

மகா சிவராத்திரி நாள் என்பது சிவனுக்கு உகந்த நாளாகும். இந்த நாளில் பலரும் சிவனுக்கு விரதம் இருந்து விடிய விடிய கண் முழித்து அவரின் நாமத்தை உச்சரிப்பார்கள். இன்னும் ஊர்களில் குலதெய்வ கோயில்களில் மாசி கிளரி என்ற பெயரில் விடிய விடிய முழித்து அலங்காரம் செய்து அவர்களின் குலதெய்வத்தை வழிபடுவார்கள். மகா சிவராத்திரி என்பது சிவபெருமானின் பரிபூரண அருளை பெறுவதற்கான மிகவும் சக்தி வாய்ந்த நாளாகும்.
இந்த நாளில் சிவ வழிபாடு செய்வது பல மடங்கு அதிக பலனை தரும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த மகா சிவராத்திரி 2026ஆம் ஆண்டில் எந்த தேதியில் வருகிறது, எப்படி விரதம் மேற்கொள்ளலாம் போன்ற தகவல்களை பார்க்கலாம் வாங்க...
மகா சிவராத்திரி 2026:
இந்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனால் மகா சிவராத்திரி விரதத்தை பிப்ரவரி 15ம் தேதி கடைபிடிக்க வேண்டுமா அல்லது பிப்ரவரக 16ம் தேதி கடைபிடிக்க வேண்டுமா? எந்த நாளில் இரவு கண் விழித்து, சிவ வழிபாடு செய்ய வேண்டும் என்பதில் பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.
பிப்ரவரி 15ம் தேதியன்று மாலை 05.51 மணிக்கு தான் சதுர்த்தசி திதி துவங்குகிறது. அதே போல் பிப்ரவரி 16ம் தேதியன்று மாலை 06.26 மணியுடன் சதுர்த்தசி திதி நிறைவடைந்து விடுகிறது. அதற்கு பிறகு அமாவாசை திதி துவங்கி விடுகிறது. இதனால், பிப்ரவரி 15ம் தேதி மாலை 6 மணிக்கு பிறகு கோயிலுக்கு சென்றோ வீட்டிலேயோ விரதத்தை மேற்கொள்ள தொடங்கலாம். பிறகு அதற்கடுத்த நாளில் காலை பூஜையுடன் விரதத்தை முடித்து கொள்ளலாம்.
மாதம்தோறும் சிவராத்திரி வந்தாலும் வருடத்திற்கு ஒரு முறை மாசி மாதத்தில் தேய்பிறை அன்று வரும் வரும் மகா சிவராத்திரி சிவபெருமானுக்கான முக்கிய விரத நாள் ஆகும். சிவராத்திரி நாளில் சிவனுக்கு 4 கால பூஜை நடைபெறும். முதல் காலம் இரவு 7.30 மணிக்கு தொடங்கும், இரண்டாம் காலம் இரவு 10.30 மணிக்கு தொடங்கும், மூன்றாம் காலம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும், நான்காம் காலம் அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கும். இந்த 4 பூஜைகளிலும் பங்கேற்று சிவனை மனமுருகி தரிசித்தால் அவரின் அருளை பெற்று உங்களின் பிரார்த்தனைகள் நிச்சயம் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது. கோயிலில் நடைபெறும் 4 கால பூஜைகளில் பங்கேற்கலாம் அல்லது உங்கள் வீடுகளிலேயே விளக்கேற்றி ஒவ்வொரு கால பூஜையையும் தொடங்கி சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தும் வழிபடலாம்.
ஆனால் கட்டாயம் சிவராத்திரி என்றாலே இரவு முழுவதும் விழித்திருப்பது அவசியமாகும். முடியாதவர்கள் மாலை நேரத்தில் கோயிலுக்கு சென்று வழிபட்டு விட்டு உடல் ஒத்துழைக்கும்போது விரதத்தை கடைப்பிடிக்கலாம்.
ஜெபிக்க வேண்டிய மந்திரம்:
1. ஓம் நமச்சிவாய என்ற மந்திரமே உலகின் சிறந்த மந்திரமாகும். அதை எவ்வளவு முறை வேண்டுமானாலும் உச்சரிக்கலாம்.
2. ருத்ர மந்திரம் : ஓம் நமோ பகவதே ருத்ராய
3. சிவ காயத்ரி மந்திரம் :
ஓம் தத்புருஷாய வித்மஹே
மகாதேவாய தீமஹி
தந்னோ ருத்ர பிரசோதயாத்
4. சிவ தியான மந்திரம்:
கர சரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா
ஸ்வரவண நயனஜம் வா மானஸம் வ அபராதம்
விஹிதம் அவிஹிதம் வா ஸ்ர்வமேதத் க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஷம்போ
5. மகா மிருத்யுஞ்சய மந்திரம்
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸூகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்