அபூர்வ தல விருட்சம் குரா மரம் பற்றித் தெரியுமா?

குரா மரம்
குரா மரம்

பெரும்பாலான கோயில்களில் அக்கோயிலின் தல விருட்சம் அமைந்திருக்கும். சில தல விருட்சங்கள் அபூர்வமானவை. தென்னாங்கூரில் பாண்டுரங்கன் திருக்கோயிலில் அமைந்துள்ள ‘தமால மரம்’ மிகவும் அபூர்வமான தல விருட்சமாகும். இந்த தமால மரம் இந்தியாவிலேயே இரண்டு தலங்களில் மட்டுமே அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதுபோலவே, தமிழ்நாட்டில் சில கோயில்களில் அமைந்துள்ள குரா மரமும் அபூர்வமான தல விருட்சமாகக் கருதப்படுகிறது.

முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்தது குரா மரம். குரா மலர்களால் முருகப்பெருமானை அர்ச்சித்து வணங்கினால் குறைவிலாத செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம். சங்க இலக்கியமான அகநானூற்றில், ‘குரவு மலர்ந்து அற்சிரம் நீங்கிய அரும்பத வேனில்’ என்று குரா மலரினைப் பற்றிக் கூறுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்த ஆவுடையார்கோவிலில் தல விருட்சமாக இரண்டு குருந்த மரங்கள் உள்ளன. இந்த குருந்த மரத்தின் கீழ்தான் மாணிக்கவாசகருக்கு சிவபெருமான் திருவடி தீட்சை அளித்ததாக ஐதீகம்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கடையூரில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் திருவிடைக்கழி முருகன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் தல விருட்சம் குரா மரமாகும். இத்தலத்தின் குரா மரத்தின் அடியில்தான் ராகு பகவான் முருகப்பெருமானை வழிபட்டு பேறு பெற்றார் என்கிறது தல புராணம்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் காரமடைக்கருகில் அமைந்துள்ளது குழந்தை வேலாயுதசாமி கோயில். முற்காலத்தில் குழந்தை வேலாயுத சுவாமி குருந்த மரத்தடியில் அகத்தியருக்கு உபதேசம் செய்தார். அவர் பூஜித்த அகத்திய லிங்கம் இக்கோயிலில் உள்ளது. குரா மரம் என அழைக்கப்படும் குருந்த மரமே இங்கு தல விருட்சமாக இருப்பதால் இம்மலையும் குருந்த மலை என்றே அழைக்கப்படுகிறது. பழநி மலையின் நடுவில் குரா மரத்தின் கீழ் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள முருகனுக்கு, ‘குரா வடிவேலன்’ என்று பெயர்.

இதையும் படியுங்கள்:
மூளைச் சோர்வு பிரச்னையை போக்க எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்!
குரா மரம்

காஞ்சிபுரத்தில் திருப்பருத்திக்குன்றம் எனும் பகுதியில் அமைந்துள்ள பல்லவர் காலத்தைச் சேர்ந்த சமணத் திருக்கோயிலான திரைலோக்கியநாதர் கோயிலில் இந்த அபூர்வமான குரா மரம் தல விருட்சமாக அமைந்துள்ளது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த மரத்தைச் சுற்றிலும் கி.பி.13ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் காடவர்குலக் கோப்பெருஞ்சிங்கனால் மேடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடையில் தல விருட்சமான குரா மரத்தைப் புகழ்ந்து ஒரு பாடல் எழுதப்பட்டுள்ளது.

‘தன்னளவிற் குன்றா துயராத தண்காஞ்சி
முன்னுளது மும்முனிவர் மூழ்கிறது – மன்னவன்தன்
செங்கோல் நலங்காட்டும் தென்பருத்திக் குன்றமர்ந்த
கொங்கார் தருமக் குரா’

‘நாட்டைக் காக்கும் மன்னவனது செங்கோலின் சீர்மையை அறிவுறுத்தும் வகையில் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டது இத்தகைய சிறப்பு மிக்க குரா மரம். தருமத்தின் உறைவிடமாகத் திகழ்ந்து தென்பருத்திக் குன்றத்தில் நிற்கிறது’ என்பதே இப்பாடலின் பொருளாகும்.

குரா மரமானது அதிக உயரம் வளராமலும் குட்டையாகக் குறுகாமலும் ஒரே சீரான உயரத்தைக் கொண்டதாக இருக்கும் தன்மை உடையதாகும். மலைகளில் மட்டுமே வளரக்கூடிய குரா மரமானது தமிழ்நாட்டில் சில கோயில்களில் தல விருட்சமாக வளர்ந்துள்ளது அபூர்வமானது. குரா மரம் பங்குனியில் பூக்கும். குரா மரத்தின் கீழ் தியானம் செய்தால் தியானம் எளிதில் கைகூடும் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com