ஆடி அமாவாசை முன்னிட்டு சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 6 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. மலை உச்சியில் உள்ள இந்த கோவிலுக்கு மாதத்தில் பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய தலா 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் கூட பௌர்ணமியையொட்டி பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், காட்டுத்தீ காரணமாக தடை செய்யப்பட்டது. அதையடுத்து கடைசி ஒரு நாள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 6 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தால் கோயில் நிர்வாகம் பல்வேறு தடை அமல்படுத்தியுள்ளது. கோவிலுக்கு வருபவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை. மலைப்பகுதிக்கு எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.