குழந்தை வளர்ப்பும் கோகுலக் கண்ணனும்!

குழந்தை வளர்ப்பும் கோகுலக் கண்ணனும்!
Published on

கோகுலத்தில் நீல வண்ணக் கண்ணனின் வளர்ப்பு முறையில் தற்போதைய அறிவியல் கோட்பாடுகள் பொதிந்து கிடக்கின்றன. நள்ளிரவில் மழையுடன் அவதரிக்கின்றான் வாசுதேவன். கம்சனால் அவனுக்கு ஆபத்து வரலாம் என்று பயந்த தந்தை, குழந்தையை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்கிறார். இரவு நேரம், மழை, பெருக்கெடுத்து ஓடும் யமுனா நதி, இவற்றை எல்லாம் மீறி பிறந்து சிறிது நேரமே ஆன  சிசு, பட்டுத்துணியில் சுற்றப்பட்டு பெட்டியில் வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இன்றைய குழந்தை மருத்துவத்திலும் குழந்தையை வேறு இடத்துக்குக் கொண்டு செல்லும்போது நேரம், தூரம், சிசுவின் எடை இவற்றைப்பற்றி  பயப்படக்கூடாது. குழந்தை வெதுவெதுப்பாக பராமரிக்கப்பட Transport Incubator அல்லது பெரிய செவ்வக தெர்மாக்கோல் பெட்டியில் இரண்டு பக்கமும் 10 செ.மீ விட்டத்தில் வட்டமாக துளையிட்டு குழந்தையை எடுத்துச் செல்ல வேண்டும். இதனால் பல சிசுக்களின் உயிரைக் காப்பாற்ற முடியும். பெற்றோரால் பராமரிக்க முடியாத குழந்தையை வேறு பெற்றோரிடம் விடுவதும் அன்றே நடந்திருக்கின்றது.

யசோதையின் பராமரிப்பில் வளர்ந்த கண்ணனுக்கு அவள் தாய்ப்பால் கொடுத்து வளர்த்தாள் என்பதற்கு  ஆதாரங்கள் உள்ளன! சிசு பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் தவிர கோடை காலத்திலும் தண்ணீரும் கூட  தரத் தேவையில்லை என்கிறது உலக சுகாதார நிறுவனம். குழந்தையைப் பெற்ற தாய் ஏதோ காரணத்தால் தாய்ப்பால் தர இயலாத சூழ்நிலையில்  மற்ற தாய்மார்கள்  குழந்தைக்கு பால் தரலாம் என்று மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தையைத் தன் பக்கம் ஈர்க்கிறாள் பெற்றவள் ! இது தாய் சேய்   பாசப்பிணைப்பில் ஒரு முக்கியமான அம்சம். இந்த நோக்கத்தோடு பூதனை என்ற அரக்கி கண்ணனை தன் பக்கம் இழுக்க முயற்சித்தாள்! அடிப்படையான எண்ணம்  தவறானதால் தன் உயிரையே இழந்தாள்.

யசோதைக்கு உலகமே கண்ணன்தான். சுற்றி இருந்த அனைத்து மகளிரையும் குழந்தை வளர்ப்பில் ஈடுபடுத்தினாள். அவனுடன் பேசுவது, விளையாடுவது, கதை சொல்வது என்று குழந்தையுடன் அதிக நேரம் செலவழித்தாள். தாய் தன் குழந்தையுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்பதுதான் இன்றைய குழந்தை மருத்துவர்கள் எதிர்பார்ப்பு.

ஸ்ரீராமனின் கதைகளை குழந்தை கண்ணனுக்கு ஈடுபாட்டுடன் சொல்கிறாள் யசோதை. குழந்தை தூங்க ஆரம்பிக்கிறது. மனதில் இறைவனின் கதையுடன் குழந்தை அமைதிப்படுகிறது. சீதையை ராவணன் தூக்கிச் செல்கிறான் என்று சொன்னபோது, ‘லஷ்மணா வில்லை எடு’ என்று ஆணையிடுகிறான் கண்ணன்! இதில் இரண்டு செய்திகள் பொதிந்துள்ளன. கதைகளைச் சொல்லி குழந்தையை தூங்க வைக்க வேண்டும் . திரைகளைப் பார்த்துக் கொண்டு உறங்க வைக்கக்கூடாது. சீதை அபகரிக்கப்படுகிறாள் என்ற செய்தியைக் கேட்டதும் கண்ணன் பதறுகிறான், வில்லை எடுக்க யத்தனிக்கிறான். அதாவது, வன்முறையைக் கதையாகக் கேட்கும் குழந்தையே வில்லை எடுக்கச் சொல்கிறது என்றால் இன்றைக்கு எல்லாவற்றையும் திரையில் பார்க்கும் குழந்தைகளின் அடி மனதில் ஆழமாக வன்முறை பதியுமே!

குழந்தை பருவத்தில் நண்பர்களுடன் விளையாடுவது  முக்கியம். வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் குழந்தையின் மனம், உணர்வு, உடல் ஆகியவை பலம் பெற இவை உதவும். கண்ணனின் கோகுல லீலைகள் யாவும் நண்பர்களுடன் நடந்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்! விளையாட்டு மட்டுமல்லாமல் கல்வியும் தரப்பட்டிருக்கிறது. இறைக் குழந்தை குரு சாந்தீபினியிடம் குருகுல வாசம் இருந்து கல்வி கற்கிறது. அங்கு கிடைத்த நண்பன்தான் குசேலர்.

தயிர், பால், வெண்ணையுடன் கோகுலத்தில் இடைச்சிறுவனாகவே வளர்ந்தான் கிருஷ்ணன். ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து வெண்ணை, தயிர், பால், நிறைய தின்பண்டங்கள் ஆகியவற்றைத் தின்றான். வளரும் குழந்தை தினமும் ஐந்து ஆறு முறை உண்ண வேண்டும். இயற்கையான நொறுக்கு தீனிகள் தரப்பட வேண்டும். ஐந்து வயது வரை குழந்தை சாப்பிட நினைக்கும் போதெல்லாம் ஏதாவது தர வேண்டும். அவை புரதமும் மாவு சத்தும் நிறைந்ததாக இருக்க வேண்டும். இவை சத்துப் பற்றாக்குறையைத் தடுக்கும். நமது வீட்டிலும் இயற்கை தின்பண்ட வகைகளான முறுக்கு, சீடை, தேன்குழல், அப்பம், சுண்டல், அவல், பால், பானகம், வெண்ணை ஆகியவற்றை குழந்தைகளுக்குத் தரலாமே.

தாய்ப்பால், சத்தான உணவு, நண்பர்கள், கதைகள், விளையாட்டுகள் இவைகள்தான் குழந்தையின் உடல், மனம் மற்றும் உணர்வுகளைப் பேணி வளர்க்கும் என்பதை கண்ணனின் கதை காட்டுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com