வீடுகளில் அழகுக்காக பல செடிகளை வளர்க்கிறோம். சில செடிகளை, மரங்களை நல்ல சுற்றுச்சூழலை தர வளர்க்கிறோம். சில வகை செடிகளை ஆன்மிக ரீதியாக வளர்க்கிறோம். பொதுவாக மா, பலா, வாழை, துளசிச்செடி போன்றவை மங்களகரமாக வீட்டில் வளர்க்கப்படுகின்றன. இந்த பட்டியலில் விடுபட்ட ஒன்று தான் சங்குப்பூ. அரிதாக சிலர் வீடுகளில் சங்குப்பூ செடி அழகிற்காக வளர்ப்பதை பார்த்திருப்போம். இது அழகிற்கு மட்டுமல்ல இறைவனுக்கும் உகந்த பூவாக உள்ளது. இந்த சங்குப்பூவில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று நீல நிற சங்குப்பூ மற்றொன்று வெள்ளை நிற சங்குப்பூ. இந்த சங்குப்பூவை நமது வீட்டில் வைத்து வளர்ப்பதினால் என்ன நற்பலன்கள் கிடைக்கும் என்ற தகவல்களை பார்ப்போம்.
நீல நிற சங்குப்பூ:
நீல நிற சங்குப்பூவில் நீலகண்டரான சிவன், ஶ்ரீ கிருஷ்ணர், சனீஸ்வரர் ஆகிய மூன்று தெய்வங்கள் வசிப்பதாக கூறுகின்றனர். இந்த நீல வண்ணம் மகாவிஷ்ணு வசிக்கும் பாற்கடலை குறிக்கிறது. இந்த மூன்று தெய்வங்களுக்கு இந்த நீல நிற சங்குப்பூவை அர்ப்பணம் செய்யலாம். மகாவிஷ்ணுக்கு பிடித்தமான பூவாகும். இந்த பூவை வீட்டில் வளர்ப்பதினால் மகாவிஷ்ணு அங்கு வாசம் செய்வார். மகாவிஷ்ணு இருக்கும் இடத்தில் தான் மஹாலஷ்மி தேவியும் குடியேறுவாள். இந்த பூவில் மகாலக்ஷ்மி வாசம் செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது .
மகாவிஷ்ணுவுக்கு இந்த பூவை தினமும் வைத்து பிராத்தனை செய்தால் மகாவிஷ்ணுவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இதன் மூலம் இல்லத்தில் நிம்மதி, ஆனந்தம், மகிழ்ச்சி ஆகியவை நிலைத்திருக்கும். சகல செல்வங்களும் பெருகும்.
மகாலக்ஷ்மிக்கு இந்த பூவை வைத்து பிராத்தனை செய்யும் போது வீட்டில் செல்வம் தன தான்யமும் வளரும். எந்த செயலை தொடங்கினாலும் அந்த செயல் வளர்ந்து தடையின்றி நிறைவேறும். நினைத்த செயல்கள் கை கூடும். மஹாலக்ஷ்மியின் வாசத்தால் இல்லத்தில் சுபிட்சம் பெருகி மங்களம் உண்டாகும் .
வெள்ளை நிற சங்குப்பூ:
வெண்மை நிறம் அனைத்து தெய்வங்களுக்கும் உரியது. எந்த தெய்வத்திற்கும் வெள்ளை நிற சங்குப்பூவை வைத்து வழிபாடு செய்யலாம். பொதுவாக வெண்மை நிற பூ பிரம்ம தேவருக்கும் சரஸ்வதி தேவிக்கும் உகந்தது. வெள்ளை நிற பூவில் தான் சரஸ்வதி தேவி வாசம் செய்கிறாள். சரஸ்வதி தேவிக்கு இந்த வெள்ளை நிற சங்குப்பூவை வைத்து வழிபட்டால், அவளது அருள் பரிபூரணமாக கிடைக்கும். ஒருவருக்கு அறிவை தரக் கூடியவர் சரஸ்வதி என்பதால் அவரை வணங்க வேண்டியது கட்டாயம்.