திருப்பதி பெருமாள் கோயில் வாயில் படிக்கு, ‘குலசேகரப்படி’ எனப் பெயர் வந்தது எப்படித் தெரியுமா?

Tirupati Perumal
Tirupati Perumalhttps://x.com

திருப்பதி பெருமாள் கோயில் கருவறை படியைக் கடந்து தயிர்சாதம் நிறைந்த ஒரு மண் சட்டியைத் தவிர வேறு எந்த பிரசாதமும் உள்ளே செல்வதில்லை. இந்த கருவறை படியும் சரி, மண்சட்டி தயிர்சாதமும் சரி இரண்டின் பின்னணியில் பக்தி பூர்வமான வரலாறு ஒன்று உண்டு. கருவறை படி ‘குலசேகரப்படி’ என்றே  அழைக்கப்படுகிறது. யார் இந்த குலசேகரன்?

சேரநாட்டு திருவஞ்சைக் களத்தில் சேரர் குலத்தில் தோன்றிய அரசர் ஒருவர்தான் குலசேகரர். கொல்லி காவலன், கூடல் நாயகன், மாதவன் மாமன் என்றெல்லாம் சிறப்பித்துப் போற்றப்படும் குலசேகரர் பரந்தாமனிடம் கொண்ட பக்தியால் ஆழ்வாராகப் போற்றப்படுகிறார். பன்னிரண்டு ஆழ்வார்களின் ஒருவரான இவர் திருமாலின் கௌஸ்துப மாலையின் அம்சமாகத்  தோன்றியவர். சிறு வயது முதற்கொண்டே ராமபிரானின் மீதும் கிருஷ்ணரின் மீதும் அளவு கடந்த பக்தியை கொண்டிருந்தார். நல்லாட்சி புரிந்த இவருக்கு பாண்டிய மன்னர் தனது மகளைத் திருமணம் செய்து கொடுத்தார். வெற்றித் திருமகளை தன்னருகே வைத்திருந்த குலசேகரர் திருமாலின் அடியார்கள் மீது பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தார்.

ஒரு சமயம் இவர், ராமாயண உபந்நியாசம் கேட்டுக் கொண்டிருந்தபோது, ‘ராமபிரான் முனிவர்களின் தவத்தை கெடுக்கும் அரக்கர்களை அழிக்கப் புறப்படுகிறார்’ என்ற செய்தியை அறிந்ததும் ராமபிரானுக்கு உதவ உடனே தனது படைகளை ஆயத்தமாகும்படி கட்டளையிட்டார். அந்த அளவுக்கு ராமபிரானிடம் பக்தி செலுத்தினார். எப்போதும் இவர் திருமால் அடியார்களுடனேயே இருந்தால் நாட்டை நிர்வகிப்பது எப்படி? எனவே, இவரைச் சுற்றி இருந்த அடியவர்கள் கூட்டத்தை அப்புறப்படுத்த எண்ணி, இவரது அமைச்சர்கள் ஒரு சூழ்ச்சி செய்தனர்.

ஒரு சமயம் அரண்மனைக்கு வந்திருந்த அடியார்களுடன் குலசேகரர் பகவத் விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தபோது, அமைச்சர்கள் ஒரு நவரத்தின மாலையை ஒளித்து வைத்துவிட்டு, அந்த மாலையை அடியார்கள் திருடிக் கொண்டதாகக் குற்றம் சாட்டினர். அடியார்கள் மீது பழி சுமத்தியது பொறுக்க மாட்டாத குலசேகரர் ஒரு பானையை கொண்டு வரச் செய்து அதில் கொடிய விஷம் உள்ள கருநாகத்தை இடச் செய்தார்.

பிறகு, ‘ராமன் மீது ஆணையாக இந்தத் திருட்டை அடியார்கள் செய்திருக்க மாட்டார்கள் என்று நான் சொல்வது உண்மையானால் இந்த கருநாகம் என்னை தீண்டாதிருக்கட்டும்’ என்று சொல்லியபடி பானைக்குள் கையை விட்டார். கருநாகம் குலசேகரரை எதுவும் செய்யவில்லை. எனவே, நடந்தது அமைச்சர்களின் சூழ்ச்சிதான் என்பதைப் புரிந்து கொண்டு மகனுக்குப் பட்டம் சூட்டிவிட்டு அரச பதவியை துறந்துவிட்டு திவ்ய தேச யாத்திரையை மேற்கொண்டார்.

