பாண்டவ தருமனை விட, கௌரவ விகர்ணன் நல்லவன்! ஏன் தெரியுமா?

போர்க்களத்தில் பீமனும் விகர்ணனும்
போர்க்களத்தில் பீமனும் விகர்ணனும்
Published on

ரு விஷயத்தைப் பற்றிய கருத்துப் பறிமாற்றம் உண்டாகும்பொழுது, முடிவு இப்படித்தான் இருக்கும் என்று அவரவர் அறிவுக்கு எட்டிய வகையில் ஒரு எண்ணத்தைக் கூறுவோம். ஆனால், கடைசியில் எதிர்பாராத ஒரு முடிவை கேள்விப்படுவோம். அப்படி ஒரு இதிகாச நிகழ்வை இப்பதிவில் பார்ப்போம்.

குரு க்ஷேத்திரப் போர் ஆரம்பித்து பதிமூன்று நாட்கள் முடிந்து விட்டன. அன்று பதினான்காம் நாள். பஞ்சபாண்டவர்களின் ரதங்கள் போர்க்களத்திற்கு செல்லத் தயார் நிலையில் இருந்தன.  ஒவ்வொருவரும் அவரவர் ரதத்தில் ஏறும் முன்பு, பாஞ்சாலி, கணவர் ஐவருக்கும் வெற்றித்திலகம் இட்டு வாழ்த்து கூறினாள். ஐவரும் தத்தம் ரதத்தில் ஏறிக்கொண்டார்கள். பகவான் கிருஷ்ணர், அர்ச்சுனனின் தேரில் ஆரோகணிக்க எத்தனித்தார்.

"கண்ணா, சற்று பொறு. ரதத்தை செலுத்தாதே. எனக்கு உன்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது" என்றாள் பாஞ்சாலி.

"என்ன பாஞ்சாலி? கிளம்பும் வேளையில் என்ன கேள்வி கேட்கப் போகிறாய்?"

"தினமும் போரில் பலர் மாண்டு போகிறார்கள். போரின் தன்மை இப்படித்தான் இருக்கும் என்பது தெரிந்தாலும் நமக்கு வேண்டியவர்கள், நம் பந்துக்கள் இறக்கும்பொழுது மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது கண்ணா.  எனக்கு சந்தேகம் என்னவென்றால் இன்றைய போரில் யார் மரிப்பார் என்பதுதான் என் சந்தேகம் கண்ணா" என்றாள்.

"பாஞ்சாலி இது தேவ ரகசியம். யாரிடமும் கூறுவதற்கு இல்லை."

"உனக்குத் தெரியாதது எதுவுமே இல்லை. யார் என்பதை நீ கூறிவிட்டால் என் மனம் சஞ்சலப்படாமல் இருக்கும் கண்ணா."

"அர்ஜுனா, பாஞ்சாலியின் அவசரத்தைப் பார்த்தாயா? எல்லாவற்றையும் அவளுக்கு முன்கூட்டியே அறிந்து கொள்வதில்தான் எத்தனை ஆர்வம் பாரேன். சரி, இவ்வளவு தூரம் நீ கேட்பதால் ஒரு குறிப்பு மட்டும் தருகிறேன் பாஞ்சாலி. அதாவது எல்லோராலும் விரும்பப்படும் ஓர் உத்தமன் இன்றைய போரில் மரிப்பான்." என்றார்.

கண்ணன் இவ்வாறு கூறியதும், அனைவரது கண்களும் யுதிஷ்டிரரை நோக்கிப் பாய்ந்தன. யுதிஷ்டிரர் எல்லோராலும் விரும்பப்படுபவர். மிகவும் உத்தமர். அவர் இன்றைய போரில் இறந்து விடுவாரோ என்கிற பயம் எல்லோர் மனதிலும் இருந்தது.

இதைக் கேட்டவுடன், "கண்ணா என்ன கூறுகிறாய் நீ" என்று அர்ஜுனன் குரல் எழுப்பினான். "பாஞ்சாலியின் சந்தேகத்தைப் போக்கி விட்டேன் பார்த்தா. சரி சரி வாருங்கள் நேரமாகிறது. போர்க்களத்திற்குச் செல்வோம்" என்றான் கண்ணன்.

பாஞ்சாலியின் மனம் மிகவும் சஞ்சலம் அடைந்தது. மிகவும் உத்தமர் என்றால் தருமரைத் தவிர யார் இருக்க முடியும்? எல்லோருக்கும் மிகவும் பிரியமானவர் என்றால் என் கணவர் தருமரைத் தவிர யார் இருக்க முடியும்? இன்றைய போரில் அவர் இறந்து விடுவாரா? ஐவராகச் சென்றவர்கள் ஐவராக திரும்பி வருவார்களா? அல்லது நால்வர் மட்டுமே வருவார்களா? இப்படி பல கேள்விக்கணைகள் பாஞ்சாலியின் மனதிற்குள் எழுந்தன.

