செல்வ வளம் தரும் பூரண கும்ப கலசம் பற்றி அறிவோமா?

Do we know about Purana Kumbha Kalasam which gives wealth?
Do we know about Purana Kumbha Kalasam which gives wealth?

பூரண கும்பம் அல்லது பூரண கலசம் பற்றி அறிந்திருப்போம். மரபுகளின்படி நிகழ்த்தப்படும் ஆலய கும்பாபிஷேகங்கள், புதுமனை புகுவிழா, திருமணம் மற்றும் சிறப்பு  வழிபாடுகள் போன்ற சமயங்களில் இத்தகைய கலசம் வைக்கப்படுகிறது. மேலும், விழா நடத்தப்படும் இடத்தின் நுழைவாயிலில் வருபவரை வரவேற்கும் வகையில் இக்கலசத்தை வைப்பதுண்டு . முக்கியமாக பெரியோர்களையும், பிரமுகர்களையும் பூரண கும்பம் கொடுத்து வரவேற்பது வழக்கமாக உள்ளது.

கலசம் என்பது என்ன? மண் அல்லது செம்பு, பித்தளை, தாமிரம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட நீர் அல்லது அரிசி நிறைந்த ஒரு குடம்தான் கலசம் எனப்படுகிறது. மகாலட்சுமி வாசம் செய்யும் செல்வத்தின்  குறியீடாக இந்த பூரண கும்பம் வழிபாட்டுக்கு உரியதாகிறது. பூரணம் என்றால் முழுமை என்பது பொருள்.

கலசத்தில் உள்ள நீரானது, உலகமும் அதிலுள்ள அனைத்துப் பொருட்களும் சகல ஆத்மாக்களும் நீரிலிருந்தே உண்டாகின்றன என்பதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. மீண்டும் உலகம் பிரளய காலத்தில் நீரிலேயே ஐக்கியமாகி விடுவதாக வேதம் கூறுகின்றது. ஆதி கர்த்தாவாகிய இறைவனை  நீரின் மூலம் வழிபாட்டுக்குக் கொண்டு வருவதே பூரண கும்பத்தின் பொருள் ஆகிறது.

பூரண கும்பத்தை மனித உடலாக பாவித்து அதில் இறைவனை ஆவாகனம் செய்யவே யாகமும் பூஜைகளும் செய்யப்படுகின்றன. ஆலயங்களில் இந்தக் கும்பத்துக்கு வெண்மை அல்லது சிவப்பு நிறமுள்ள நூல்கள் கொண்டு அலங்கரிக்கப்படுகிறது . இந்த நூல்கள் கலசத்தின் கழுத்திலிருந்து முழுமையாக டயமண்ட் வடிவத்தை உருவாக்கும் வகையில் நுணுக்கமாகக் கட்டப்படுகிறது. கலசத்தின் மேல் அழகான வடிவங்கள் வரையப்படுவதும் உண்டு. கலசத்தில் உள்ள இலைகளும் தேங்காயும் சிருஷ்டியைக் குறிக்கின்றன. கலசத்தைச் சுற்றியுள்ள நூல் படைப்பில் உள்ள அனைத்தையும் ஒன்றாகப் பிணைக்கும் அன்பைக் குறிக்கிறது. ஆகவேதான் கலசம் புனிதமாகக் கருதப்பட்டு பூஜிக்கப்படுகிறது.

புனிதமான நதிகளின் நீர், அனைத்து வேதங்களின் சாரம் மற்றும் அனைத்து தேவதைகளின் ஆசி ஆகியவை கலசத்தில் உள்ள நீரில் வந்து சேர வேண்டுமென்று பிரார்த்திக்கப்படுகிறது. பின்னர், கலசநீர் அபிஷேகத்திற்கும் மற்ற சடங்குகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆலய கும்பாபிஷேகத்தில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலசத்தில் உள்ள புனித நீர் ஆலய கோபுரக் கலசங்களின் மேல் ஊற்றப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பக்தர்கள் மட்டுமல்ல; பகவானும் கிரிவலம் வரும் திருவண்ணாமலை!
Do we know about Purana Kumbha Kalasam which gives wealth?

வீடுகளில் கும்பம் வைக்கும் முறை இதுதான்: ஒரு மேசையை சுத்தம் செய்து, அதன் மீது சுத்தமான விரிப்பு ஒன்றை விரிக்கவும். தரையில் என்றால் சுத்தமாக மெழுகி பச்சரிசி மாவினால் கோலம் போடவேண்டும் . அதன் மீது ஒரு தலைவாழை இலையை இலையின் நுனிப்பகுதி வடக்கு முகமாகவோ அல்லது கிழக்கு முகமாகவோ அமையுமாறு வைக்கவும். அதன் மேல் நெல் அல்லது அரிசி பரப்பி அதற்கு மேல் நீர் நிரப்பிய பித்தளை அல்லது செம்பினால் ஆன கும்ப குடத்தை வைக்கவும். அதன் இரு பக்கங்களிலும் குத்துவிளக்குகளை வைத்து ஏற்றவும். அதன் பின் ஐந்து மாவிலைகளை நுனிப்பகுதி வெளியில் தெரிய, குடத்தின் வாயில் அழகுற வைத்து சுத்தம் செய்து வைத்த முழுத் தேங்காயை அதன் மேல் வைத்து மலர்களால் அலங்கரித்து வழிபடலாம்.  வழிபாட்டுக்குப் பிறகு இதில் உள்ள நீரை கால் படாத இடங்களில் சேர்க்க வேண்டியது முக்கியம்.

அஷ்ட லட்சுமிகளின் அருள் நிறைந்திருக்கும் பூரண கும்பத்தை விசேஷ நாட்களில் வீட்டில் வைத்து வழிபட்டு செல்வ வளம் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com