ஒடிசா மாநிலம், புரி ஜகந்நாதர் கோயிலைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. அந்தக் கோயிலில் கொண்டாடப்படும் ரத யாத்திரை உலகப் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு வருடமும், ரத யாத்திரைக்கு உண்டான ரதத்தை புதியதாகவே செய்வார்கள். அதற்கு உண்டான பணியை அட்சய திருதியை அன்றுதான் தொடங்குவார்கள். இந்த வருடமும் அதேபோல் அட்சய திருதியை அன்று ரதம் செய்வதற்கு உண்டான பணிகள் தொடங்கி விட்டன.
அட்சய திருதியை அன்றிலிருந்து ஒரு விசேஷமான, மிக நீண்ட திருவிழா ஒன்றும் இக்கோயிலில் அனுசரிக்கப்படுகிறது. அதுதான் ஒரிய மொழியில், ‘காந்தலேபனா யாத்ரா’ என்று கூறப்படும் சந்தன் யாத்ராவாகும். அட்சய திருதியை முதல், நாற்பத்து இரண்டு நாட்களுக்கு இந்த சந்தன் யாத்ரா என்பது கொண்டாடப்படுகிறது.
‘சந்தன் யாத்ரா’ என்றால் என்ன?
கொளுத்தும் உஷ்ணமான காலங்களில், தெய்வங்களுக்கு உடல் வெப்பத்தைக் குறைக்க சந்தனத்தால் அலங்காரம் செய்யப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் சென்று, குளுமையாக தெப்போத்ஸவம் செய்து குளிர்விக்கும் விழாவாகும்.
‘சந்தன் யாத்ரா’ என்பது இரண்டு பகுதிகளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. முதல் இருபத்தியொரு நாட்களுக்கு நடைபெறும் திருவிழா, ‘பஹாரா சந்தன் யாத்ரா’ என்று கூறப்படுகிறது. இந்நாட்களில் அலங்கரிக்கப்பட்ட தெய்வங்கள், அலங்கரிக்கப்பட்ட தேர்களில் நகர வீதிகளில் பக்தர்கள் தரிசனத்திற்காக அழைத்துச் செல்லப்படுவார்கள். பின்பு, பிரத்தியேகமாக இருக்கும், புனித நரேந்திர சரோவர் (நரேந்திர தீர்த்தக் குளம்) என்னும் நீர்நிலையை அடைவார்கள். அங்கு அலங்கரிக்கப்பட்ட இரண்டு பெரிய படகுகளில் தெய்வங்களை எழுந்தருளச் செய்து, அந்தப் புனித சரோவரில் ஆடல், பாடல்களுடன் தெப்போத்ஸவம் நடத்துவார்கள்.
இரண்டாவது கட்டமாக, அடுத்த இருபத்தியொரு நாட்கள் நடைபெறும் சந்தன் யாத்ரா, ‘பிடரா சந்தன் யாத்ரா’ என்று அழைக்கப்படுகிறது.இந்நாட்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கு பதிலாக, கோயிலுக்கு உள்ளேயே, ‘ஜலக்ரீடா மண்டபத்தில்’ இந்தத் திருவிழா நிகழ்த்தப்படுகிறது. அமாவாசை, பௌர்ணமி, சஷ்டி, ஏகாதசி போன்ற முக்கிய நாட்களில் இரவு நேரங்களில் இது அனுசரிக்கப்படுகிறது.
ஜகந்நாதர் ரத யாத்திரைக்கு எப்படி அதிக அளவில் மக்கள் கூடுவார்களோ அதுபோல் இந்தத் திருவிழாவிற்கும் பக்தர்கள் பெருமளவில் திரளுகிறார்கள். இன்றைய நாட்களில் தானம் செய்வது மிகவும் சிறந்தது எனப் போற்றப்படுகிறது.