கந்த சஷ்டியில் முருகனால் வதம் செய்யப்பட்ட சூரபத்மன் பிறப்பு பற்றி தெரியுமா?

கந்த சஷ்டியில் முருகனால் வதம் செய்யப்பட்ட சூரபத்மன் பிறப்பு பற்றி தெரியுமா?

தேவர்களுக்கு எப்படி தேவேந்திரன் தலைவனோ, அதேபோல் அசுரர்களுக்கு அசுரேந்திரன் தலைவனாக இருந்தான். அசுரேந்திரன் மனைவியின் பெயர் மங்களகேசினி. அவர்களுக்கு சுரசை என்ற பெயரில் ஒரு மகள் இருந்தாள். அசுரேந்திரனுக்கு தனது மகளை நல்லவிதமாக வளர்க்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. அதனால் அவர்களின் குல குருவான சுக்ராச்சாரியாரிடம் அப்பெண்ணைக் கொடுத்து,  "இவளை நன்றாக வளர்த்து வாருங்கள்" என்று கூறினான்.

அதைக் கேட்ட சுக்ராச்சாரியாருக்கு மிகுந்த சந்தோஷமாகிவிட்டது. "நிச்சயம் உனது பெண்ணை நான் எல்லா கலைகளிலும் கற்றுத் தேறுமாறு வளர்த்து வருவேன்" என்று கூறி, அப்பெண்ணைப் பெற்றுக் கொண்டார். அசுர குரு என்பதால் அவர் அப்பெண்ணிற்கு பலவிதமான கலைகளையும் கற்றுக் கொடுத்தார். முக்கியமாக, மாயாஜாலங்கள் செய்வதற்குப் பயிற்சி கொடுத்தார். நல்ல விஷயங்களைத் தவிர, பிற விஷயங்களை அவளுக்கு நன்றாகவே போதித்தார். அதனால் அவள் கெட்ட புத்தியுடனும் அசுரத் தன்மையுடனும் மாயாஜாலங்களில் வல்லமை படைத்தவளாகவும் வளர்ந்தாள். சுரசை என்கிற அவளுடைய பெயரை மாயா என்று மாற்றினார்.

ஒரு நாள் சுக்ராச்சாரியார், மாயாவை கூப்பிட்டு,  "பெண்ணே, நான் சொல்லப்போவதை கவனமாகக் கேள்.  முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் காசியப முனிவர்தான் தந்தை.  நம் அசுர குலத்தில் அத்தனை அசுரர்கள் இல்லை.  நம் அசுரர் குலம் அழிந்து விடும் போலிருக்கிறது. ஆகையால் நீதான் அதற்கு உதவி செய்ய வேண்டும்" என்றார்.

"நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள். சிரமேற்கொண்டு அதை செய்து முடிக்கிறேன்" என்றாள் மாயா.

"காசியப முனிவர் காட்டில் தவம் செய்து கொண்டிருக்கிறார். அவர் தவத்தை கலைத்து எப்படியாவது  அவரை மணம் புரிந்து கொண்டு, அநேக குழந்தைகளைப் பெற்று எடுக்க வேண்டும். நம் அசுர குலம் தழைக்க வேண்டும்"  என்றார்.

அவருடைய ஆணையை ஏற்று, மாயா காட்டில் சுற்றித்திரிந்தாள். காசியப முனிவரைக் கண்டாள். ஏற்கெனவே அழகாக இருக்கும் அவள், இன்னும் தன்னை பேரழகியாக மாற்றிக் கொண்டாள். அவர் தவம் கலையுமாறு அங்கேயும் இங்கேயும் சுற்றித் திரிந்தாள். பலவிதமான ஒலிகளை எழுப்பி அவர் தவத்தைக் கலைக்க முற்பட்டாள்.

மாயாவின் உபத்திரவம் தாங்காமல் அவர் தவம் கலைந்தார். அந்தக் காட்டுப் பகுதியில் அழகான ஒரு பிரம்மாண்ட மாளிகையை எழுப்பினாள். தன்னை அதிரூப சுந்தரியாக மாற்றிக் கொண்டு மாளிகை வாயிலில் வலம் வந்தாள்.

