பக்தர் குறை தீர்க்கும் கந்த சஷ்டி விரத வழிபாடு!

நவம்பர் 2, கந்த சஷ்டி விரதம் ஆரம்பம்
Kanda Sashti Soorasamharam
Kanda Sashti Soorasamharam
Published on

திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழ்கிறது. வருடந்தோறும் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபட்டுச் செல்லும் முருகன் கோயில்களில் பழனி மலைக்கு அடுத்தபடியாக  திருச்செந்தூர் கோயில் இரண்டாம் இடத்தில் உள்ளது. தேடி வரும் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து, வேண்டும் வரங்களைத் தந்து, தலையெழுத்தையே மாற்றி அமைக்கும் கோயிலாக பக்தர்களால் கொண்டாடப்படுவது திருச்செந்தூர் முருகன் கோயில்.

இங்கே முருகனுக்குரிய திருவிழாக்கள் எல்லாமும் நடைபெற்றபோதிலும் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டி விழா நடைபெறுகிறது. இது ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையை அடுத்த பிரதமையன்று ஆரம்பித்து, சஷ்டி வரை 6 நாட்கள் கொண்டாடப்படுகிறது. சூர சம்ஹாரம் நாள் தீமையின் மீது நன்மையின் வெற்றியைக் கொண்டாடும் திருநாளாக அமைந்துள்ளது. புராணங்களின்படி முருகப்பெருமான் தனது தாய் பார்வதி அளித்த சக்தி வேலைக் கொண்டு சூரபத்மன் என்னும் அரக்கனை வதைத்த நாள்தான் சூர சம்ஹாரத் திருநாள் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள முருகன் கோயில்கள் அனைத்திலும் சூர சம்ஹாரத் திருவிழா மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படும். ஆனால், இவை யாவற்றிலும் திருச்செந்தூர் முருகன் கோயில் சூர சம்ஹாரத் திருவிழாவே மிகவும் பிரம்மாண்டமாகவும் மிகவும் விமரிசையாகவும் நடத்தப்படும் விழாவாகும்.

இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா இன்று தொடங்கி, வரும் 9ம் தேதி வரை திருச்செந்தூரில் நடைபெற இருக்கிறது.  கொடியேற்றத்துடன் துவங்கும் இந்த விழாவில் நவம்பர் 7ம் தேதி சூர சம்ஹாரமும், 8ம் தேதி முருகன் தெய்வானை திருக்கல்யாண நிகழ்வும் நடைபெற இருக்கிறது.

தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், மற்றும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளிலிருந்தும் இந்த கந்த சஷ்டி திருவிழாவின் ஆறாம் நாளான சூர சம்ஹாரத்தன்று ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் மக்கள் திருச்செந்தூர் வருகின்றனர். திருச்செந்தூரில் சூர சம்ஹாரத்தன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படும். 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், நடுப்பகல்  ஒரு மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறும். மாலை 4.30 மணிக்கு மேல் கடற்கரையில் சுவாமி ஜயந்திநாதர் சூரனை வதம் செய்கிறார். 

தொடர்ந்து. சந்தோஷ மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. அதன் பின் சுவாமியும் அம்பாளும் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து மகாதேவர் சன்னிதி முன்பு சாயாபிஷேகம் நடைபெறும். சூர சம்ஹாரத்தன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.

முதலில் மாயையே உருவான யானைமுகனையும், பின்னர்  சிங்கமுகாசுரனையும் தொடர்ந்து ஆணவமே உருவான சூரபத்மனையும் சுவாமி ஜயந்திநாதர் வேல் கொண்டு அடுத்தடுத்து வதம் செய்கிறார். இறுதியாக மாமரமும், சேவலுமாக உருமாறி வரும் சூரபத்மனை சேவலும் மயிலுமாக மாற்றி சுவாமி ஆட்கொள்கிறார். மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் சுவாமி வைத்துக் கொள்கிறார்.

இதையும் படியுங்கள்:
‘தவறு செய்தால் தண்டனை நிச்சயம்’ என்பதை உணர்த்தும் கோயில்!
Kanda Sashti Soorasamharam

இந்தப் போரில் வீரபாகு உள்ளிட்ட வீரர்கள் முருகனுக்கு உதவியாக இருந்தனர். முருகப்பெருமான் சூரபத்மனை அழித்த நாள்தான் வருடத்தில் ஒரு முறை சூர சம்ஹாரத் திருவிழா என்று கொண்டாடப்படுகிறது. மொத்தத்தில் சூரபத்மன் என்னும் இந்த அரக்கனை அழிக்கவே முருகனின் அவதாரம் உண்டானது என்று சொல்லப்படுகிறது. இந்தப் போர் மூன்று இடங்களில், தரைவழிப் போராக திருப்பரங்குன்றத்திலும், விண்வழிப் போராக திருப்போரூரிலும் மற்றும் கடல்வழிப் போராக திருச்செந்தூரிலும் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

கந்த சஷ்டி ஆறு நாட்களும் திருச்செந்தூர் கோயிலில், ஆங்காங்கே தங்கி அங்கே கொடுக்கப்படும் பிரசாதத்தை மட்டுமே உண்டு விரதம் இருக்கும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பார்கள்.  வீட்டிலேயே விரதம் மேற்கொள்பவர்கள், காலையில் குளித்து  விட்டு முருகன் திரு உருவப்படத்திற்கு பூ அலங்காரம் செய்து பூஜை செய்து, வெறும் பால் பழம் மட்டுமே அதுவும் ஒரு வேளை மட்டுமே உட்கொண்டு விரதம் இருக்கலாம்.  நாமும் பக்தியோடு கந்த சஷ்டி ஆறு நாட்களும் விரதம் இருந்து அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று கருணைக் கடவுளாம் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா பயன்களையும் அடைவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com