நமது இந்து மதத்தில் பொதுவாகவே, ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு உயிரினம் சம்பந்தப்பட்டிருக்கும். அந்த வகையில் சிவபெருமான் என்றால் நந்தி எனும் காளையும், மகாலட்சுமி என்றால் கோமாதா எனப்படும் பசுவும் நினைவுக்கு வரும். எத்தனையோ உயிரினங்கள் இருக்க, சிவபெருமானும் மகாலட்சுமியும் முறையே காளையையும், பசுவையும் தேர்ந்தெடுத்து ஏன் தம்மை அடையாளப் படுத்திக்கொண்டனர். இதைக் கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தால் நிச்சயம் ஒரு காரணம் புலப்படும்.
மனிதர்களின் வாழ்வை வளமாக்குவதோடு, தர்மத்தின் மறு உருவமாகவே காளை பூஜிக்கப்படுகிறது. நமது புராண, இதிகாசங்களில் காளை தருமத்தின் குறியீடாக விளங்குவதை அறியலாம். காளையை சிவபெருமான் தனது வாகனமாகக் கொண்டதும் இதனால் கூட இருக்கலாம். மேலும், தர்மம் என்பதன் பொருள் நிலையானது என்பதாகும். அதாவது, காலம் காலமாக மனிதர் செழிக்க உதவுவது விவசாயம். அந்த வேளாண்மைக்கு பேருதவியாக விளங்குபவை காளை எனும் உட்கருத்தும் ஏற்றுக்கொள்ளும்படியே உள்ளது. மனிதர்தம் நல்வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும் காளைக்கு நன்றி செலுத்தி வணங்கிய பின்னரே பக்தர்கள் தன்னை சேவிக்க வேண்டும் என்பதற்காக தம்முன் வீற்றிருக்க ஈசன் திருவுளம் கொண்டாரோ என்னவோ!
அதேபோல் கோமாதா எனப்படும் பசு, மகாலட்சுமி உறையும் உயிராகவும் அன்னை சக்தியின் அம்சமாகவும் கருதப்படுகிறது. பாற்கடலை கடைந்தபோது அதிலிருந்து வெளிப்பட்ட வஸ்துக்களில் காமதேனுவும் ஒன்று. தேவாதி தேவர்கள் அனைவரும் காமதேனுவின் உடலில் வாசம் செய்வதாக ஐதீகம். பெற்ற தாய்க்கு நிகராக பால் தந்து சிறு சிசுக்களின் பசிப் பிணி போக்கும் கருணைக் கடாட்சமாக பசுக்கள் விளங்குகின்றன. அது மட்டுமின்றி, உயிர்த் தொழிலாம் வேளாண்மை செழிக்க சாணம் போன்ற உரங்களைத் தந்து உழவர்தம் வாழ்வையும் பசு செழிக்கச் செய்வதால், பசுவை உலகைக் காக்கும் உமையவளோடும், தாயார் மகாலட்சுமியோடு உருவகப்படுத்துவதில் வியப்பொன்றுமில்லைதானே.
இதேபோல், ஆதிசேஷன் எனப்படும் நாகம், கருடன் எனப்படும் கழுகு, பைரவர் எனப்படும் நாய் போன்றவையும் நாம் வணங்கும் கடவுளர்களின் அடையாளமாக மாற்றிய முன்னோர்களின் செயலில் நிச்சயம் ஏதோ ஒரு செய்தி மறைந்திருக்கத்தான் செய்யும்.