பக்தரின் பெருமையை உலகுக்கு உணர்த்த பெருமாள் செய்த லீலை!

Tirupati Perumal
Tirupati Perumalhttps://x.com
Published on

ஹாதிராம் பாலாஜி என்னும் துறவி ஒருவர் திருப்பதி மலையில் உள்ள காட்டில் தங்கி இருந்தார். அவரது பக்தியை கண்டு வியந்த ஏழுமலையான் அவரை சந்திக்க விரும்பினார். ஒரு நாள் இரவு  அர்த்த ஜாம பூஜை முடிந்து நடையை சாத்தியதும் கிளம்பிய ஏழுமலையான், துறவியின் குடிலை அடைந்தார். சுவாமியை கண்டதும் பாலாஜி எனக் கூவினார் ஹாதிராம். பிறகு ஏழுமலையானை ஆசனத்தில் அமரச் செய்து பழங்கள் கொடுத்து உபசரித்தார்.

“எப்போதும் பக்தர் கூட்டம், பூஜை புனஸ்காரம் என்றே எனது பொழுது கழிகிறது. விளையாட்டாகப் பேசி மகிழவே உன்னைத் தேடி வந்தேன். சொக்கட்டான் விளையாடலாமா?” எனக் கேட்டார். திக்கு முக்காடி போன ஹாதிராம், இதைவிட வேறு பாக்கியம் என்ன வேண்டும் என்று பகடைகளை எடுத்து பகவானிடம் கொடுத்தார். இருவரும் விளையாட பொழுது போனதே தெரியவில்லை. பொழுது புலர்ந்ததும் கோயிலில் சுப்ரபாத சேவைக்காக பட்டாச்சாரியார்கள் ஆயத்தம் செய்தனர். ‘ஆகா, பொழுது புலர்ந்து விட்டதே. கோயிலுக்குக் கிளம்புகிறேன். மீண்டும் இன்று இரவு வருகிறேன்” என மறைந்தார் ஏழுமலையான். பகலில் கோயிலில் இருப்பதும் இரவு வந்ததும் ஹாதிராம் குடிலுக்குச் செல்வதும் தொடர்கதை ஆனது.

ஒரு நாள் ஹாதிராமின் பக்தியை உலகறியச் செய்ய விரும்பிய ஏழுமலையான், தனது ரத்தின மாலையை ஹாதிராமின் குடிலில் மறைத்து வைத்துவிட்டு சென்றார். சுவாமியின் கழுத்தில் மாலை இல்லாததைக் கண்ட பட்டாச்சாரியார்கள் பதற்றம் அடைந்தனர். மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு செய்தி பறந்தது. அவர் திருடனைக் கண்டுபிடிக்க உத்தரவிட்டார். குடிலில் கிடந்த இரத்தின மாலையை கண்ட ஹாதிராம் அதைக் கோயிலில் ஒப்படைப்பதற்காகப் புறப்பட்டார். அவரைக் கண்ட காவலர்கள் அவரை மன்னரிடம் இழுத்துச் சென்றனர்.

இதையும் படியுங்கள்:
மஹாளய பட்ச தர்ப்பணமும்; அன்னதானமும்!
Tirupati Perumal

அப்போது ‘தினமும் இரவு ஏழுமலையான் தன்னுடன் விளையாட வந்ததையும் வந்த இடத்தில் மாலையை மறந்து விட்டுச் சென்றதையும் ஹாதிராம் தெரிவித்தார். ஆனால் அதை யாரும் நம்பவில்லை. அதேநேரம் தண்டிக்கவும் இல்லை. ‘‘நாங்கள் வைக்கும் சோதனையில் நீ வெற்றி பெற்றால் இதை நம்புகிறேன். அதற்காக ஒரு கட்டு கரும்பு உங்களுக்குத் தரப்படும். இன்று இரவுக்குள் அதை நீ காலி செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார் மன்னர்.

அதன்படி கரும்புடன் ஹாதிராம் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் தியானத்தில் இருந்தபோது ஏழுமலையான் அருளால் யானை ஒன்று பூட்டிய அறைக்குள் தோன்றி அத்தனை கரும்புகளை தின்று முடித்தது.

பூட்டிய அறைக்குள் யானை புகுந்ததைக்  கண்ட காவலர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இந்த அதிசயத்தை கண்ட மன்னரும் ஹாதிராமை விடுவித்தார். ஏழுமலையான் பக்தியில் ஈடுபட்டு வாழ்ந்த ஹாதிராம் வாழ்வின் இறுதியில் பெருமாளின் திருவடியில் கலந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com