தண்ணீரையே பிரசாதமாகத் தரும் விநோத கோயில் பற்றி தெரியுமா?

Sri Rukmini Devi
Sri Rukmini Devihttps://panchadwaraka.wordpress.com

குஜராத் மாநிலம், துவாரகையிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஸ்ரீகிருஷ்ணரின் பிரியமான மனைவி ருக்மணி தேவியின் கோயில். 2500 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழைமையான கோயில் இது. இக்கோயிலின் தற்போதைய அமைப்பு 19ம் நூற்றாண்டை சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இங்குள்ள கோபுரங்களில் உள்ள சிலைகளை வைத்து இது பன்னிரண்டாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

இக்கோயிலில், ‘ஜல்தான்’ எனப்படும் தண்ணீர் பிரசாதம் கொடுக்கப்படுகிறது. கருவறையில் ருக்மணி தேவியின் பளிங்குச் சிலை உள்ளது. இவரது கரங்களில் சங்கு, சக்கரம், கதை மற்றும் பத்மம் ஆகியவை காணப்படுகின்றன. கோபுரத்தின் அடிவாரத்தில் உள்ள பேனல்களில் நாரதரும், கஜதாரங்களும் (யானைகள்) செதுக்கப்பட்டுள்ளன.

துவாரகேஸ்வரி ருக்மணி தேவியின் தரிசனம் முடிந்த பிறகே துவாரகை யாத்திரை நிறைவு பெற்றதாகக் கருதப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணரை விட்டு ருக்மணி தேவிக்கு தனி கோயில் அமைந்ததற்கான புராண வரலாறு ஒன்று உண்டு.

Sri Rukmini Devi Temple
Sri Rukmini Devi Templehttps://anu-rainydrop.blogspot.com/

ஒரு சமயம் ஸ்ரீ கிருஷ்ணர் துர்வாச முனிவரை விருந்திற்கு அழைக்க விரும்பி, ருக்மணி தேவியுடன் துர்வாச முனிவரின் ஆசிரமத்திற்கு சென்றார். துர்வாச முனிவர் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தான் வரும் தேரை நீங்கள் இருவர்தான் இழுக்க வேண்டும் என்று கூற, சம்மதித்த ஸ்ரீ கிருஷ்ணர், அவரை தேரில் அமர்த்தி ருக்மணியுடன் சேர்த்து தேரை இழுத்து வந்தார். வரும் வழியில் ருக்மணி தேவிக்கு தாகம் ஏற்பட்டு அதை ஸ்ரீகிருஷ்ணரிடம் கூற, அவர் தனது கால் கட்டை விரலால் பூமியை அழுத்தி கங்கை நீரை வரவழைத்து ருக்மணி தேவியின் தாகம் தணிக்கக் கொடுத்தார். ஸ்ரீகிருஷ்ணரும் நீரை பருகியவுடன் கோபம் கொண்ட துர்வாச முனிவர் அதிதியாக வந்த தன்னை உபசரிக்காமல் அவர்கள் மட்டும் நீர் அருந்தியதால் கோபம் கொண்டு இருவரும் பிரிந்து வாழ சபித்து விட்டார். துர்வாச முனிவரின் கோபமும் சாபமும் உலகறிந்த விஷயம். முனிவரின் சாபத்தால் இக்கோயில் அமைந்துள்ள பகுதியில் நல்ல தண்ணீரே கிடைப்பதில்லை. பாறைகள் அமைந்துள்ள பகுதியாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
அதிகமாக தண்ணீர் அருந்துவதால் இத்தனை நன்மைகளா?
Sri Rukmini Devi

கோயிலின் பிரசாதமாக தண்ணீர் வழங்கப்படுகிறது. இது மாதிரி எந்க்த கோயிலிலும் தண்ணீர் பிரசாதமாக வழங்கப்படுவது இல்லை என்பதால் இது வினோதமாகப் பார்க்கப்படுகிறது. இதனால்தான் ருக்மணி தேவிக்கு ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் சன்னிதி அமையாமல்  சற்றுத் தள்ளி அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com