தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வேங்கடாஜலபதி பெருமாள் சன்னிதிக்கு முன்பு உள்ள தங்க வாசலுக்கு அருகே கண்டா மண்டபத்தில் ஆஸ்தான பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். திருமலையில் தீபாவளியன்று பெருமாளுக்கு தீபாவளி ஆஸ்தானம் நடைபெறும். இது மிகச் சிறப்பானது. தீபாவளிக்கு முதல் நாள் அன்று இரவு மலையப்ப சுவாமி ஊர்வலமாக எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தருவார். பின்பு அங்குள்ள அனைவருக்கும் தைலம் விநியோகம் செய்யப்படும்.
அதை மறுநாள் காலையில் பக்தர்கள் தலைக்குத் தேய்த்து தலை குளியல் செய்து கொண்டு திருவேங்கடமுடையானின் அருளைப் பெற வேண்டும். தீபாவளியன்று சுப்ரபாதம் தொடங்கி, முறையே முதல் மணி நிவேதனம் நடைபெறும். பின்பு தங்க வாயில் முன்னே ஏற்பாடு செய்த சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப ஸ்வாமி எழுந்தருள்வார். சேனை முதலியார் ஒரு பீடத்தின் மீதும் மலையப்ப ஸ்வாமி இடது பக்கத்திலும் எழுந்தருளுவார். பின்னர் மூலமூர்த்திக்கும் வெளியே உள்ள மலையப்ப ஸ்வாமிக்கும் இரண்டாவது அர்ச்சனை நடைபெறும்.
இவற்றோடு ஜீயர் சுவாமி பட்டு வஸ்திரங்களை வெள்ளித் தட்டில் கொண்டு வர உடன் தேவஸ்தான அதிகாரிகளும் மங்கல வாத்தியங்கள் முழங்க புறப்பட்டு கொடிமரத்தை சுற்றி வந்து ஆனந்த நிலைய விமானத்தை சுற்றி சமர்ப்பிப்பர். அதை அர்ச்சகர் பெற்று பெருமாளுக்கு சமர்ப்பிக்கிறார். பெருமாளுக்கு மங்கல ஆரத்தி எடுத்த பின்னர், வஸ்திரத்தை ஜீயர் சுவாமி கொடுக்க, அர்ச்சகர் அதை உத்ஸவ மூர்த்திக்கும் சேனை முதலியாருக்கும் சமர்ப்பிக்கிறார். அன்று விசேஷமான தளிகை உண்டு. அதோடு, சேனை முதலியாருக்கு சடாரி மரியாதையும் செலுத்துவார்கள்.
பின்னர் ஜீயர் சுவாமிக்கும் தேவஸ்தான முக்கியமான கோயில் அதிகாரிகளுக்கும் சடாரி மரியாதை வழங்கப்படும். பிறகு பிரசாதம் விநியோகம் நடைபெறும் கி.பி. 1542ம் ஆண்டு பொறிக்கப்பட்டுள்ள திருமலை திருப்பதி பெருமாள் கோயிலில் உள்ள தமிழ் கல்வெட்டுகளில், ‘திருப்பதி பெருமாளுக்கு தீபாவளியன்று அதிரச படி இரண்டு’ என உள்ளது. இதன் மூலம் தீபாவளி பண்டிகை அன்று திருப்பதி பெருமாளுக்கு அதிரசம் படைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இப்படித்தான் தீபாவளியை திருப்பதி பெருமாள் கொண்டாடுகிறார். நாமும் இந்நாளில் அவரை வழிபட்டு பெருமாளின் பேரருளைப் பெறுவோம்.