முதலில் திருவரங்கம் சென்றார். அங்கு பவித்ரோத்ஸவ மண்டபம் மூன்றாம் மதில் ஆலய திருப்பணிகளைச் செய்தார். திருவரங்கத்தில்தான் தனது அருமை மகளை ரங்கநாதருக்கு திருமணம் செய்து மகிழ்ந்தார். இன்றும்  சேரகுலவல்லியோடு ரங்கநாதர் காட்சி தருவதைக் காணலாம். பெரியாழ்வார் போலவே தனது மகளை அரங்கனுக்கு திருமணம் செய்தால் இவர், ‘மாதவன் மாமன்’ என்னும் பெருமையைப் பெற்றார். திருமாலின் மீது பக்தி கொண்டு 105 பாசுரங்களைக் கொண்ட, ‘பெருமாள் திருமொழி’ என்னும் பிரபந்தத்தை இயற்றினார். தலம் தோறும் சென்று திருமாலை வணங்கிப் பேறு பெற்றார்.

இதையும் படியுங்கள்:
தலையணை இல்லாமல் தூங்குவதன் நன்மைகளும் தீமைகளும் தெரியுமா?
Tirupati Perumal

எட்டு வைணவத் தலங்களை தரிசித்துப் பாடி, மங்களா சாசனம் செய்தார். திருமலை திருப்பதிக்கு சென்ற குலசேகர ஆழ்வார் வேங்கடேச பெருமாளின் அழகில் மயங்கி பாடல்களைப் பாடினார். ‘எனக்கு தேவ பரவி போன்ற உயர்ந்த பதவிகள் எதுவும் தேவையில்லை. திருவேங்கடத்துப் பொய்கையில் ஒரு மீனாகவோ அல்லது ஏதேனும் ஒரு தாவரமாகவும் பிறக்க மாட்டேனா’ என்றெல்லாம் ஏங்கிப் பாடியவர், ‘எப்போதும் திருவேங்கடவன் கருவறைப் படியாக இருந்து தினமும் பெருமானின் பவளவாய் அழகை தரிசிக்கும் பேறு கிடைக்காதா’ என்று ஏங்கிப் பாடினார். இவரது வேண்டுதல் பெருமானை உருக்கியது. அதன் காரணமாகவே குலசேகரரின் பெயரால் அந்தப் படி, இவரது பெயராலேயே, ‘குலசேகரப்படி’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த குலசேகர படியைக் கடந்து தயிர் சாதம் நிரம்பிய ஒரே ஒரு மண்சட்டியை தவிர வேறு எந்த வைர, வைடூரிய தங்க, வெள்ளி பாத்திரங்கள் கூட செல்வதில்லை. இப்படி, தயிர் சாதம் நிரம்பிய ஒரே ஒரு மண் சட்டி மட்டுமே குலசேகரப் படியைத் தாண்டி பெருமாளிடம் செல்வதன் பின்னணியில் ஒரு ஏழை மண் பாண்ட தொழிலாளி, பெருமானிடம் கொண்டிருந்த பக்தியின் மகத்துவம் அடங்கியுள்ளது.

பீமன் என்பவன் திருமலை பெருமாளின் மீது தீராத பக்தி கொண்டவன். இவன் செய்து தரும் மண் பாண்டங்கள் பெரும்பாலும் பூஜைக்குப் பயன்படுத்தப்பட்டன. பாண்டங்கள் செய்தது போக, மீதம் இருந்த மண்ணில் இவன் செய்து சூட்டும் மண் மலர்களை ஏற்றுக்கொண்ட பெருமாள் தொண்டைமான் அரசனின் தங்க மாலையைக் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. அத்தனை பேறு பெற்ற பீமனின் நினைவாகவே இன்றும் பெருமாளுக்கு மண் சட்டியிலேயே நெய்வேத்தியமாக தயிர் சாதம்  அளிக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com