போர்க்களத்தில் மும்முரமாக போர் நடந்து கொண்டிருந்தது. பீமனுக்கு எதிரில் விகர்ணன், நேருக்கு நேர் மோதுவதற்காக வந்து நின்றான்.

"விகர்ணா, நீ விலகிப் போ. என் முன் வராதே. உன்னைத் தாக்குவதற்காக நான் இங்கு வரவில்லை. உனது சகோதரர்கள் துரியோதனனையும், துச்சாதனனையும் அழிப்பதற்காகவே வந்தேன்." என்றான்.

"ஏன் என்னைக் கண்டால் உனக்கு பயமா? என்னுடன் போரிட்ட பின் அவர்களை சந்திக்கலாம் பீமா" என்றான் விகர்ணன்.

"உன்னிடம் பயமா? அதுவும் எனக்கா? உன்னை மிகவும் பிடிக்குமாதலால் உன்னைத் தாக்க மனம் வரவில்லை. அன்று பாஞ்சாலியை துச்சாதனன் துகிலுரித்தபொழுது அந்தச் சபையிலே நீ ஒருவன் மட்டுமே துரியோதனிடம் சிறிதும் பயம் இல்லாமல் அவன் தவறைச் சுட்டிக்காட்டினாய். அதை நான் என்றும் மறக்க மாட்டேன் விகர்ணா. தர்மம் அறிந்தவனான நீ ஏன் எங்களுடன் சேரக்கூடாது? நாம் அறுவராய் இருக்கலாம். உனக்கும் அரசாள ராஜ்ஜியம் ஒதுக்கப்படும்" என்றான் பீமன்.

"பீமா தர்மம் தெரிந்தவன் என்று என்னைக் கூறுகிறாய். நான் என் கூடப் பிறந்தவனை விட்டுவிட்டு உன்னுடன் வந்து சேர்வது தர்மம் அல்ல. அது ஏன் உனக்குப் புரியவில்லை. என்னுடன் போரிட பயந்து உன் கோழைத்தனத்தை வெளிப்படுத்த முடியாமல் ஏதோ சாக்கு போக்குகளைச் சொல்கிறாய் என்றுதான் தோன்றுகிறது" என்று விகர்ணன் கூறியவுடன் ஆத்திரமடைந்த பீமன், தனது கதாயுதத்தால் விகர்ணனை ஓங்கித் தாக்கினான். அந்த க்ஷணமே விகர்ணன் மாண்டு போனான்.

இதையும் படியுங்கள்:
பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் இரத்த சோகைப் பிரச்னையை போக்கும் உணவுகள்!
போர்க்களத்தில் பீமனும் விகர்ணனும்

அன்றைய மாலை கதிரவன் மலைவாயிலில் விழுந்தவுடன், சங்கொலி எழுப்ப,   அன்றைய போர் நிறைவு பெற்றதாய் அவரவர் தத்தம் இடங்களுக்கு ஏகினார்கள். பாஞ்சாலி வாயிலிலேயே காத்திருந்தாள். ஐவரும் திரும்பி வருவதைக் கண்டாள். யுதிஷ்டிரர் வருவதுக் கண்டவுடன் சந்தோஷம் இருந்தாலும் மனதிற்குள் யார் இன்று மரித்து இருப்பார்கள் என்கிற சந்தேகம் அவளை ஆட்டிப்படைத்தது.

"கண்ணா, இன்று போரில் இறந்தது யார்?" என்றாள் வேகமாக.

"இன்று போரில் இறந்தவன் விகர்ணன். அவன் எல்லோரையும் விட நல்லவன், உத்தமன்" என்றான் கண்ணன்.

"என் கணவர் தருமரை விட நல்லவர்கள் கூட இருக்கிறார்களா கண்ணா?" எனக் கேட்டாள் பாஞ்சாலி.

"இதில் என்ன சந்தேகம் பாஞ்சாலி? தருமனை விட நல்லவன்தான் விகர்ணன். ஏன் என்றால் தர்மம் தவறாமல் தனது சகோதரனுக்காக மகுடத்தைக் கூட துச்சமாக மதித்தவன். நல்லவர்களுக்கு இடையே நல்லவனாக வாழ்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை பாஞ்சாலி. கெட்டவர்களுக்கு இடையில்  நல்லவனாக வாழ்பவன்தான் உத்தமன்" என்று கிருஷ்ணர் கூறியதும், அனைவரும் மனதில் விகர்ணனை நினைத்து, இரு கரம் கூப்பி நமஸ்கரித்துக் கொண்டார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com