சிவபெருமானின் பல அற்புதத் திருக்கோலங்களில் சோமாஸ்கந்தர் வடிவம் மிகவும் சிறப்பானது. சிவபெருமானும் பார்வதி தேவியும் குழந்தை கந்தபெருமானுடன் இணைந்து காட்சி அளிக்கும் திருக்கோலமே சோமாஸ்கந்தர் வடிவமாகும். இவ்வடிவம் தமிழகத்துக்கே உரிய சிறப்பாகும்.
சிவபெருமான் அமர்ந்த கோலத்தில் பார்வதி தேவியின் பக்கமாக சற்றே முகம் சாய்த்துப் பார்த்தவண்ணம் இருக்க, தனது இடது காலை மடித்து வைத்த நிலையிலும் வலது காலை தொங்க விட்ட நிலையிலும் ஜடாமகுடம் தரித்து அணிகலன்களுடன் பட்டாடையும் புலித்தோலும் அணிந்து காட்சியளிப்பார். சதுர்புஜத்தோடு தனது மேல் இரு கரங்களில் மழுவும் மானும் ஏந்தியிருப்பார். ஈசனின் முன் வலது கரம் அபய முத்திரையினையும் முன் இடது திருக்கரம் வரத முத்திரையோடு காட்சியளிக்கும். சிவபெருமானுக்கு இடது புறத்தில் பார்வதி தேவி வலது காலை மடக்கியும் இடது காலைத் தொங்கவிட்ட வண்ணம் இடது திருக்கரத்தினை ஆசனத்தில் ஊன்றியபடியும் வலது திருக்கரத்தில் தாமரை மலரினை ஏந்தியபடியும் பூரண அணிகலன்களை அணிந்து காட்சி தருவார். சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இடையில் முருகப்பெருமான் குழந்தை வடிவில் நடனமாடிய கோலத்தில் இடது திருக்கரம் பழத்தையும் வலது திருக்கரம் சூசி முத்திரையைக் காட்டியபடியும் காட்சி தருவார்.
பழைமையான சிவாலய கருவறையின் பின்பக்கச் சுவற்றில் சிற்ப வடிவத்திலோ, புடைப்புச் சிற்ப வடிவத்திலோ அல்லது ஓவிய வடிவத்திலோ சோமாஸ்கந்தரை தரிசிக்கலாம். பல்லவ மன்னர்களே சோமாஸ்கந்தர் வடிவத்தைப் புடைப்புச் சிற்பமாக கோயில் கருவறையின் பின்பக்கச் சுவற்றில் வடிவமைத்தவர்கள். லிங்கம் மூல சொரூபமாய்த் திகழ, சிவபெருமான் பார்வதி தேவி முருகன் ஆகிய தெய்வங்கள் சோமாஸ்கந்தர் வடிவத்தில் லிங்கத்தின் பின்புறம் அமைந்து அருளுவார்கள்.
சிவாலய உத்ஸவக் காலங்களில், ‘பஞ்ச மூர்த்தி புறப்பாடு’ என்றொரு உத்ஸவம் நடைபெறுவது வழக்கம். விநாயகப்பெருமான், முருகப்பெருமான், சோமாஸ்கந்தர், அம்பிகை மற்றும் சண்டேஸ்வரர் ஆகியோர் பஞ்ச மூர்த்திகளாக வீதியுலா வருவார்கள். சத்து, சித்து மற்றும் ஆனந்தம் இவையே சச்சிதானந்தம் ஆகும். சத்து சிவபெருமானையும், சித்து பார்வதி தேவியையும் ஆனந்தம் முருகப்பெருமானையும் குறிப்பதாகும். இந்த மூன்று தத்துவங்களின் வடிவமே சோமாஸ்கந்தர் வடிவமாகும்.