பங்குனி உத்திரமும் குலதெய்வ வழிபாடும் - என்ன தொடர்பு? இருக்கே!

Kula Deivam
Panguni Uthiram
Published on

குலதெய்வ வழிபாடு என்பது நமது குலத்தைக் காக்கும் தெய்வத்திற்கு நாம் செய்யும் மரியாதை. நம் முன்னோர்கள் தொன்றுதொட்டு குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்திச் சென்றுள்ளனர். நாம் எந்த கோயிலுக்குச் செல்வதென்றாலும், முதலில் குலதெய்வத்தை வணங்கி விட்டுத் தான் செல்ல வேண்டும். அப்போது தான் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும். பல கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக இன்றளவும் குலதெய்வ வழிபாடு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சொந்த ஊரில் உள்ளவர்களால் குலதெய்வத்தை அடிக்கடி வணங்க முடியும். ஆனால் வேலை காரணமாக வெளியூரில் வசிப்பவர்களுக்கு குலதெய்வ வழிபாடு என்பது கடினமாகவே இருக்கும். இந்நிலையில் வருடத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வத்தை அனைவரும் வழிபட வேண்டும் என்ற நோக்கத்தில், பங்குனி உத்திர நாளை குலதெய்வ வழிபாட்டிற்கும் ஏற்றதாக முன்னோர்கள் வகுத்தனர்.

பங்குனி உத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த தினமாயிற்றே... இத்தினத்தில் குலதெய்வ வழிபாடு செய்வது சரிதானா என நீங்கள் நினைக்கலாம். ஆனால் பங்குனி உத்திரம் முருகருக்கு மட்டும் சுபதினம் அல்ல; அனைத்து தெய்வங்களுக்கும் சுபதினம் தான். இந்நாளில் தெய்வங்களின் திருக்கால்யான வைபவங்கள் நடக்கும்; சிவாலயங்களில் பங்குனி பெருவிழாவும் கொண்டாடப்படும்.

தமிழ் மாதத்தின் கடைசி மாதமான பங்குனியும், கடைசி நட்சத்திரமான உத்திரமும், பௌர்ணமியில் சேரும் நாள் தான் பங்குனி உத்திரம். இந்நன்னாளில் முருகப்பெருமானுக்கும், இந்திரன் மகள் தேவசேனைக்கும் திருமணம் நடந்தேறியது. முருகரை நாம் வணங்க வேண்டுமென்றாலும், அதற்கு நம் குலதெய்வத்தின் ஆசி இருக்க வேண்டும். குலதெய்வத்தை வணங்கி நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றி அடையும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.

கிராமங்களில் ஆண்டிற்கு ஒருமுறை பங்காளிகள் அனைவரும் ஒன்றிணைந்து, குலதெய்வ வழிபாட்டை நடத்துவது வழக்கம். பிறவிப் பிணியைத் தீர்த்து வைக்கும் வல்லமை பௌர்ணமி மற்றும் உத்திர நட்சத்திரத்திற்கு உண்டு. ஆகையால் இந்நாளில் குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை வழிபட்டால், கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. குலதெய்வத்தின் வழக்கப்படி பங்குனி உத்திர திருநாளில், குலதெய்வத்திற்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து படையலிடுவது புண்ணிய பலன்களைக் கொடுக்கும். இதுமட்டுமின்றி நம் முன்னோர்களின் ஆசியும் பூரணமாக கிடைக்கும்.

வெளியூரில் வசிப்பவர்கள் பங்குனி உத்திர நாளன்றும் குலதெய்வ கோயிலுக்கு வர முடியவில்லை என்றால், முதலில் அனைத்திற்கும் ஆதாரமாகத் திகழும் சூரிய பகவானை வணங்க வேண்டும். பிறகு உங்களின் குலதெய்வம் இருக்கும் திசையை நோக்கி, வணங்க வேண்டும். அதன்பின் பூஜை அறையில் குலதெய்வத்தை நினைத்து படையலிட்டு வணங்க வேண்டும்.

இன்றும் கூட சிலர் குடும்ப விஷேசங்களை குலதெய்வ கோயிலில் நடத்துவார்கள். இப்படி செய்வதால், அடுத்த தலைமுறையினர் கூட குலதெய்வத்தை வழிபடுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். திருமணம் தொடங்கி காது குத்துதல் வரை பல சுப காரியங்களை குலதெய்வங்கள் முன்னிலையில் நடத்துவது சிறப்பானதாகவே கருதப்படுகிறது.

குடும்பத்தில் தொடர் பிரச்சினைகள் ஏற்பட்டாலோ, நிம்மதி இல்லையென்றாலோ நீங்களும் பங்குனி உத்திர திருநாளில் குலதெய்வ கோயிலுக்கு சென்று வாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com