்ணாடியை காட்டிலும் பிரேம் போட்டு இருக்கும் கண்ணாடியை வீட்டிலும் மாட்டுவது சிறந்ததாகும். கண்ணாடியில் இருக்கும் பிரேம் தங்க நிறம், மஞ்சள் நிறம், பச்சை நிறம் ஆகிய நிறங்கள் இருக்கலாம்.
நம் பிம்பத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியில் நாம் தினமும் கவனிக்க வேண்டியது, நேற்று எப்படியிருந்தோம், இன்று எப்படியிருக்கிறோம், நாளை என்னவாகுவோம் என்பதைப் பார்த்து கற்றுக்கொண்டால், தானாகவே நம் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்துவிடும் என்பதில் ஐயமில்லை.