புல்லாங்குழல் வைத்திருக்கும் ஸ்ரீகிருஷ்ணரை வீட்டில் வைத்து வழிபடலாமா?

புல்லாங்குழல் வைத்திருக்கும் ஸ்ரீகிருஷ்ணரை வீட்டில் வைத்து வழிபடலாமா?

மீபத்தில் நவராத்திரிக்காக பொம்மைகள் வாங்க கடைத்தெருவுக்குச் சென்றிருந்தேன். அப்பொழுது அங்கு வந்திருந்த ஒரு பெண்மணி, ‘கிருஷ்ணர் பொம்மை வேண்டும்’ என்று கேட்டார். கடைக்காரரும் கிருஷ்ணர் பொம்மையை எடுத்துக் கொடுத்தார். அவர் கொடுத்த கிருஷ்ணர் பொம்மை புல்லாங்குழல் வைத்திருப்பதாக இருந்தது. அந்தப் பெண்மணி உடனே, ‘வேண்டாங்க. புல்லாங்குழல் வைத்திருக்கிற கிருஷ்ணர் வேண்டாம். அது இல்லாமல் இருக்கிற கிருஷ்ணராக இருந்தால் கொடுங்கள்’ என்று கேட்டார்.

‘எதற்காக அப்படி கேட்கிறீர்கள்’ என்று நான் கேட்டபொழுது, ‘புல்லாங்குழல் வைத்திருக்கும் கிருஷ்ணரை வீட்டில் வைத்தால், புல்லாங்குழல் ஊதுவது போல் நம்முடைய சௌபாக்கியம் அத்தனையும் ஊதி விடுவார் என்று பலரும்   சொல்கிறார்கள்’ என்றார்.

கிருஷ்ணர் எதற்காக தனது பக்தர்களின் சௌபாக்கியத்தை அழிப்பார்? எனக்கு இது புரியவில்லை. உண்மையிலேயே புல்லாங்குழல் வைத்திருக்கும் கிருஷ்ணரை வீட்டில் வைத்து ஆராதிக்கக் கூடாதா என்று ஆன்மிகம் சம்பந்தப்பட்ட நூல்களில் தேடலானேன். அதன் வெளிப்பாடே இந்தக் கட்டுரை.

கிருஷ்ணரை வழிபட விரும்புவோர், அவரை கிருஷ்ணராகத்தான் வழிபட வேண்டும். அதாவது, கிருஷ்ணருடைய திருமேனியைப் பற்றி புராணங்களில் எப்படி வர்ணிக்கப்பட்டுள்ளதோ, அதன்படிதான் கிருஷ்ணரின் படங்களோ, கிருஷ்ணரின் விக்ரஹங்களோ அமைய வேண்டும். அப்போதுதான் கிருஷ்ணர் கிருஷ்ணராக இருப்பார்.

‘பிரம்ம ஸம்ஹிதை’யில் பிரம்மதேவரானவர், கிருஷ்ணரின் திருமேனியின் அழகை பின்வருமாறு போற்றுகிறார்.

‘வேணும் க்வணந்தம் அரவிந்த-தலாயதாக்ஷம்-

பர்ஹாவதம்ஸம் அஸிதாம்புத-ஸுந்தராங்கம்

கந்தர்ப-கோடி-கமனீய-விஷேஷ-ஷோபம்

கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி’

இதன் பொருள் என்னவென்றால், ‘புல்லாங்குழலை வாசிப்பவரும், தாமரை மலரைப் போன்ற கண்களை உடையவரும், மயிலிறகினை தலையில் அணிந்தவரும், கார்மேக நிற மேனி கொண்டவரும், கோடிக்கணக்கான மன்மதர்களை வசீகரிக்கும் பேரழகு கொண்டவரும், ஆதி புருஷருமான கோவிந்தனை நான் வழிபடுகிறேன்’ என்பதாகும்.

மோதகம் இல்லாத விநாயகப் பெருமான், சங்கு சக்கரம் இல்லாத மகாவிஷ்ணு, வில் அல்லாத ராமச்சந்திர மூர்த்தி, மானும், மழுவும் இல்லாத சிவபெருமானை தரிசித்திருக்க மாட்டோம். தெய்வங்களுக்கு உண்டான அடையாளமே அவர்கள் கையில் வைத்திருக்கும் ஆயுதம்தான். ஸ்ரீகிருஷ்ண பகவான் என்றால் ஜகத்தையே மயக்கிய அவரது புல்லாங்குழல்தானே அவரது அடையாளம்.

ஆகையால், தெய்வங்களின் கையில் உள்ள ஒரு சாதனமோ ஆயுதமோ, அது பக்தர்களை அழிப்பதற்கு என்கிற தவறான எண்ணங்களைக் களைய வேண்டும். நமக்குக் கெடுதல் நேர்ந்தால் அது நம்முடைய கர்ம வினைப்பயன் என்பதை மனதில் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com