சீதன வெள்ளாட்டி தெரியுமா?

சீதன வெள்ளாட்டி தெரியுமா?

ந்தக் காலங்களில் பெண்களைத் திருமணம் செய்து கொடுத்து புகுந்த வீட்டுக்கு அனுப்பும்பொழுது நிறைய சீர்வரிசைகளோடு அனுப்புவார்கள். சிலர் சீர்வரிசைகளோடு தங்களது பெண்ணுக்கு உதவியாக, வீட்டு வேலைகளைச் செய்வதற்கு ஒரு வேலைக்காரப் பெண்ணையும் அனுப்புவார்கள். இப்படி வீட்டு வேலைகளைச் செய்வதற்கு செல்வோர்களை, ‘சீதன வெள்ளாட்டி’ என்பர்.

திருவரங்கத்தில் வைணவத் தொண்டு புரிந்து வந்தவர் ஸ்ரீ ஆளவந்தார் ஸ்வாமிகள். இவர் ஸ்ரீ ராமானுஜரின் மானசீக குரு ஆவார். ஸ்ரீ ஆளவந்தாரின் பிரதான சிஷ்யர் பெரிய நம்பி ஆவார். இவரது மகள் அத்துழாய். இவள் திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்குச் செல்லும்போது, தன்னால் முடிந்த சீதனப் பொருட்களோடு தனது மகள் அத்துழாயை அனுப்பி வைத்தார் நம்பி. இந்த சீதனப் பொருட்களில் திருப்தி அடையாத அத்துழாயின் மாமியார், குறையுடன் தனது மருமகளோடு காலத்தை ஓட்டினாள். தாய் பாசம் அறியாத அத்துழாய், மாமியாரை தனது தாய் போல எண்ணி குடும்பத்தில் இருந்து வந்தாள். நாட்கள் கடந்தன.

ஒரு நாள் காவிரியில் நீராட, அக்கம்பக்கத்து தோழிகள் இல்லாததால், தனது மாமியாரை துணைக்கு அழைத்தாள் அத்துழாய். இத்தனை நாள் மனதில் பொருமிக் கொண்டிருந்த மாமியார், வார்த்தைகளால் அத்துழாயை சுட்டாள். “என்னை ஏன் அழைக்கிறாய்? உன் தந்தை அனுப்பிய சீதன வெள்ளாட்டியை கூட்டிப்போயேன்” என்றாள். மாமியாரின் மனம் அறிந்த அத்துழாய் பொறுமை காத்தாள்.

ஒரு நாள் மாமியார் வேலையாக பக்கத்து கிராமத்துக்குச் சென்ற சமயம், அவள் அனுமதியோடு தனது தந்தையைக் காணச் சென்றாள் அத்துழாய். தந்தையிடம், தனது வருத்தத்தைக் கூறினாள். பெரிய நம்பி, அந்த விஷயத்தை ஸ்ரீ ராமானுஜரிடம் உரைத்தார். ஸ்ரீ ராமானுஜர் தனது ஆச்சாரிய குருவான பெரிய நம்பிக்கு உதவ எண்ணம் கொண்டார். உடனே ஸ்ரீ ராமானுஜர் தனது பிரதான சிஷ்யன் முதலியாண்டானை அழைத்து, “அத்துழாய் புகுந்த வீட்டுக்குச் செல்லும்போது நீ அவளுடன் சீதன வெள்ளாட்டியாகச் செல்” என்று கூறினார்.

முதலியாண்டான் ஸ்வாமி அத்துழாயுடன் அவள் புக்ககம் சென்றபோது, அங்கு அவள் மாமியார் கிராமத்திலிருந்து திரும்பவில்லை. முதலியாண்டான் சென்றவுடனேயே தனது வேலைகளை ஆரம்பித்துவிட்டார். வீட்டின் ஒட்டடைகளை நீக்கி, வீட்டைக் கழுவி சுத்தம் செய்தார். வீட்டைச் சுற்றிலும் இருந்த குப்பை கூளங்களை நீக்கி தூய்மை செய்தார். துணிமணிகளைத் துவைத்து, உலர்த்தி காய்ந்ததை மடித்து வைத்து… எனப் பல வேலைகளில் அத்துழாய்க்கு உதவி புரிந்தார்.

மூன்று நாட்கள் கழித்து வந்த மாமியார், தனது வீடும் சுற்றுப்புறமும் வெகு நேர்த்தியாக பளிச்சென இருப்பதைக் கண்டு ஆச்சரியமுற்றாள். வீடு தெய்வீக மணத்தோடு இருந்ததைக் கண்டு மகிழ்ந்தாள். வீட்டுக்குள் நுழைந்த மாமியார், வீட்டின் பின்பகுதியில் முதலியாண்டான் பாத்திரங்களைச் சுத்தம் செய்வதைக் கண்டு அதிர்ந்தாள். முதலியாண்டான், ஸ்ரீ ராமானுஜரின் சிஷ்யர் என்பதை அவள் அறிவாள். சீதன வெள்ளாட்டியாக அவர் வந்துள்ளதை அத்துழாய் தெரிவித்ததும், கண்ணீர் மல்க, முதலியாண்டான் திருவடிகளில் விழுந்து மன்னிக்கும்படி வேண்டினாள் மாமியார். ‘ஸ்ரீ ராமானுஜரின் உத்தரவின்பேரில் தாம் வந்துள்ளதாகத் தெரிவித்த முதலியாண்டான் ஸ்வாமி, ஆச்சாரியார் உத்தரவு கொடுத்தால்தான் தாம் செல்ல முடியும்’ என்று கூறிவிட்டார்.

உடனே மாமியார் திருவரங்கம் சென்று, ஸ்ரீ ராமானுஜரின் திருவடிகளை வணங்கி, முதலியாண்டான் ஸ்வாமியை திரும்ப அழைக்கும்படி வேண்டினாள். பெரிய நம்பியின் அனுமதியோடு, முதலியாண்டானை திருவரங்கம் திரும்பும்படி கூறினார் ஸ்ரீ ராமானுஜர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com