மாயாவைக் கண்ட காசியப முனிவர், மாயாவின் அழகில் மயங்கினார். அவள் சென்ற இடமெல்லாம் பின் தொடர்ந்தார். தன்னை  மணம் புரிந்து கொள்ளுமாறு மாயாவிடம் கெஞ்சினார்.

ஆனால் மாயாவோ, கிழவனாக இருக்கும் காசியபரை மணந்துகொள்ள முடியாது என்றும் இளைஞனாக இருந்தால்தான் மணந்து கொள்வேன் என்றும் கூறினாள். அவளுக்காக எதையும் செய்யத் தயாரான காசியபர், தன்னை ஒரு இளைஞனாக மாற்றிக் கொண்டார். இருவரும் திருமணம் புரிந்து கொண்டார்கள்.

இதையும் படியுங்கள்:
சிக்கல்களைத் தீர்க்கும் சிங்காரவேலர்!
கந்த சஷ்டியில் முருகனால் வதம் செய்யப்பட்ட சூரபத்மன் பிறப்பு பற்றி தெரியுமா?

காசியபரும் மாயாவும் சந்தோஷமாகக் கூடியிருந்த இரவு வேளையின் முதல் ஜாமத்தில், 'பத்மாசுரன்' என்கிற அசுரன் பிறந்தான். பெற்றோர்களைப் போலவே மிகவும் அழகு வாய்ந்தவனாக இருந்தான். அப்பொழுது வியர்வையில் இருந்து முப்பதாயிரம் அசுரர்கள் தோன்றினார்கள். அடுத்து, இரண்டாம் ஜாமத்தில் மாயா,  பெண் சிங்கமாகவும் காசியபர் ஆண் சிங்கமாகவும் மாறி இருவரும் சந்தோஷமாக இருந்த தருணத்தில் அவர்களுக்கு சிங்க முகத்துடன், 'சிங்கமகாசுரன்' என்கிற அசுரன் பிறந்தான். அப்பொழுது வியர்வையில் நாற்பதாயிரம் சிங்கமுக அசுரர்கள் தோன்றினார்கள். மூன்றாம் ஜாமத்தில் மாயா பெண் யானையாகவும், காசியப்பர் ஆண் யானையாகவும் மாறினார்கள். அப்பொழுது அவர்களுக்கு யானை முகத்துடன் 'தாரகாசுரன்' என்கிற அசுரன் பிறந்தான். அப்பொழுது வியர்வையில் நாற்பதாயிரம் யானை முக அசுரர்கள் தோன்றினார்கள்.

நான்காம் ஜாமத்தில் மாயா பெண் ஆடாகவும், காசியப்பர் ஆண் ஆடாகவும் மாறிக்கொண்டார்கள். அவர்களுக்கு ஆட்டு முகத்துடன் அஜமுகி என்கிற பெண் ஒருத்தி பிறந்தாள். அப்பொழுது வியர்வையில் முப்பதாயிரம் ஆட்டுத் தலை கொண்ட அசுரர்கள் தோன்றினார்கள். இவ்வாறாக அவர்கள், கரடி, புலி, குதிரை, காண்டாமிருகம் போன்ற பல மிருகங்களின் உருவம் எடுத்து அசுரர்களை ஈன்றெடுத்தார்கள். மொத்தத்தில் இரண்டு லட்சம் அசுரர்கள் அவர்களால் அன்று உருவாக்கப்பட்டார்கள்.

ஐப்பசி வளர்பிறை சஷ்டி அன்று முருகப்பெருமானால் வதம் செய்யப்பட்ட பத்மாசுரன் என்கிற சூரபத்மன் தோன்றிய கதை இப்படித்தான். சூரசம்ஹாரம் நடந்த இந்நன்னாளே கந்த சஷ்டி திருவிழா என்று பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com