அரகஜா
அரகஜா

அரகஜாவை எப்படிப் பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும் தெரியுமா?

Published on

தெய்வீக மூலிகைப் பொருட்களில், அரகஜா மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. இந்த அரகஜா நாட்டு மருந்து அல்லது பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில் சாதாரணமாகவே கிடைக்கப்பெறுகிறது. இதன் விலையும் மிகவும் மலிவுதான், 50 ரூபாய் கூட இருக்காது. ஆனால், இதனுடைய பலன்கள் மிகவும் மகத்துவமானதாக நம்பப்பட்டு வருகிறது. அரகஜா பயன்படுத்தி நம் குலதெய்வத்தை அழைக்க முடியும் என்பது சாஸ்திர நம்பிக்கை. அரகஜாவை வேறு எந்த தெய்வங்களுக்குப் பயன்படுத்த முடியும்? இதனுடைய அற்புதங்கள் என்ன? என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கோயில்களில் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படும் இந்த அரகஜாவை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். வாங்கும் பொழுது நாலைந்து டப்பாக்களாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒன்று உங்களுடைய தனிப்பட்ட தேவைக்கும், இன்னொன்று பூஜை அறைக்கு தனியாக வைத்து பயன்படுத்தவும் வேண்டும். மீதி கோயில்களுக்கு தானம் செய்யப் பயன்படும். அரகஜாவை நெற்றியில் இட்டுக் கொள்வதால் நம்முடைய சக்தி பன்மடங்கு அதிகரிக்கிறது. எந்த ஒரு காரியத்திலும் வெற்றி கிடைக்க அரகஜா நெற்றியில் இட்டுக் கொண்டு செல்லலாம்.

கோயில்களில் அபிஷேகப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கும்பொழுது அரகஜா சேர்த்து வாங்கிக் கொடுப்பது கூடுதல் பலன்களைக் கொடுக்கும். அரகஜாவை வைத்து குலதெய்வத்தை எப்படி வீட்டிற்கு வரவழைக்க வேண்டும் தெரியுமா? அரகஜா மூலம் மிக மிக எளிமையான முறையில் நம்முடைய குலதெய்வத்தை வீட்டிற்கு வரவழைக்க முடியும்.

நல்ல நாளில் வீட்டை சுத்தம் செய்து கொண்டு, பூஜை அறையில் ஒரு பித்தளை அல்லது செம்பு சொம்பில் தண்ணீரை முழுவதுமாக நிரப்பிக்கொள்ள வேண்டும். அதற்கு மஞ்சளுடன் அரகஜாவை குழைத்து பொட்டு வைக்க வேண்டும். அதன் பின் நைவேத்தியம் படைத்து, குலதெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டால் குலதெய்வம் அந்த தண்ணீரில் நிச்சயமாக வந்து விடுவார் என்பது ஐதீகம். குலதெய்வம் தெரியாதவர்கள் அரகஜாவை பயன்படுத்தி குலதெய்வத்தை வீட்டிற்கு வரவழைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
அடிக்கடி ஞாபக மறதி வருகிறதா? இந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம் ஜாக்கிரதை!
அரகஜா

மேலும், சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகங்களில் கட்டாயம் அரகஜா இடம் பெறுகிறது. அதேபோல காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி நாட்களில், ராகுகால வேளைகளில் அரகஜா பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. ஒன்பது வியாழக்கிழமைகளில் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள்ளாக காலபைரவர் பூஜைக்காக வெற்றிலை, பாக்கு, தேங்காய், பூ, பழத்துடன் சேர்த்து இந்த அரகஜா வாங்கிக் கொடுத்து வந்தால் வருமானத் தடை நீங்கும். வேலை இல்லாதவர்கள், நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு, மனதிற்கு பிடித்த வேலை அமையும். தொழில், வியாபாரம் சூடுபிடிக்கத் துவங்கும்.

வீட்டில் சாமி படங்களுக்கு மஞ்சள், குங்குமம் வைக்கும்பொழுது, மஞ்சளுடன் சேர்த்து அரகஜாவை குழைத்து வைப்பது விசேஷமானது. குறிப்பாக, மகாலட்சுமி படத்திற்கு இதுபோல் செய்து வைப்பது செல்வத்தை அதிகரிக்கச் செய்யும். வாசனைமிக்க அரகஜாவை பயன்படுத்தும்பொழுது வீடு, கோயில் போன்ற வாசனையைக் கொடுக்கும். இதனால் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக தங்குவாள் என்பது நம்பிக்கை. பெண் பார்க்க செல்பவர்கள், நேர்காணலுக்கு செல்பவர்கள், வெற்றியை நோக்கி பயணிப்பவர்கள் வீட்டை விட்டு கிளம்பும் முன் அரகஜாவை நெற்றியில் வைத்துக் கொண்டு சென்றால் நிச்சயமாக வெற்றி உண்டாகும்.

logo
Kalki Online
kalkionline.com