அகஸ்தியர் வழிபட்ட சந்தி விநாயகர் கோயில் பற்றி தெரியுமா?

அகஸ்தியர் வழிபட்ட சந்தி விநாயகர் கோயில் பற்றி தெரியுமா?
Kalki vinayagar
Kalki vinayagar

திருநெல்வேலி டவுனில் அமைந்துள்ளது ஸ்ரீ சந்தி விநாயகர் ஆலயம். சிறிய ஆலயமாக இருந்தாலும் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக இது திகழ்கிறது. ஸ்ரீ சந்தி விநாயகரை தினமும் மாலை நேரத்தில் அகஸ்திய மாமுனிவர் வந்து வழிபடுவதாக ஐதீகம்.

கயிலையில் சிவ-பார்வதி திருமணம் நடந்தபோது, பூமி வடக்கே தாழ்ந்து தெற்கே உயர்ந்தது. பூமியை சமப்படுத்த விரும்பிய சிவபெருமான், அகத்திய முனிவரை தென்திசை செல்லுமாறு பணித்தார். அதன்படி பொதிகை மலை நோக்கி புறப்பட்ட அகஸ்தியர், வழியில் சந்தி விநாயகர் ஆலயம் அமைந்திருக்கும் இப்பகுதிக்கு அருகே வந்தபோது சூரியன் மறைந்து சந்தி (மாலை) நேரம் ஆகிவிட்டது. மாலை வேளையில் ஸ்ரீ விநாயகரை வழிபடும் வழக்கம் உள்ள அகஸ்தியர், இங்குள்ள கடம்பை நதிக்கரை மணலை எடுத்து விநாயகராகப் பிடித்து வைத்து வழிபட்டார். இப்படி எழுந்தருளியவரே இந்த சந்தி விநாயகர். சந்தி நேரத்தில் உருவானவர் என்பதால் இந்த கணபதியின் பெயர் சந்தி விநாயகர் ஆயிற்று. அருவுருவாக சிவலிங்கம் போல் காட்சி தரும் இவருக்கு வறுத்து அரைத்த பச்சரிசி மாவு மற்றும் கடலைப் பருப்பு ஆகியவற்றுடன் வெல்லப் பாகு கலந்து தயாரிக்கப்படும் நெய்வேத்தியம் படைக்கப்படுகிறது.

தினமும் ஆயிரக்கணக்கான தேங்காய் சூரைகாய்களாக உடைக்கப்படும் சிறப்பு பெற்ற இந்த கோயிலில், இன்னும் சில தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.
ஸ்ரீ கன்னி விநாயகர், ஸ்ரீ வல்லப விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்கை, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், சூரியன், சந்திரன், பைரவர், நடராஜ மூர்த்தி, சனீஸ்வர பகவான் என பல தெய்வங்களும் காட்சி தருகின்றனர். கோயிலின் வெளிப்பிராகாரத்தில் நவகிரகங்களுக்கு தனி சன்னிதி உள்ளது.

மாலை நேரத்தில் முனிவர்கள், தேவர்கள், சித்தர்கள் மற்றும் அகஸ்திய மாமுனிவர் போன்றோர் இங்கு வந்து விநாயகரை தரிசிப்பதாக ஐதீகமாதலால் மாலை 6 மணிக்கு நடைபெறும் தீபாராதனையின்போது கோயிலில் எக்கச்சக்கமான கூட்டம் நிரம்பி வழியும். அந்த நேரத்தில் சந்தி விநாயகரை வணங்கினால் வேண்டியது வேண்டியபடி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இங்கு விநாயகர் சதுர்த்தி பண்டிகை பத்து நாட்கள் திருவிழாவாக கொடி ஏற்றத்துடன் நடைபெறுகிறது. இன்று உத்ஸவர் விநாயகர் மிகவும் அழகாக அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா வருவார். சந்தி விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வணங்கினால் வேண்டும் வரங்களை வேண்டியபடியே அருள்வார்.

அமைவிடம்: திருநெல்வேலி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவிலும், புது பேருந்து நிலையத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும், நெல்லையப்பர் கோயிலில் இருந்து நடந்து செல்லும் தொலைவிலும் சந்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com