சிதம்பர ரகசியம்: திரை விலகும் நிஜம்!
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் கொட்டிக் கிடக்கும் அதிசயங்கள் ஏராளம். இக்கோவில் அமைந்துள்ள புவியியல், கட்டடம் கட்டப்பட்டிருக்கும் விதம் போன்றவை அதிசயத்தின் உச்சமாக கருதப்படுகிறது. இருப்பினும் அதையும் தாண்டி பலக்காலங்களாக சிதம்பர ரகசியம் என்றால் என்ன? என்று இந்த கோவிலை அதனுடன் தொடர்புப்படுத்தி பேசி வருகிறார்கள். பலரும் அந்த ரகசியத்தை அறிந்துக் கொள்ள முனைப்புடன் இருக்கிறார்கள். உண்மையிலேயே சிதம்ப ரகசியம் என்றால் என்ன? என்பதை இப்பதிவில் காண்போம்.
சிதம்பர நடராஜர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாயத்திற்கு உரிய தலமாகும். நடராஜர் இத்தலத்தில் உருவமாகவும், அருவமகவும் இணைந்து அருவுருவமாக காட்சியளிக்கிறார். அப்படி அவர் அளிக்கும் காட்சியை, பக்தி கண்களால் மட்டுமே தரிசிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.
இக்கோவில் அமைந்திருப்பது சரியாக பூமியின் பூமத்திய ரேகையின் மையப்பகுதியாகும். பஞ்சபூத தலங்களில் தில்லை நடராஜர் கோவில், காலஹஸ்தி கோவில், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில், சிதம்பர நடராஜர் கோவில் இவை அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இக்கோவிலின் அமைப்பு மனித உடலை பிரதிபலிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது இக்கோவிலில் உள்ள 9 நுழைவாயில்களும் மனித உடலில் உள்ள 9 வாயில்களை குறிப்பதாக உள்ளது. சிதம்பர நடராஜர் ஆடும் ஆனந்த நடனத்தை Cosmic dance என்று கூறுகிறார்கள்.
இக்கோவிலில் உள்ள விமானத்தின் மேல் உள்ள பொற்கூரை 21,600 தங்கத்தகடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிப்பதை குறிக்கிறது. இந்த 21,600 தகடுகளில் 72,000 ஆணிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கிறது.
நடராஜர் சன்னதிக்கு அருகில் வலப்பக்கத்தில் ஒரு சிறிய வாயில் அமைந்துள்ளது. அதுவே சிதம்பர ரகசிய பீடமாகும். இங்கே திருவுருவம் எதுவுமில்லை. இந்த சிதம்பர ரகசிய பீடம் நீலநிறத்திரையால் மூடப்பட்டிருக்கும். அந்த திரை விலக்கப்பட்டு கற்பூர ஆராத்தி காட்டப்படும் போது தங்கத்தால் செய்யப்பட்ட வில்வமாலை தொங்கும் காட்சியைக் காண முடியும்.
அதனுள் எந்த சிலையும் உருவமும் இருக்காது. இது தான் சிதம்பர ரகசியத்தின் பொருளாக சொல்லப்படுகிறது. அங்கே காணப்படும் வெட்டவெளி, 'இந்த உலகில் நாம் சேர்த்து வைக்கும் எதுவுமே நிரந்தரமில்லை' என இறைவன் ஆகாய வடிவில் இருந்து நமக்கு உணர்த்துவதாக கூறப்படுகிறது. இந்த ரகசியத்தை தரிசித்தால் பிறவிப் பயனை அடையலாம் என்பது நம்பிக்கை. இது தான் காலம் காலமாக சிதம்பர ரகசியமாக போற்றப்படுகிறது.