சந்திர தோஷம் தீர்க்கும் திருமவுலீஸ்வரர்!

சந்திர தோஷம் தீர்க்கும் திருமவுலீஸ்வரர்!
Published on

கும்பகோணத்திலிருந்து காரைக்கால் செல்லும் வழியில் திருநீலக்குடி என்ற தலத்தின் அருகே கொத்துக்கோவில் என்னுமிடம் உள்ளது. இங்கிருந்து அரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மேலையூர் சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில். இந்தத் தலத்தின்புராணகாலப் பெயர் உன்னதபுரம் என்பதாகும். சந்திரமவுலீஸ்வரர் கோயில் ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சியளிக்க, இந்தக் கோயில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறது.

ஒரு சமயம் காஞ்சி மகாபெரியவர் திருத்தல யாத்திரை மேற்கொண்டிருந்த சமயம் இந்தத் தலத்துக்கு விஜயம் செய்தார். அவர் இந்தப் பதிக்கு வந்து சேர்ந்த சமயம் இரவு நேரம் என்பதால் அவர் இங்கேயே தங்க நேர்ந்தது. அன்று இரவு மகாபெரியவர் கனவில் தோன்றிய இறைவன், ‘சந்திரமவுலீஸ்வரராக யாம் இத்தலத்தில் அருளாட்சி புரிய ஓர் ஆலயம் எழுப்புக’ என்று கூறி மறைந்தார். அதன்படி, காஞ்சி மகா பெரியவர் இந்தத் தலத்திலேயே தங்கி, ஊர் மக்கள் உதவியுடன் இங்கு ஒரு கோயிலைக் கட்டி முடித்து கும்பாபிஷேகமும் நடத்தி வைத்தார். இறைவனுக்கு சந்திரமவுலீஸ்வரர் என்றும், இறைவிக்கு ஆனந்தவல்லி என்றும் பெயர் சூட்டி வணங்க, அதுவே இன்றளவும் இறைவன், இறைவி திருநாமமாக நிலைத்துவிட்டது.

கோயிலின் உள்ளே நுழைந்தால் விசாலமான பிராகாரம். எதிரே நந்தி பகவான் தனி மண்டபத்தில் காட்சி தருகிறார். அதைத் தொடர்ந்து மகாமண்டபம். அதன் எதிரே நந்தியும், பலி பீடமும் உள்ளன. அடுத்துள்ள அர்த்த மண்டபத்தின் நுழைவுவாசலின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் தண்டாயுதபாணியும் அருள்பாலிக்கின்றனர். உள்ளே கருவறையில் இறைவன் லிங்கத் திருமேனியராக சந்திரமவுலீஸ்வரர் எனும் திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார்.

மகாமண்டபத்தின் வலதுபுறம் அம்பிகை ஆனந்தவல்லி நின்ற திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன் சாந்த முகத்துடன் புன்னகை தவழ, வலது மேல் கரத்தில் ருத்ராட்ச மாலையும், இடது மேல் கரத்தில் பத்மமும், கீழ் வலது கரத்தில் அபய ஹஸ்த முத்திரையுடனும், கீழ் இடது கரத்தில் வரத ஹஸ்த முத்திரையுடனும் காட்சி தருகிறார். தேவகோட்டத்தின் தெற்கே தட்சிணாமூர்த்தியும், பிராகாரத்தின் மேற்கு திசையில் பிள்ளையார், விசாலாட்சி, விசுவநாதர், வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், சுந்தரேசுவரர், மீனாட்சி, நாகர், கஜலட்சுமி ஆகியோர் திருமேனிகள் உள்ளன. வடக்குப் பிராகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னிதி அமைந்துள்ளது. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்கின்றனர். கிழக்கு பிராகாரத்தில் சனி பகவான், சூரியன் மற்றும் பைரவர் திருமேனிகள் உள்ளன. ஆலயத்தின் தலவிருட்சம் வில்வம்.

ஜாதகத்தில் சந்திர தோஷம் உள்ளவர்கள் இக்கோயில் இறைவனையும் இறைவியையும் அபிஷேகம் செய்து வழிபட்டு, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைத்து, அதனை பக்தர்களுக்கு வினியோகம் செய்தால் சந்திர தோஷம் விலகும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இக்கோயிலில் சிவராத்திரி, பிரதோஷம், நவராத்திரி, புத்தாண்டு, சோமவாரம், ஆடி வெள்ளி, தை வெள்ளி, கார்த்திகை போன்ற நாட்களில் சுவாமிக்கும் அம்பிகைக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி மாத அன்னாபிஷேகத்தைக் காண இக்கோயிலில் திரளாக பக்தர்கள் கூடுவது வழக்கம். இந்தக் கோயிலுக்குச் செல்ல கும்பகோணத்தில் இருந்து நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com