திருப்பதியில் மூன்று வகை லட்டு பிரசாதம் உண்டு தெரியுமா?

திருப்பதியில் மூன்று வகை லட்டு பிரசாதம் உண்டு தெரியுமா?
Published on

திருப்பதி என்றவுடனே பெருமாளுக்கு அடுத்தபடியாக அனைவருக்கும் நினைவுக்கு வருவது லட்டு பிரசாதம்தான். எல்லோருக்கும் பிடித்தமான தனிச்சுவை மிக்க இந்த லட்டை, ‘பிரசாதங்களின் கிங்’ என்று கூட கூறலாம். ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளின் பிரசாதம் 1803ம் ஆண்டு முதல் தளர்வான வடிவங்களில் இருந்தது. ஆனால், ஸ்ரீவாரி கோயிலில் லட்டு பிரசாதம் இருந்ததை கோயில் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. 1940ம் ஆண்டு மெட்ராஸ் அரசாங்கத்தின் கீழ் லட்டின் தற்போதைய வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டது. திருப்பதி லட்டு 2015ம் ஆண்டு தனது வைர விழாவைக் கொண்டாடியது.

பல்லவர்களின் காலத்தில் ஸ்ரீவேங்கடேச பெருமாளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் இரண்டாம் தேவராயர் மூன்று கிராமங்களை இந்தக் கோயிலுக்கு மானியமாகவும் மற்றும் தினசரி பிரசாத செலவுக்கு ரூபாய் 200 வழங்கப்பட்டது. மேலும், இரண்டாம் தேவராயரின் மற்றொரு அதிகாரியான அமாத்ய சேகர மல்லண்ணா பெருமாளுக்கு நைவேத்தியம் மற்றும் நித்ய தீபாராதனை ஏற்பாடுகளைச் செய்தார்.

திருப்பதியில், 'லட்டு சாம்ராஜ்ஜியத்தை' உருவாக்கியவர் கல்யாணம் ஐயங்கார். லட்டு தயாரிக்க மிராசிதாரி முறையை அவர்தான் அறிமுகப்படுத்தினார். சமையலறையில் லட்டு தயார் செய்பவர்கள், ‘கேமர் மிராசிதர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். 2001ம் ஆண்டு வரை மிராசிதர்கள் லட்டுகளைத் தயாரித்து புண்ணியத்தை அனுபவித்தனர். ஒவ்வொரு 51 லட்டுகளிலும் 11 மிராசி பிராமண குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. பின்னர் ஆந்திர அரசாங்கம் 2001ல் மிராசிதாரி முறையை ஒழித்தது. திருப்பதியில் மூன்று வகையான லட்டு பிரசாதங்கள் செய்யப்படுகின்றன. அவை: ஆஸ்தான லட்டு, கல்யாண உத்ஸவ லட்டு, புரோகிதம் லட்டுகள் ஆகும்.

ஆஸ்தான லட்டு: முதன்மையான விழா நாட்களில் மட்டுமே தயாரிக்கப்பட்டு, முக்கியமான பிரமுகர்களுக்கு இது வழங்கப்படுகிறது. இது 750 கிராம் எடையுடனும், பிற லட்டுக்களை விட மிகுதியான அளவில் முந்திரி, பாதாம், குங்குமப்பூ போன்றவை சேர்த்துத் தயாரிக்கப்படுகின்றன.

கல்யாண உத்ஸவ லட்டு: கல்யாண உத்ஸவ லட்டுக்கள் பெருமாளின் திருக்கல்யாண உத்ஸவ சேவையில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது 750 கிராம் எடையுடன் இருக்கும். இந்த லட்டுக்கான தேவை மிகுதியாக உள்ளது. புரோகிதம் லட்டைவிட குறைந்த அளவே இது தயாரிக்கப்படுகிறது.

புரோகிதம் லட்டு: புரோகிதம் லட்டு பொதுவான பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. மூன்று வகை லட்டுகளில் இந்த லட்டுதான் அளவில் சிறியது. இது 175 கிராம் எடையுடையதாக இருக்கும். இந்த லட்டுகள்தான் திருமலை திருப்பதியில் அதிகளவில் தயாரிக்கப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com