திருப்பதி கோயில் திருக்குளத்தில் பக்தர்கள் நீராடத் தடை!

திருப்பதி கோயில் திருக்குளத்தில் பக்தர்கள் நீராடத் தடை!
Published on

ருடந்தோறும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பாக நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளுக்கு பிரம்மோத்ஸவப் பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடமும் பிரம்மோத்ஸவப் பெருவிழாவுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்யத் தொடங்கி இருக்கிறது.

இந்த வருடம் திருமலை திருப்பதி கோயிலில் இரண்டு பிரம்மோத்ஸவ விழாக்கள் நடைபெற உள்ளன. அதாவது, செப்டம்பர் மாதம் 18ம் தேதி முதல் 26ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோத்ஸவமும், அதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை நவராத்திரி பிரம்மோத்ஸவப் பெருவிழாவும் நடைபெற உள்ளன.

இந்த இரு பிரம்மோத்ஸவப் பெருவிழாக்களை முன்னிட்டு திருமலை திருப்பதி கோயிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பகுதியாக, திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளம் புனரமைக்கப்பட உள்ளது. அதன்படி, கோயில் தெப்பக் குளத்தில் இருக்கும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு, திருக்குளத்தின் தரைப் பகுதி மொத்தமும் சுத்தம் செய்யப்பட உள்ளது. அது மட்டுமின்றி, குளத்தில் இணைக்கப்பட்டிருக்கும் குழாய் இணைப்புகளில் ஏற்பட்டிருக்கும் சிறு பழுதுகளும் சரிசெய்யப்பட உள்ளன.

திருக்கோயில் தெப்பக் குளத்தில் புனரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளதைத் தொடர்ந்து, இன்று முதல் பக்தர்கள் கோயில் திருக்குளத்தில் நீராட திருமலை திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்து இருக்கிறது. மேலும், இந்தத் தடை ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் எனவும் தெரிவித்து இருக்கிறது. அதாவது, இம்மாதம் 31ம் தேதி வரை கோயில் திருக்குளத்தில் பக்தர்கள் நீராடத் தடை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com