கார்த்திகை மாதம் என்றாலே உடனே நினைவுக்கு வருவது தீப திருவிழாதான். இந்த மாதத்தில் சிலர் எல்லா நாட்களுமே தங்கள் வீட்டில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். உண்மையிலேயே திருக்கார்த்திகைக்கு முதல் நாளான பரணி தீபம், திருக்கார்த்திகை தீபம், அதற்கு அடுத்த நாள் பாஞ்சராத்திர தீபம் என்று மூன்று நாட்கள் தீபம் ஏற்றுவதே முறையானதாகும்.
நம்முடைய வாழ்க்கையில் செய்த சின்னச் சின்ன பாவங்கள் கூட நம்மை விட்டுப் போவதற்காக வேண்டி ஏற்றக்கூடிய தீபம்தான் பரணி தீபமாகும். கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்தன்று ஏற்றக்கூடிய தீபம் பரணி தீபம். எமதர்ம ராஜனுக்கு மிகவும் பிரியமான பரணி நட்சத்திரத்தில் நாம் வாழும் காலமும், வாழ்க்கைக்குப் பிறகும் துன்பம் இல்லாமல் இருப்பதற்காக இந்த தீபம் ஏற்றப்படுகிறது.
இது பஞ்சபூத தத்துவத்தையும் உணர்த்துகிறது. உலகில் உள்ள பஞ்ச பூதங்களும், நம் உடலில் உள்ள பஞ்சபூதங்களும் ஒழுங்காக செயல்பட குறைந்தது ஐந்து விளக்குகளை நம் வீட்டு பூஜையறையில் நாம் ஏற்றி வைக்க வேண்டும். இந்த மாதம் பரணி நட்சத்திரம் டிசம்பர் 12ம் தேதி இரவு 8.30 மணிக்கு ஆரம்பித்து, அடுத்த நாள் 13ம் தேதி காலை 6.50 மணிக்கு பரணி நட்சத்திரம் முடிவடைகிறது. எனவே, 12ம் தேதி மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றுங்கள். கார்த்திகை தீபத்தன்று விளக்கேற்றுவது போல வீட்டின் நிலைவாசல் படியில் தொடங்கி வீடு முழுக்க தீபம் ஏற்றலாம்.
பரணி தீபம் ஏற்ற வேண்டிய முறை: திருக்கார்த்திகை முதல் நாளான பரணி தீபத்தன்று வாசலில் 2 தீபமும், பூஜையறையில் 5 தீபமும் வட்ட வடிவத்தில் ஏற்ற வேண்டும். பரணி தீபத்தில் நெய் ஊற்றி ஏற்றுவது சிறப்பாகும். இந்த 5 தீபமும் எல்லா திசைகளிலும் ஒளிப்படும்படி இருக்க வேண்டும்.
இந்த பரணி தீபத்தை நம் வீட்டில் ஏற்றினால் நம் முன்னோர்களின் ஆசி கிடைப்பதோடு, பஞ்ச பூதங்களை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். இறந்த பிறகு நம் ஆன்மா எம லோகத்திற்கு செல்லும்போது எமனின் வதம் இன்றி எந்த துன்பமும் இன்றி இருக்கலாம் என்பது ஐதீகம். எமதர்மனின் ஆசியும் பெற்று நம் சந்ததியினர் சீரும் சிறப்புமாக வாழ இந்த தீபத்தை கட்டாயம் ஏற்ற வேண்டியது அவசியமாகும்.