ஆந்திர மாநிலம், நால்கொண்டா மாவட்டம் வடபள்ளியில் உள்ளது ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில். இக்கோயில் குறித்து புராணத்தில் சொல்லப்படுவது என்னவென்றால், ஆறாயிரம் வருடங்களுக்கு முன்பு அகத்திய முனிவர், சிவகேசவ சிலை ஒன்றை நிறுவ வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
இதற்காக அவர் அனைத்து லோகங்களையும் பார்த்து விட்டு கடைசியாக பூலோகத்தில் காசி க்ஷேத்ரத்தில் நிறுவலாம் என்று சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு அசரீரி கேட்டது, ‘அந்த சிலையை கிருஷ்ணா ஆறும், முசி ஆறும் சங்கமமாகும் இடத்தில் நிறுவ வேண்டும் என நரசிம்மர் ஆசைப்படுகிறார்’ என்பதுதான்.
இதை கேட்டதும் அந்த இடத்திலேயே அகத்திய முனிவர் நரசிம்மருக்கு ஒரு கோயிலைக் கட்டினார். பல வருடங்கள் ஆன பின்பு இக்கோயில் சரியான பராமரிப்பு இன்றி மோசமான நிலைக்குச் சென்றது. இக்கோயிலை 12ம் நூற்றாண்டில் ரெட்டி என்னும் அரசன் சீரமைத்துக் கட்டினார்.
இந்தக் கோயில் மிகவும் சிறியதாகவே உள்ளது. எனினும், இக்கோயிலைச் சுற்றி நிறைய மரங்கள் அழகாக காட்சியளிக்கின்றன. கோயிலின் உள்ளே கருவரையில் லக்ஷ்மி நரசிம்மர் அழகாகக் காட்சியளிக்கிறார்.
கருவறையில் உள்ள நரசிம்மரிடம் இரண்டு விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. அதில் ஒரு தீபம் காற்றில் அசைந்து கொண்டிருக்கும். இன்னொன்றில் உள்ள தீபம் அசையாமல் நிலையாக இருக்கும்.
இதன் மூலம் உணர்த்தப்படுவது என்னவென்றால், நரசிம்மரின் மூச்சுக் காற்று பட்டே அந்த தீபம் அசைவதாக நம்பப்படுகிறது. அந்தக் கோயிலில் உள்ள லக்ஷ்மி நரசிம்மருக்கு உயிர் உள்ளது என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இது இந்தக் கோயிலில் தனித்துவமாகக் கருதப்படுகிறது. இங்கே இருக்கும் தீபத்தின் பெயர் அகண்ட தீபமாகும்.
இக்கோயில் நடை தினமும் காலை 7 முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4.30 முதல் இரவு 7.30 மணி வரை தரிசனத்துக்காக திறந்து வைக்கப்படுகிறது. கோயிலைச் சுற்றி வரும்பொழுது ஆஞ்னேயரின் தரிசனமும் கிட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டுச் செல்கிறார்கள். இவரை வணங்கி விட்டு கிளம்பினால் நற்பயன்கள் உண்டாகும் என்பது மக்களின் நம்பிக்கை.