
இந்துக்களின் பண்டிகையான தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகை, இந்தியாவைத் தாண்டி உலகின் பல பகுதிகளிலும் பலராலும் கொண்டாடப்படுகிறது. தீபாவளி அன்று நடைபெறும் பலரும் கேள்விப்பட்டிராத சில விசேஷங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
* திருப்பதி வேங்கடாஜலபதி கோயிலில், தீபாவளியன்று மாலையில், ‘அத்தர தானம்’ என்ற சிறப்பு வழிபாடு நடைபெறும். முதலில் மலையப்ப சுவாமி தங்கப் பல்லக்கில் உள் பிராகாரத்தில் வலம் வருகிறார். பிறகு கருடாழ்வாருக்கு எதிரில் இறக்கி வைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெறும். அப்போது மூலவருக்கு புது பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன.
* சென்னை, பெசன்ட் நகரில் உள்ள அஷ்ட லட்சுமி கோயிலில் தீபாவளி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
* தீபாவளியன்று மகாவீரர் முக்தி அடைந்ததால், ஜைனர்கள் மூன்று நாட்கள் உபவாசம் இருந்து மகாவீரரின் உபதேசங்களைப் படிக்கிறார்கள். புது வருடமும் அவர்களுக்கு அன்றுதான் பிறக்கிறது.
* தீபாவளி அன்று கடல் மற்றும் நதிகளில் மக்கள் ஆனந்தமாக நீராடியதாக, ரஷ்ய பயணி நிக்கோலேரே கொன்டி என்பவர் கூறியுள்ளார்.
* வட இந்தியாவில் ஸ்ரீராமன், ராவணனை வதம் செய்த நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.
* மேற்கு மாநிலங்களில் மகாலட்சுமி குபேரனுக்கு அருள் செய்த நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.
* மகாராஷ்டிரா மாநிலத்தில், விநாயகர் தடைகளை நீக்குவதாக தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது.
* குஜராத் மாநிலத்தில் புதிய கணக்கு தொடங்கும் நாளாக, மகாலட்சுமியை வரவேற்று தீபாவளியை கொண்டாடுகின்றனர்.
* ஸ்ரீ கிருஷ்ணன், நரகாசுரனை வதம் செய்த தினமாக தென்னிந்தியாவில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
* வங்காளத்தில் துர்கைக்குரிய தினமாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. வீடுகளில் மாவிலை தோரணம் கட்டி, குறைந்தது 14 விளக்குகளாவது ஏற்றி வைத்து பட்டாசு வெடித்துக் கொண்டாடுகின்றனர். இன்று பதினொரு வகை கீரைகள் சமைப்பதும் வழக்கம்.
* ஒடிசா மாநிலத்தில் தீபாவளிக்கு மறுநாள் எம தீபாவளியைக் கொண்டாடி எமனுக்கு பூஜை செய்கின்றனர்.
* கர்நாடக மாநிலம், ஹாசன் என்ற ஊரில் தீபாவளி பண்டிகையன்று மட்டுமே திறக்கப்படுகிறது ஹாசனாம்பிகை கோயில். ஹாசன் என்றால் கன்னடத்தில் புன்னகை என்று பொருள். இந்த அம்மன் புன்னகைக்கும் தோற்றத்தில் இருப்பதால் அந்தப் பெயர். அந்த ஊருக்கும் ஹாசன் என்ற பெயர் வந்தது.